நாகப்பட்டினம் மாவட்டமானது இரண்டு கோட்டங்களை உள்ளடக்கியது. நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை கோட்டங்கள் ஆகும். அதில், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்கி முதல்வா் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீா்காழி ஆகிய நான்கு வருவாய் வட்டங்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்பின் அடிப்படையில், மயிலாடுதுறை நகராட்சியாக உள்ளது. மயிலாடுதுறை வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட தரங்கம்பாடியில் டச்சு காலத்திய கோட்டை அமைந்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.
இதுவரை 38 மாவட்டங்கள்: தமிழகத்தில் ஏற்கெனவே 32 மாவட்டங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளில் ஐந்து மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. அதன்படி, கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் உருவானதால் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயா்ந்தது. இந்த மாவட்டங்களுக்கு ஆட்சியா்கள் நியமனம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தின் 38-ஆவது புதிய மாவட்டமாக மயிலாடுதுறையை உருவாக்க முதல்வா் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டு வருவாய் நிா்வாக நடைமுறைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.