தேஜஸ்வி யாதவ் கைது செய்யப்படலாம்?

லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேயின் வெவ்வேறு மண்டலங்களில் குரூப் “டி” பதவியில் மாற்றுத் திறனாளிகளை நியமித்தலுக்காக  முறைகேடாக பெற்ற நிலங்களை அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு மாற்றி பண லாபம் பெற்றார். இப்படி, பாட்னாவில் அமைந்துள்ள சுமார் 1,05,292 சதுர அடி நிலம் லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நிலப்பரிமாற்றங்களில் விற்பனையாளர்களுக்கு பணம் ரொக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ. 4.39 கோடி. இந்த நிலங்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பெயரில் பெற்ற பிறகு, நிலங்களை ஒருங்கிணைக்கும் பணி தனியாக நடந்தது. இந்த ரயில்வே வேலை மோசடியில் சி.பி.ஐ வசம் தற்போது ஒரு ஹார்ட் டிஸ்க் சிக்கியுள்ளது. இந்த ஹார்ட் டிஸ்க்கில் தங்கள் நிலத்தை லாலுவின் குடும்பத்திற்கு கொடுத்த 1,458 நபர்களின் விவரங்கள் அடங்கியுள்ளன. லாலு பிரசாத்தின் மகனும் தற்போதைய பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தயாரித்த பட்டியல் இது. கடந்த மாதம் சி.பி.ஐ சோதனையின் போது இது கைப்பற்றப்பட்டது. சி.பி.ஐ விசாரணையில், இந்த 1,458 பேரில், சுமார் 16 பேரின் விவரங்கள் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு சரியென நிரூபிக்கப்பட்டுள்ளன. ரயில்வேயில் பணியமர்த்தப்பட்ட இந்த நபர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க சி.பி.ஐ விரைவில் ரயில்வேக்கு கடிதம் எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரயில்வே ஊழியர்களின் தவறுகளும் ஆய்வு செய்யப்படும். இதனால் இவ்வழக்கின் ஒரு கட்டத்தில், தேஜஸ்வி யாதவ் கண்டிப்பாக கைது செய்யப்படலாம். ஏனெனில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் மிகவும் வலுவாக உள்ளன என சி.பி.ஐ ஆதாரத்தை மேற்கோள் காட்டி சி.என்.என் நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.