காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு இளம் தம்பதியரின் மகள் நிகாரிகா அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ரூ. 65 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். சிறுமியின் பெற்றோர் பல வழிகளில் போராடி ரூ. 65 லட்சத்தை திரட்டி வெளிநாட்டில் இருந்து மருந்துகளை வரவழைத்தனர். அந்த மருந்துகளுக்கு ரூ. 7 லட்சம் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர்களால் அதற்கான பணத்தை திரட்ட முடியவில்லை. அவர்கள் என்னை அணுகினர். இதுதொடர்பாக கடந்த மார்ச் 15ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் பதில் கிடைக்கவில்லை. இந்த முறை நேரடியாக மத்திய நிதியமைச்சரிடம் தொலைபேசியில் பேசினேன். மும்பை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருந்துகள் விரைவில் காலாவதியாகிவிடும். நீங்கள் உதவினால் சிறுமியை உயிர்பிழைக்க வைக்க முடியும் என்று கூறினேன். இதை கேட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருந்தினார். அடுத்த அரை மணி நேரத்தில் அமைச்சரின் தனிச் செயலாளர் செர்ன்யா பூட்டியா என்னை தொடர்பு கொண்டார். மத்திய நேரடி வரிகள், சுங்க ஆணைய தலைவரிடம் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிவிட்டார் என்றார். அதன்படி அன்றைய தினமே, இரவு 7 மணிக்கு மருந்துகள் மீதான ரூ. 7 லட்சம் ஜி.எஸ்.டி வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி வரிக்கு விலக்கு அளித்து நிதியமைச்சகம் குழந்தைக்கு மறுபிறவி அளித்திருக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்கள் தான், நான் அரசியலில் நீடித்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. நிதியமைச்சர், தனிச் செயலாளர், நேரடி வரிகள், சுங்க ஆணைய தலைவர் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். மனிதாபிமானம் மீதான எனது நம்பிக்கையை நீங்கள் (நிர்மலா சீதாராமன்) மீண்டும் உறுதி செய்துள்ளீர்கள். ஜெய் ஹிந்த்” என தெரிவித்துள்ளார்.