ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, விவசாயப் பணியும் செய்து சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, ராமன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
கிருஷ்ண கௌடா – லட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக, 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி, ஆன்மீக பூமியான நீலகிரி மாவட்டம் தொதநாடு சீமெ அணிக்கொரை கிராமத்தில் பிறந்தார், ராமன் ஜி. அவருடன் பிறந்தவர்கள் ஒரு தங்கை. தந்தை விவசாயம் செய்து வந்தார்.
தனது பள்ளிப் படிப்பை அணிக்கொரை அரசுப் பள்ளியில் படித்த பிறகு, ஊட்டியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பொருளாதாரப் பிரிவில் இளங்கலை (பி.ஏ எகனாமிக்ஸ்) பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து உருளைக்கிழங்கு, கேரட், தேயிலை போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார்.
நல்லொழுக்கம் கற்பிக்கும் தேசபக்தி இயக்கத்தில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில், எதில் சேரலாம் என தேடிய போது, விசுவ இந்து பரிஷத்தின் “ஹிந்து ஒற்றுமை மாநாடு” ஊட்டியில் நடைபெற்றது. அதில் சூரிய நாராயணராவ் ஜியின் வழிகாட்டுதல் இருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராமன் ஜி, அருமையான முறையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டின் மூலமும், சூரி ஜியின் சிறப்புரையாலும் கவரப்பட்டு, இது போன்ற நல்லதொரு அமைப்பில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில், சங்கத்தில் சேர பல முயற்சிகள் மேற்கொண்டார்.
அந்தத் தேடலின் போது, பவித்ரானந்தா சுவாமிகள் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாக அப்போதைய ஜில்லா பிரச்சாரக்காக இருந்த பாரத மாதா மோகன் ஜியின் அறிமுகம் கிடைத்து, தான் நினைத்தபடியே சங்கத்தில் சேர்ந்தார். 1985 ஆம் ஆண்டில், முதன் முதலாக ஷாகாவிற்கு சென்றார். அதனைத் தொடர்ந்து சங்கப் பொறுப்பேற்று, செயல்படத் தொடங்கினார். 1986 ஆம் ஆண்டு, தாலுகா கார்யவாஹ் ஆனார். ஊட்டிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு சங்க வேலையை கொண்டு செல்வதில் தீவிரமாக ஈடுபட்டார். 1988ல், டாக்டர் ஜி நூற்றாண்டு விழாவின் போது, ஜில்லாவில் உள்ள எல்லா பகுதிக்கும் சென்று, எல்லா இடங்களிலும் குழு அமைத்து, விழாவை சிறப்பாக நடத்த பெரும் முயற்சி எடுத்தார்.
ஜில்லா கார்யவாஹ், ஜில்லா சேவா பிரமுக் என பல பொறுப்புகள் வகித்த பின்னர், 2000 ஆம் ஆண்டில் மும்பையில் சங்க ஏற்பாட்டில் நியூரோ தெரபி கற்றார். சேவா பாரதி சார்பாக ராமநாதபுரம், திருச்செந்தூர், நாகர்கோவில் என பல இடங்களில் நியூரோ தெரபி முகாமை நடத்தி, மக்கள் நலன் பெற சிகிச்சை மேற்கொண்டார்.
நீலகிரி மலையில் வாழும் வாழ்க்கை முறையை அறிந்து, அவர்களுடன் நெருங்கிப் பழகி அவர்கள் மத்தியில் சங்க வேலையை கொண்டு செல்வதில் பெரும் முயற்சி எடுத்தார். சங்க வேலையின் மூலமாகவும், சேவா பாரதி மூலமாகவும் சங்கப் பணியை விஸ்தரிப்பு செய்தார். கீழ்கௌட்டி, நஞ்சநாடு, கோத்தகிரி, காந்தநாடு போன்ற பகுதிகளில் சங்க வேலையை விரிவாக்கம் செய்தார். படுகர் சமுதாய மக்கள் இருக்ககூடிய கிராமங்களில் சங்க வேலையை கொண்டு சென்றார்.
சங்கப் பயிற்சி முகாமில் “இடர்பாடுகள் வரும் போது எப்படி நடந்து கொள்வது” என்பதைப் பற்றி பலமுறை பயிற்சி அளித்து உள்ளார். 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர், சேவைகள் செய்வதில் நிறைய பணிகள் செய்தார்.
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக செயல்படும் சங்க அமைப்பான சக்ஷத்திலும் சில ஆண்டுகள் பணி புரிந்தார். நடக்க முடியாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு “செயற்கை கால்” வழங்க முயற்சிகள் மேற்கொண்டார். கொரோனா பரவலின் போது, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, சங்க ஏற்பாட்டில் மருத்துவ சேவைகளும், பொருளாதார உதவிகளும் கிடைக்க செய்தார்.
“கிராம விகாஸ்” பொறுப்பில் இருந்தபோது, கிராமங்கள் தோறும் பயணம் செய்து, கிராமங்கள் முன்னேற்றம் அடையவும், சுயசார்பு அடைய இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதிலும், மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய, விவசாயிகள் மத்தியில் வேலை செய்தார்.
முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை 1986 ஆம் ஆண்டு வடலூரிலும், இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை 1996 ஆம் ஆண்டு சேலத்திலும், மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை 1997 ஆம் ஆண்டு நாக்பூரிலும் முடித்தார்.
ராமன் ஜியின் வீட்டிற்கு சங்கத்தின் மூத்த அதிகாரிகளான சூரி ஜி, ரங்கசாமி தேவர் ஜி, இராம கோபாலன் ஜி, இல கணேசன் ஜி, ஸ்ரீ கணேசன் ஜி, சுதாகர் ஜி, சண்முகநாதன் ஜி, வன்னியராஜன் ஜி என ஷேத்ர, பிராந்த அதிகாரிகள் பலரும் வருகை புரிந்து உள்ளனர்.
1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி, ஆலுமணி அம்மாளை திருமணம் செய்த ராமன் ஜிக்கு சென்னம்மாள், கௌரி என இரண்டு மகள்களும், மகாலிங்கம் என்ற ஒரு மகனும் உள்ளனர். இரண்டாவது மகள் கௌரி அவர்கள் சங்கத்தின் சேவா பாரதி, சமிதி அமைப்பில் பொறுப்பில் இருந்து உள்ளார். மகன் மகாலிங்கம் ஜி, இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்து உள்ளார். தற்போது தந்தை வழியிலேயே விவசாயம் செய்து வருகிறார்.
நல்லதொரு தேசபக்தி அமைப்பில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் பலவற்றைத் தேடி, சங்கத்தை பற்றி அறிந்து கொண்டு, சங்கத்தில் சேர்ந்து சங்கப் பணியுடன் சமுதாயப் பணியும் செய்து, ஊட்டியில் சங்கத்தை விஸ்திரித்த ராமன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.
அ. ஓம்பிரகாஷ்