முத்தண்ண வெண்நகையாய் என்று தொடங்கும் பாடலில், தோழியர் இன்னமும் தூங்கி கொண்டிருக்கும் பெண்ணிடம், “முத்துப் போன்ற ஒளியான பல்வரிசை உடையவளே! முன்பெல்லாம், நாங்கள் வந்து உன்னை எழுப்பும் முன்னதாக நீயே எழுந்திருந்து தயாராக இருப்பாயே? சிவனே என் தலைவன் என்றும், அனந்தன், அமுதன் என்றெல்லாம் தித்திக்கத் தித்திக்க அவன் புகழ் பேசுவாயே ! இன்று என்ன ஆயிற்று? கதவைத் திற” என வினவுகிறார்கள்.
“தான் தெரியாத்தனமாகத் தூங்கி விட்டேன். அதற்காகத் தன்னிடம் இவ்வளவு கடுமையாகப் பேச வேண்டாமே என்றும், பக்திக்கும், நோன்பிற்கும் தான் புதியவள் ஆதலால் தனது தவறைப் பெரிதுபடுத்தாமல், குற்றத்தை நீக்கி தன்னையும் அடியார் ஆக்கிக் கொள்ளுமாறு.’ தூங்கிக் கொண்டிருந்த தோழி கேட்கிறாள். அடியவர்களான தோழியர் அவளிடம், “அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.
ஒருநாள் கோயிலுக்கு போவது, ஆண்டவனை விழுந்து விழுந்து வணங்குவது, பிறிதொரு நாள், ஏதோ எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதும் விரக்தியில் அவனை வணங்குவதை கை விட்டுவிடுவது… இதெல்லாம் நிஜ பக்தியாக முடியாது என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து.
ஆர் கிருஷ்ணமூர்த்தி