நவராத்திரி பண்டிகை என்ற சக்தி வழிபாடு

நவராத்திரி என்பது மகிஷாசுரனைத் துர்க்கை வென்றதைக் கொண்டாடும் ஒரு விழா. மகாபாரதத்திலும் அதர்மத்தின் வடிவமாக இருந்த கெளரவர்களை, தர்மத்தின் வடிவமான பாண்டவர்கள் வெல்வதற்குத் தேவியின் சக்தி துணை நின்றது என்று இதிகாசங்கள் சொல்கிறது. நவராத்திரியின் முதன்மையான முக்கியத்துவம், பிரபஞ்சத்தை இயக்கும் ‘ஆதிசக்தி’ எனப்படும் பெண் தெய்வ வழிபாடாகும்.
சக்தி (அம்பிகை) அன்னையின் ஒன்பது வெவ்வேறு வடிவங்களை ஒன்பது நாட்கள் போற்றி வழிபடும் மிக முக்கியமான ஹிந்துப் பண்டிகையாகும். ‘நவ’ என்றால் ஒன்பது, ‘ராத்திரி’ என்றால் இரவுகள் என்று பொருள். முதல் 3 நாட்கள் துர்கா தேவியின் குணமான வீரம், தைரியம் மற்றும் பயமின்மையைக் குறிக்கிறது. நம்மிடம் உள்ள தீய குணங்களையும், அறியாமையையும் அழிக்க துர்க்கையை வழிபடுகிறோம்.
அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மி தேவியின் சிறப்பு அம்சமான செல்வம், வளம், அமைதி மற்றும் மங்களகரமான வாழ்வைக் குறிக்கிறது. மனத் தூய்மையையும், நற்குணங்களையும் பெற லக்ஷ்மியை வழிபடுகிறோம்.
கடைசி 3 நாட்கள் அறிவின் மூலமான சரஸ்வதி தேவியை வழிபட ஏதுவாக அமைந்துள்ளது. கல்வி, கலை, ஞானம் மற்றும் கூர்மையான புத்தியைக் குறிக்கிறது. வாழ்வின் உண்மையான அறிவைப் பெற சரஸ்வதியை வழிபடுகிறோம்.
மகாபாரதக் காலத்திலிருந்தே நவராத்திரி வழிபாடு “சக்தி வழிபாடு” மற்றும் “தர்மத்தின் வெற்றி” என்ற தத்துவார்த்தப் பின்னணியிலேயே முக்கியத்துவம் பெற்றது. துன்பகரமான சூழல்களில் மன வலிமை பெறவும், அதர்மத்தை எதிர்த்துப் போராடும் வீரத்தைப் பெறவும் பாண்டவர்கள் தேவியை வழிபட்டனர். நவராத்திரி விழாவின் ஆழமான ஆன்மிக மற்றும் தர்ம நெறிகளை நமக்கு அது உணர்த்துகிறது.
பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசத்தையும் ஓராண்டு அஞ்ஞாதவாசத்தையும் தொடங்கும் முன்னர் தர்மர் துர்கா தேவி நோக்கி வழிபட்டு தீவிரமாக பிரார்த்தனை செய்தார்.
பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் முடிந்து தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்திலிருந்து மீட்டெடுத்து வெற்றிப் பாதையில் அடிஎடுத்து வைத்த நாள் விஜயதசமி ஆகும். இன்றும் விஜயதசமி அன்று வன்னி மர வழிபாடு தொடர்வதற்கு காரணம் பாண்டவர்கள் மரத்தின் கீழ் நின்று ஆயுதங்களை பாதுகாக்கவும் வெற்றி பெறவும் தேவியை வழிபட்டதே ஆகும். இத்தகைய சிறப்பு அம்சங்களை கொண்ட நவராத்திரி விழா மக்களின் வாழ்வியல் முறைக்கு இன்னும் சிறப்பு சேர்ப்பதை பார்ப்போம்.
சரத் காலத்தில் (புரட்டாசி மாதம்) வரும் இந்த நவராத்திரி காலம், பருவநிலை மாற்றத்தின் போது உடலையும், மனதையும் தூய்மைப்படுத்த ஏற்ற காலமாகும்.
ஒன்பது நாட்கள் உபவாசம் இருந்து மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை ஆற்றல் பெருகுகிறது.
கொலுவில் ஓரறிவு உயிரினங்கள் முதல் ஆறறிவு மனிதர்கள் மற்றும் தெய்வங்கள் வரை வரிசையாக பொம்மைகளை வைப்பது, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியையும், மனிதன் தன் நற்பண்புகளால் இறை நிலையை அடைய முடியும் என்பதையும் உணர்த்துகிறது. இது மிக சிறப்பான ஒன்றல்லவா…!!
சுற்றத்தாரையும் நண்பர்களையும் வீட்டிற்கு அழைத்துத் தாம்பூலம் வழங்கி மகிழ்வது, சமூக உறவுகளை வலுப்படுத்துகிறது.
சங்கீதம், பரதநாட்டியம், நாடகம் போன்ற நுண்கலைகளைப் பயில்பவர்கள் மற்றும் கலைஞர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தவும் இறைவனுக்குச் சமர்ப்பிக்கவும் இந்நாட்கள் சிறந்த வாய்ப்பை அளிக்கின்றன.
நவராத்திரியின் உச்சக்கட்ட நாளான விஜயதசமி, “வெற்றி தரும் நாள்” எனக் கருதப்படுகிறது. இந்நாளில் தொடங்கப்படும் கல்வி (வித்யாரம்பம்), தொழில், புது முயற்சிகள் மற்றும் கலைப் பயிற்சிகள் அனைத்தும் தடைகளின்றி வெற்றிகரமாக வளரும் என்பது ஐதீகம். மானிட குலத்துக்கு எல்லா வழிகளிலும் உதவும் பாரதம் ஒரு கர்மபூமி என்பதற்கு இதைவிட சிறந்த சான்று உண்டோ..!!!
குலசை தசரா விழா என்பது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம். ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் திருக்கோவிலில் நடைபெறும் நவராத்திரி தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக, மிகப்பிரம்மாண்டமாக பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் இரண்டாவது பெரிய தசரா விழா இதுவே ஆகும்.
லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடி, மேள தாளங்கள் மற்றும் கரகாட்ட இசைக்கேற்ப ஆடியபடி அம்மனை வழிபடும் இந்தக் காட்சி ஆன்மிக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இணையற்ற அனுபவமாகும்.
தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 41 நாட்கள் அல்லது 11 நாட்கள் கடும் விரதம் மேற்கொள்வர். திருவிழா தொடங்கும் நாளன்று கோவிலில் காப்பு கட்டி, தங்களின் நேர்த்திக்கடனைத் தொடங்குவார்கள்.
விரதமிருக்கும் பக்தர்கள் காளி, சிவன், விஷ்ணு, ஆஞ்சநேயர், குறவன்- − குறத்தி, ராஜா, போலீஸ் போன்ற பல்வேறு வேடங்களை அணிகின்றனர். இதில் காளி வேடம் அணிவது மிகவும் புனிதமானதாகவும், கடினமானதாகவும் கருதப்படுகிறது.
காளி வேடமிடுபவர்கள் கடும் விரத முறைகளைப் பின்பற்றி, ஊர் ஊராகச் சென்று தர்மம் (காணிக்கை) பெற்று, அதை கோவிலில் சமர்ப்பிப்பார்கள்.
10-ஆம் நாள் நள்ளிரவில், வங்கக் கடலின் கரையோரமுள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக பிரம்மாண்டமான மகிஷாசுரசம்ஹாரம் நடைபெறும்.
அடுத்து, கர்நாடக மாநிலத்தின் பண்பாட்டுத் தலைநகரான மைசூரில் நடைபெறும் மைசூர் தசரா (Mysore Dasara), இந்தியாவின் மிகப்பிரம்மாண்டமான அரச பரம்பரைத் திருவிழாக்களில் ஒன்றாகும்.
‘நாடஹப்பா’ (மாநிலத் திருவிழா) என்று அழைக்கப்படும் இந்த விழா 10 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
சாமுண்டி மலையில் எழுந்தருளியுள்ள சாமுண்டேஸ்வரி தேவி, மகிஷாசுரன் என்ற அசுரனை வதம் செய்து வெற்றிகொண்ட நாளே தசரா பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
1610-ஆம் ஆண்டில் விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, உடையார் வம்சத்தின் ராஜ உடையாரால் இத்திருவிழா மைசூரில் முறைப்படி தொடங்கப்பட்டது. தசராவின் 10-ஆம் நாளான விஜயதசமியன்று நடைபெறும் யானைகளின் ஊர்வலமே விழாவின் உச்சக்கட்ட நிகழ்வாகும். அலங்கரிக்கப்பட்ட தலைமை யானை, 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியில் (Golden Howdah) சாமுண்டேஸ்வரி அம்மன் விக்ரகத்தைச் சுமந்து அரண்மனையிலிருந்து மண்டபம் வரை செல்லும்.
விழா நாட்களில் தினமும் மாலை நேரத்தில் மைசூர் அரண்மனை முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல ஒளிரும்.
மன்னர் வம்சத்தைச் சேர்ந்த தற்போதைய வாரிசு, பாரம்பரிய உடையணிந்து ரத்தினச் சிம்மாசனத்தில் அமர்ந்து நடத்தும் ரகசிய அரசவை நிகழ்வு இன்னமும் பாரம்பரியமாகத் தொடர்கிறது.
விஜயதசமி இரவில் மண்டபத்தில் காவல்துறை மற்றும் ராணுவ வீரர்களின் கண்கவர் தீப்பந்த அணிவகுப்பு, குதிரையேற்றச் சாகசங்கள் நடைபெறும்.
மைசூர் தசரா விழா, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. மேற்கு வங்கத்தில் தெருவுக்கு தெரு பந்தல் அமைத்து, ‘துர்கா மண்டலி’கள் மூலம் நடத்தப்படும் துர்கா பூஜைகள் உலக பிரசித்திப் பெற்றவை. குஜராத் மாநிலத்தில் நவராத்ரி என்றாலே, நமது நினைவுக்கு வருவது ‘டாண்டியா’ நடனம் தான். எல்லா மாநிலங்களிலும் நடைபெறும் நவராத்திரி தேசியத்தை இணைக்கும் ஒரு முக்கிய பண்டிகை என்பதை நாம் எப்போதும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்!
எனவே, நாமும் வீடுகளில் நம் நலம் காக்கும் சக்தி தெய்வங்களை வழிபட்டு, வருங்கால நம் சந்ததியினருக்கும் அதன் பெருமைகளை சொல்லிக் கொடுத்து பண்பாட்டையும், தேச ஒற்றுமையையும் காப்போமாக!

 

நவராத்திரி பண்டிகையின் மிக முக்கியமான மற்றும் அழகிய மரபு ‘பொம்மை கொலு’ வைப்பதாகும். வெறும் அழகியல் சார்ந்த கொண்டாட்டமாக மட்டுமின்றி, மானுட வாழ்க்கை, ஆன்மிகப் பரிணாம வளர்ச்சி மற்றும் பிரபஞ்சத்தின் அமைப்பை உணர்த்தும் மிக ஆழமான தத்துவத்தை கொலு தன்னகத்தே கொண்டுள்ளது.
பொதுவாக 9 படிகள் வைத்து கொலு அமைப்பது ஆகம ரீதியாக முழுமையானதாகக் கருதப்படுகிறது.கொலு அமைப்பதன் முதன்மைத் தத்துவம் ஓரறிவு கொண்ட தாவரங்கள் முதல் ஆறறிவு கொண்ட மனிதர்கள், மற்றும் மனித நிலைக்கு அப்பாற்பட்ட தெய்வங்கள் வரை அனைத்து உயிர்களும் இறைவனின் படைப்பே என்பதை உணர்த்துவதுதான் கொலுவின் பிரதான தத்துவம். படிகளின் உச்சியில் வைக்கப்படும் இறைவனின் படிமம், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் இயக்கும் ஆதிசக்தியையும், உலகப் பொருட்களுக்கு அப்பால் விளங்கும் பரம்பொருளையும் குறிக்கிறது.
கொலுப் படிகள் எப்போதும் 3, 5, 7, 9 போன்ற ஒற்றைப்படை எண்களிலேயே அமைக்கப்படும். ஆன்மிகத்தில் ஒற்றைப்படை எண்கள் வளர்ச்சியையும், தேடலையும், முழுமையை நோக்கி நகர்வதையும் குறிக்கின்றன.

 

கட்டுரையாளர்:  ஜெயஶ்ரீ ராஜாராமன்

 

உலக நாடுகளில் காணாமல் போன பெண் தெய்வங்கள்

தன் சாயலில் மனிதனைப் படைத்த தேவன், மனிதனின் விலா எழும்பில் இருந்து பெண்ணைப் படைத்தார். எனவே பெண் என்பவள், ஆணுக்கு அடிமையாகப்பட்டவள் என்பதே விவிலியம் சொல்லிவரும் கருத்து.
பொது யுகம் 384 முதல் 324 வரை வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில், பெண் என்பவள் கடவுளின் படைப்பில் முழுமை பெறாத படைப்பு, குறைப் படைப்பு, எனவே ஆணுக்கு நிகராக சமூகத்தில் அவளுக்கு பங்களிப்பு இருக்கக் கூடாது என்ற கருத்தை பரப்பிவந்தவர்.
பெண் தெய்வ வழிபாடுகளில் சிறந்து விளங்கிய ஐரோப்பிய நாடுகள் பெண் தெய்வங்களை தொலைத்தது பொது யுகம் 300களுக்குப் பிறகுதான். கடந்த 1,500 ஆண்டுகளாக பெண்கள் பற்றிய இந்தியா அல்லாத உலக நாடுகளின் பார்வை இதுதான்.
ஆனால் இந்தியா பெண்களை சக்தியாக, படைப்பின் ஆற்றலாகப் பார்த்தது. பார்த்து வருகிறது. “God is No Where” என்ற வார்த்தையை “God is Now Here” என்று கூறி, “கடவுள் எங்கும் எதிலும் தன்னை அமைத்துள்ளார்” என்பதாக ஆங்கில வார்த்தைகளை வைத்தே ஆங்கிலம் படித்து நாத்திகம் பேசிய நபர்களுக்கு நாம் பதில் அளித்திருக்கிறோம்.
ஆம், கடவுள் எங்கும் எதிலும் தன்னை அமைத்துள்ளார் என்பதற்கு “GOD” எந்த வார்த்தையே போதுமானது. வார்த்தையோ ஆங்கில வார்த்தை. எப்படி உருவானது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கடவுள் அதற்குள் இந்திய பரம்பரையைத் இணைத்தே தன்னை அமைத்துள்ளார்.
‘G’ என்ற எழுத்துக்கு Generation- படைப்பு என்றும், ‘O’ என்ற எழுத்துக்கு Operation – காத்தல் என்றும் ‘D’ எந்த எழுத்துக்கு Destruction அழித்தல் என்றும், இவ்வாறு மூன்று தொழிலையும் செய்பவராக கடவுள் இருக்கிறார் என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு. அதுவல்ல விஷயம், இதில் முக்கியமான மற்றொரு தத்துவம் அடங்கியுள்ளது என்பதே விஷேசம். படைப்பதற்கு சிறந்த நுண் அறிவு வேண்டும். எனவேதான் படைத்தல் கடவுள் பிரம்மாவிற்கு, அறிவுக் கடவுள் சரஸ்வதி தர்மபத்தினி, காப்பதற்குச் செல்வம் வேண்டும். எனவேதான் காக்கும் கடவுள் திருமாலுக்கு, செல்வத்தின் கடவுள் மகாலெஷ்மி தர்ம பத்தினி. அழிப்பதற்கு சக்தி வேண்டும். எனவேதான் அழிக்கும் கடவுள் சிவனின் தர்மபத்தினி சக்தி. முப்பெரும் தொழில் செய்யும் கடவுளுக்கு அந்தந்தத் தொழிலுக்கு ஆற்றல் தருபவராய் விளங்கும் பெண் தெய்வங்களே தர்ம பத்தினிகள்.
ஆபிரகாமிய மதங்களின் வருகைக்குப் பிறகு, பெண்கள் பாதிக்கப்பட்ட படைப்பாக, உரிமையற்ற பாலினராக வர்ணிக்கப்பட்டு அடக்கப்பட்டனர். மாறாக அன்றும், இன்றும் ஹிந்து நாகரிகம் அவர்களை ஆணினும் சிறந்த படைப்பாகக் கருதி வணங்கி வருகிறது. ஹிந்து மதம் போலவே, ஒவ்வொரு கலைக்கும் ஒரு பெண் தெய்வதைக் கொண்டு வணங்கி வந்த கிரேக்க மதங்கள் இன்று இல்லை என்பதோடு, அந்த தெய்வங்களும் மறக்கப்பட்டாகி விட்டன.
ஹீரா, ஜூனோ, டிமெட்டர், சிரஸ், ஆர்டெமிஸ், டயானா, ஏத்தினா, மினர்வா, ஆஃப்ரோடைட், வீனஸ், ஹெஸ்டி, வெஸ்தா போன்ற கிரேக்க ரோமானிய பெண் தெய்வங்கள் இன்று வழக்கொழிக்கப்பட்டு விட்டனர். அவர்களுக்கு வழிபாடுகள் இல்லாமல் போய்விட்டது.
எனவேதான் இன்று ஹிந்து மதத்தைத்தை தவிர, உலகை ஆளும் இரண்டு பெரும் மதங்களில் பெண் தெய்வ வழிபாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியத்தில் பெண் தெய்வ வழிபாடு இல்லவே இல்லை. கிறிஸ்தவத்தில் இருக்கும் மேரி மாதா வழிபாடோ பைபிளால் அங்கீகரிக்கப்பட்ட வழிபாடல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் மதமாற்றத்துக்கு மட்டுமே மேரி மாதா வழிபாடு ஏற்கப்படுகிறது.
பெண்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட போது, கிறிஸ்தவ நாடுகளில் தோன்றியதுதான் பெண் உரிமை இயக்கங்கள். இது போன்ற பெண் உரிமை நமக்குப் பொருந்தாது என்பதே உண்மை. காரணம், உரிமைக்கும் அப்பாற்பட்டு பெண்கள் இங்கு தாய்மையின் அம்சமாய், படைப்பின் ஆற்றலாய் வழிபடப்படுகிறார்கள் என்பதுதான். மாறாக, பெண்களைப் பேய் பிசாசுகள் என்றும், சூனியக்காரிகள் என்றும் பட்டம்சூட்டி, கிபி 1450 முதல் 1750 வரை முந்நூறு ஆண்டுகளில் கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகளில் மட்டும் ஒழித்துக்கட்டிய எண்ணிக்கை பல லட்சத்திற்கும் மேல். விட்ச் ஹண்டிங் என்ற இந்தக் கொடிய பெண் கொலைகளைத் தடுக்க, பெண் உரிமை இயக்கங்கள் தலைத்தூக்கிய பின்னரே பல நாடுகள் அவற்றிற்கு எதிராக சட்டமியற்றின. அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பெண் உரிமை இயக்கங்களின் இன்றைய நிலை கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்திரம் என்ற வரையில் சென்று சேர்ந்திருப்பது, சமூக ஆபத்தாகி வருகிறது.
கட்டுப்பாடற்ற சுதந்திரம், பெண்கள் மீதான மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்துவதால், பெண்கள் போகப் பொருளாகப்பட்டு வருகின்றனர், பெண்களும் இந்த வலையில் விழுகின்றனர். விளைவு – அந்த நாடுகளில்தான் அதிகமான குற்ற எண்ணிக்கைகள், அதிகமான கற்பழிப்புகள், அதிகமான பெண் மீதான பாலியல் தாக்குதல்கள். ஒருபக்கம் அச்சமூட்டும் அடக்குமுறை, மறுபக்கம் சர்வ சுதந்திரம் என்ற இரண்டு விளிம்பு நிலைக்கும் செல்லாமல், ஹிந்து மதத்தில் பெண்களை ஆராதிக்கப்படுபவர்களாக எப்போதுமே இருந்து வந்துள்ளனர்.
அன்றும், இன்றும் பாரத சமுதாயத்தில் பெண்கள் பொதுத்தளத்தில் மிகவும் மதிக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதற்கு அன்று வேத காலத்தில் இருந்து வந்த பெண் பண்டிதர்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம் என்றால், இன்று இந்திய அரசியல் வானில் கொடிகட்டிப் பறக்கும் பெண்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
உலகிலேயே அதிகமான பெண் பிரதமர்களை உருவாக்கிய பகுதி தெற்காசியப் பகுதிதான். இலங்கையில் ஒரு பண்டார நாயகா, இந்தியாவில் ஒரு இந்திரா காந்தி, பங்களாதேஷில் ஒரு சேக் ஹசீனா, பாகிஸ்தானில் ஒரு பெநசிர் புட்டோ.. இப்படி பெண்களை ஆணின் பாதியாக மட்டுமே பார்க்கும் இஸ்லாமிய நாடுகளில் கூட, பெண் பிரதமர்கள் வந்தனர் என்றால், பாரத மண்ணின் மாண்பினாலேயே அன்றி, வேறு காரணங்களால் அல்ல.
பாரதிய ஞான மரபு எப்படிக் கூறியுள்ளதோ அப்படிப் பெண்மையை போற்றி காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு, நம் பெண்களிடம்தான் உள்ளது. இந்தக் கடமையில் நம் பெண்கள் தவறும் போது இரண்டு விழிம்பு நிலைகளின் ஆபத்து நம்மை அச்சுறுத்துகிறது. பெண்கள் கருப்புக் துணிக்குள் அடக்கப்பட்டு விடாமல், கூண்டுக்குள் நிறுத்தி ஏலமிடப்படாமல், வரம்புமீறிய பாலியல் சுதந்திரத்தால் தன்னை இழக்காமல் காப்பற்றபட வேண்டும். பெண்கள் தெய்வமாய் தொழப்பட வேண்டும். அதுவே பெண்மைக்கு சிறப்பு தரும்.

இராம. நம்பி நாராயணன்