பாரதம் இளைய பாரதம். அதாவது? மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த இளைய சமுதாயத்திற்கு தெம்பு தரும் வகையில் ஏதாவது சினிமா உண்டா? இல்லாமல் இருந்தது. இப்போது மெல்ல மெல்ல தலைகாட்டுகிறது. அதுபற்றிதான் இந்த வாரம் அட்டைப்படக் கட்டுரை.
மாரியப்பன் என்ற சேலம் இளைஞர் 5 வயதில் சாலை விபத்தில் காலை பறிகொடுத்தவர். அப்போதிருந்து நடை, ஓட்டம், துள்ளல் என்று பயிற்சி மயமாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். ஊனத்தோடு போரிட்டார். ஜெயித்தார். அண்மையில் நடந்த ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக்ஸில் (பாராலிம்பிக்ஸ்) உயரம் தாண்டுதலில் உலகத்தின் நாயகன் ஆனார். தங்கம் வென்றார். இவரது வாழ்க்கையை, இவரது போராட்டத்தை, இவரது வெற்றியை திரைப்படமாக (பயோபிக் என்கிறார்கள்) தயாரிக்கிறார் நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா. இது பற்றி மாரியப்பன் என்ன சொல்கிறார்?
என்னைப் பற்றி திரைப்படம் வருவது மகிழ்ச்சி. ஏனென்றால் பார்க்கும் இளைஞர்கள் போராடி ஜெயிக்கும் ஊக்கம் பெறுவார்களே?” என்கிறார் மாரியப்பன்.
உண்மைதான். திரும்பத் திரும்ப முக்கோண காதல் கதை, ரவுடித்தனமான கதாநாயகன். அடியாள் ராஜாங்கம் என்று அரைத்த மாவை திரையில் அரைப்பதை பார்த்து பார்த்து சராசரி இளைஞன் நுங்கம்பாக்கங்களை உருவாக்கியே தீரவேண்டுமா என்ன? மாற்றத்தின் காற்று மெல்ல வீசுகிறது திரையில்.
சில ஆண்டுகளுக்கு முன் காமராஜர் பற்றி ஒரு பயோபிக் வந்தது. அதை பார்த்துவிட்டு இயக்குனர் சமுத்திரக்கனி ஒரு முதலமைச்சர் நேர்மையே வடிவாக வாழ்ந்ததை அடுத்த தலைமுறைக்கு நன்றாகவே சொல்கிறது இந்தப் படம்” என்றார்.
இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக இளைஞர்கள் கண் முன் செக்கிழுத்த சிதம்பரனாரை தனது நடிப்பால் கொண்டுவந்து நிறுத்தினார் சிவாஜி கணேசன். அதே கப்பலோட்டிய தமிழன் படத்தில் எஸ்.வி. சுப்பையா, அன்பான பாரதியை, ஆவேசமான பாரதியை அப்படியே நெஞ்சில் நிறுத்திவிட்டுப் போய்விட்டார். பார்த்த இளைஞர்களுக்கு தேசத்துக்காக வாழ்ந்த தலைமுறையை நினைத்துப் பார்க்கத் தோன்றியது.
சக்தி வாய்ந்த ஊடகமான சினிமா வழியே இளைஞர்களுக்கு மெசேஜ் சொல்லவேண்டும் என்பது புரிகிறது. படத்தயாரிப்பாளருக்கு, போட்ட பணம் கைக்குத் திரும்ப வேண்டாமா என்பதுதான் திரைப்படத் தொழில் கேட்கும் கேள்வி. 20 ஆண்டுகளாக திரைத்துறையில் ஊடக ஆலோசகராக செயல்படும் விட்டல் நாராயணன், நல்லோர் பற்றி படம் எடுப்பவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் கணிசமாக உதவவேண்டும் என்கிறார். ‘தங்கல்’ என்றொரு ஒரு படம் வசூலில் சக்கைபோடு போட்டதே, என்று கேட்டால் அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த ஆமிர்கானின் ‘புகழ்’ கைகொடுத்தது என்பதுடன் சுமார் 30 கோடி ரூபாய் வரை விளம்பரத்திற்கு அள்ளிவிட்டிருக்கிறார்கள், எனவே நூற்றுக்கணக்கான கோடிகளில் வசூலை அள்ளுகிறார்கள் என்று திரைப்படத் தொழில் சம்பந்தப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.
குஸ்தி பயில்வான் மகாவீர் போகத் தன்னுடைய இரண்டு புதல்விகளையும் கட்டுப்பெட்டித் தனத்தை மீறி குத்துச்சண்டை வீராங்கனைகளாக உருவாக்கி தலைப்புச் செய்தியில் அடிபட்ட விஷயத்தை விறுவிறுப்பாக சொல்கிறது தங்கல் சினிமா. அந்த ஹிந்திப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டிருப்பதால் தமிழக இளைஞர்களுக்கு நல்லதைப் பார்க்க ஒரு வாய்ப்பு. மற்றபடி தமிழக திரை உலகம் நல்ல வாழ்க்கைகளை சினிமா ஆக்க இன்றுவரை ‘நல்ல நேரம்’ பார்த்துக்கொண்டிருக்கிறது.
எங்கள் திறமைகளுக்காக நாங்கள் அங்கீகரிக்கப்படவில்லை, பிரபலமாகவில்லை. எங்கள் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டதால் மட்டுமே நாங்கள் இவ்வளவு பிரபலம் அடைந்திருக்கிறோம் என்பதில் உள்ளுக்குள் வருத்தம்தான்” என்கிறார் குத்துச்சண்டை வீராங்கனை சகோதரிகளில் ஒருவரான கீதா. அவரது இந்த நல்ல மனசு காரணமாகவே தங்கல் படத்தை எடுத்தவர்களை பாராட்டத் தோன்றுகிறது. (எடுத்தது ஆமிர்கான் கோஷ்டிதான். சிவலிங்கத்தின் மேல் 20 ரூபாய் பாலை ஊற்றுகிறீர்களே, அதற்கு பதிலாக அதை ஒரு ஏழைக்கு சாப்பாடு போட்ட பயன்படுத்தலாமே என்று பேசிய அதே ஆமிர்கான் தான் இப்போது பாரத மக்களின் புண்ணியத்தில் தங்கல் மூலமாக 300 கோடி ரூபாய் லாபம் பார்த்திருக்கிறார். இதில் ஆமிர்கானுக்கு ஒன்றும் பெருமை இல்லை. விஷயமே வேறு).
சில ஆண்டுகளுக்கு முன் மாரத்தான் மாவீரர் மில்காசிங் பற்றி ஒரு பயோபிக் திரைப்படம் வந்தது. மக்கள், குறிப்பாக இளைஞர்கள், ரசித்தார்கள். திரையுலகம் பார்த்தது. அதுபோன்ற படங்களுக்கு தாவியது. ‘பாக் மில்கா பாக்’ என்ற அந்தப் படம் நெடுந்தொலைவு ஓட்டத்தைவிட தேசபக்தியை உயர்த்திப் பிடித்தது அதன் வெற்றிக்கு அடுத்தடுத்து மேரி கோம், எம்.எஸ். தோனி, புலேலா கோபிசந்த் என்று ஹிந்தி திரை உலகம் விளையாட்டு புள்ளிகளைச் சுற்றி கண்ணையும் கருத்தையும் கவரும் திரைக்கோலங்களை உருவாக்கியது. தமிழ்த் திரையுலகம் தான் இன்னும் அந்தப் பந்தயத்தில் கலந்துகொள்ள மைதானத்துக்கே வரவில்லை. ‘மாரியப்பன்’ இன்றுவரை ஒரு விதிவிலக்கே.
பாரத நாடு நெடுக வெளியாகிற பயோபிக் படங்களின் கதை நாயகர்கள் நிஜவாழ்வில் எப்படி கதையின் நாயகர்கள் ஆகிறார்கள் என்பது சுவாரஸ்யமான சங்கதி. 2007ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் கிரிக்கெட் மைதானம். பிரம்மாண்ட திரையில் ‘டி-20 உலகக் கோப்பை முதல் சாம்பியனாகிறது பாரதம்’ என்ற அறிவிப்பு பளீரிடுகிறது. அதற்கு 10 நாள் முன்புகூட இதை கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் பாரத அணியில் சச்சின் டென்டுல்கர், ராகுல் திராவிட், சௌரவ் கங்குலி என்று எந்த ஒரு பெரிய கையும் இல்லை.
ராஞ்சி என்ற கிரிக்கெட்டுக்கே சம்பந்தமில்லாத ஒரு தொலைதூர நகரிலிருந்து வந்த ஒரு ‘பட்டிக்காட்டான்’ தான் (தோனி) கேப்டன். அணியின் வீரர்களும் உ.பி.யின் ரேபரேலி, கேரளத்தின் கர்னாடகத்தின் குடகு என்று கிராமிய பின்னணி கொண்டவர்கள்தான். இவர்கள் தான் அந்த தூக்கிவாரிப்போடும் நிகழ்த்தியவர்கள். இந்த அதிரடி வெற்றி அடுத்தடுத்த ஆண்டுகளும் மறுபடியும் நிகழ்ந்து ஐ.பி.எல். என்ற புதிய பாணி கிரிக்கெட்டுக்கு பாதை போட்டது. பிரபல சினிமா நடிகர்கள் ஐ.பி.எல். அணிகளை ஏலத்துக்கு எடுத்தாலும், மைதானத்தில் நிஜ ஹீரோக்கள் வேர்வை சிந்தி, தியாகம் செய்து, அர்ப்பணிப்புடன் ஆடி வெற்றிபெறுவதுதான் திரையில் நடித்துக்காட்டுகிற எங்களுக்கே படிப்பினை” என்கிறார் அப்படி ஏலத்துக்கு எடுத்த திரைப்பட ஹீரோ ஒருவர்.
அந்த ஹீரோவுக்கு மட்டுமல்ல, லட்சோப லட்சம் ரசிகர்களுக்கும் நிஜ ஹீரோக்களை பிடித்துப்போயிற்று என்பது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பற்றிய பயோபிக் படங்கள் வசூலைக் குவிப்பதிலிருந்து வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இதை அப்பட்டமாக சொல்கிறார் ஒரு பத்திரிகையாளர்: ரசிகர்கள் தோனியும் போகத் சகோதரிகளும் மேரி கோமும் வாழ்ந்த வாழ்க்கையை திரையில் பார்த்து உள்வாங்கிக் கொள்கிறார்கள். அந்த வீரர்களும் வீராங்கனைகளும் எதிர்கொண்டு வென்ற எதிர்ப்புகள், வாழ்க்கையில் அவர்கள் பெற்ற வெற்றிகள் இவையெல்லாம் ரசிகர்களுக்கு உத்வேகம் ஊட்டுகின்றன. மேரி கோம் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று அவர் பெயரில் ஒரு சினிமா படம்! மகேந்திர சிங் தோனி மட்டும் பாரத அணிக்கு தேர்வாகி இராவிட்டால் இன்று ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷனில் டிக்கட் பரிசோதகராக காலம் தள்ளிக்கொண்டிருப்பார். கீதாவும் பபிதாவும் சிறுமிகளாயிற்றே என்று தந்தையார் செல்லமாக வளர்த்திருந்தாரானால் இன்று அவர்கள் திருமணம் செய்துகொண்டு சௌக்கியமாக குடும்பத் தலைவிகளாகியிருப்பார்கள்.”
மைதானாத்தில் தோல்வி என்றால் உலகமே இருண்டுவிட்டது என்று நினைக்காமல் திமிறி எழுந்து தொடர்ந்து போராடி வெற்றிக்கொடி நாட்டும் இப்படிப்பட்ட நிஜவாழ்க்கை ஹீரோக்களையும் ஹீரோயின்களையும் தங்கள் பிள்ளைகள் பார்த்து ஊக்கம் பெறட்டும் என்று பெற்றோர்கள் அவர்களை சினிமா தியேட்டர்களுக்கு அழைத்துச் செல்ல தொடங்கியிருக்கிறார்கள்!
தேசத்தையும் மக்களையும் பற்றி கோணல் பார்வை கொண்டிருக்கும் ஆமிர்கான் போன்ற நபர்கள் தேசத்தின் நாடி எப்படித் துடிக்கிறது என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ள இது உதவும்.
சிகரமான சாதனை என்றால் பாட்மின்டன் தேசிய கோச் புலேலா கோபிச் சந்தைத்தான் சொல்லவேண்டும். ஒரு காயம் இவரை முடக்கியது. இவர் முடங்கவில்லை. மீண்டெழுந்தார். தேசிய சாம்பியன் ஆனார். இரண்டு தேசிய சேம்பியன்களை (சிந்து, சாய்னா நெஹ்வால்) உருவாக்கினார். இவர் வாழ்க்கை மூன்று மொழிகளில் பயோபிக் ஆகிறது.
நல்லோர் பற்றிய திரைக்கதைகளுக்குப் பஞ்சமில்லை. போட்ட பணத்தை எடுப்பது பற்றித்தான் தயாரிப்பாளருக்குக் கவலை.
இதில் அரசு உதவி வெகுவாக உதவும்.
– விட்டல் நாராயணன்,
திரைத்தொழில் ஊடக ஆலோசகர்
வெற்றி பெறும் ஒவ்வொருவருடைய கதையையும் எல்லோருக்கும்
சொல்லத்தான் வேண்டும்.
மக்கள் மனதில் அது சுலபமாக பதியும்.
– அபிஜித் தேஷ்பாண்டே
திரைப்பட எடிட்டர்.
விளையாட்டுத் துறையில் ஊழல் விளையாடினாலும் விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் திறன் கொண்டு அவற்றை மீறி உயர்கிறார்கள். அதுவே பார்க்கிறவர்களின் குடும்பங்களை மாற்றக்கூடிய காட்சி.
– அத்வைதா காலா,
திரைக் கதாசிரியர்
புகழின் உச்சியில் பிரகாசிக்கிறவர்களைத்தான் பயோபிக் எடுப்பவர்கள் நாடுகிறார்கள். வாழும்போதே வரலாறாக திகழ்ந்தவர்களை அல்ல. உதாரணம் சச்சினுக்கு பதிலாக தோனியை படமாக்கியிருக்கிறார்கள். பாரதத்தில் பயோபிக் பாணி இன்னும் பாலப் பருவத்திலேயே இருக்கிறது.
– சுதீப்த சென், மாற்றுத் திரைப்பட இயக்குனர்