திருப்பூர் பின்னலாடை துறையினரை, பிரிட்டன் வர்த்தக குழுவினர் வியந்து பாராட்டினர்; ‘பிரிட்டன் ஆர்டர்கள் கூடுதலாக வசமாகும் வாய்ப்பு உள்ளது’ என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பிரிட்டனின் முன்னணி வர்த்தக நிறுவனமான, ‘பிரைமார்க்’ நிறுவனத்தின் நிர்வாகிகள் குழு, நேற்று திருப்பூர் வந்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு இயக்குனர் பீ ஆங், இந்தியாவுக்கான தொழில் பிரதிநிதி ஜோகன்னா வில்சன், சர்வதேச சமூக தணிக்கையாளர் அபி ருஷ்டன், வர்த்தக மேலாளர் ரூத் மார்ட்டின் ஆகியோர் அடங்கிய குழு, ஏற்றுமதியாளர்களை சந்தித்தது.
ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். துணை தலைவர் இளங்கோவன், பொது செயலர் திருக்குமரன், இணை செயலர் குமார் துரைசாமி ஆகியோர், திருப்பூரின் ‘வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி கோட்பாடுகள்’ குறித்து விளக்கினர்.
‘பிரைமார்க்’ நிறுவன குழுவினர், அந்நாட்டினர் எதிர்பார்க்கும், பசுமை சார் உற்பத்தி குறித்து விளக்கினர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது: பிரைமார்க் நிறுவனம், 25 ஆண்டுகளாக திருப்பூருடன் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் மேற்கொள்கிறது. திருப்பூர், 15 ஆண்டுகளாகவே, வளம் குன்றா வளர்ச்சி நிலையில் பயணிப்பதை கேட்டு வியந்து, பாராட்டினர்.
சர்வதேச வர்த்தகர்கள் எதிர்பார்க்கும் தரமான வர்த்தகம், திருப்பூரிலிருந்து கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். இனிவரும் நாட்களில், பிரிட்டன் ஆர்டர்கள், திருப்பூருக்கு கூடுதலாக கிடைக்கும்; புதிய வர்த்தக வாய்ப்புகளும் உருவாகும்.
இவ்வாறு கூறினார்