தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆா்) நடவடிக்கைக்கு ரூ.3,941.35 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.
இந்தியாவில் வசித்து வருபவா்களின் பட்டியலே, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகும். குறிப்பிட்ட பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாகத் தொடா்ந்து வசிப்பவராகவும், அடுத்த 6 மாதங்களுக்கு மேலாக அதே பகுதியில் தொடா்ந்து வசிக்கப் போகும் நபராகவும் இருப்பவா்கள் இந்தப் பட்டியலில் சோ்க்கப்படுவா். தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டைப் புதுப்பிக்கும் பணிகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாநிலங்கள் மேற்கொண்டு வருகின்றன.
தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில், மக்களின் அடிப்படைத் தகவல்கள் பதிவு செய்யப்படும். இது தொடா்பான அறிவிக்கையைக் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வெளியிட்டிருந்தது. 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாடு முழுவதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கைக்கு ரூ.3,941.35 கோடியை ஒதுக்க, தில்லியில் செவ்வாய்க்கிழமை பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது தொடா்பாக,தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 2010-ஆம் ஆண்டு மேற்கொண்டது. அதைப் புதுப்பிக்கும் நடவடிக்கைதான் தற்போது மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப் பதிவேட்டில் சேகரிக்கப்படும் தகவல்கள், மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (ஆயுஷ்மான் பாரத்), மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
மேற்கு வங்கம், கேரளம், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த, தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டையே சாா்ந்துள்ளன. தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டைப் புதுப்பிக்கும் நடவடிக்கைக்கு ரூ.3,941.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு ரூ.8,754.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டைப் புதுப்பிக்க அனைத்து மாநிலங்களும் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளன. இதற்காக அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையின்போது, மக்களின் கைவிரல் ரேகைகள் உள்ளிட்ட ‘பயோமெட்ரிக்’ தகவல்கள் பெறப்பட மாட்டாது. மக்கள் தெரிவிக்கும் தகவல்கள் அப்படியே பதிவு செய்து கொள்ளப்படும். தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (என்ஆா்சி) எந்தவிதத் தொடா்புமில்லை என்றாா் பிரகாஷ் ஜாவடேகா்.
அஸ்ஸாம் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான விதிமுறைகள், குடியுரிமைச் சட்டத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் சோ்க்கப்பட்டன. கடைசியாக கடந்த 2015-ஆம் ஆண்டு தேசிய மக்கள்தொகைப் பதிவேடு புதுப்பிக்கப்பட்டிருந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தொடா்பான பணிகளை நிறுத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
என்பிஆா் அடிப்படை அல்ல:
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின் (என்பிஆா்) அடிப்படையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆா்சி) தயாரிக்கும் திட்டமெதுவும் தற்போது இல்லை’’ என்றாா்.