“தமிழ் செய்யுட் கண்ணும் இறையனாரும், அகத்தியனாரும், மார்க்கண்டேயனாரும், வான்மீகனாரும், கெளதமனாரும் போலார் செய்தன தலை” என்று நச்சினார்க்கினியர் சொல்லியுள்ளது, சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது.
சென்னையை அடுத்துள்ள திருவான்மியூர் ஊரே இதற்கு சாட்சியாக விளங்குகிறது. வான்மீக (வால்மீகி) முனிவர் சிவபெருமானை புற்றிலிருந்து பூஜித்த இடம் ஆதலின் ‘திருவான்மியூர்’ எனப்படுகிறது. அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது.
சுவாமி: மருந்தீஸ்வரர்
தாயார்: மரகத நாச்சியார் மற்றும் திரிபுரசுந்தரி.
ஸ்ரீராமர், சீதை, அனுமன் அனைவரும் திருவான்மியூரை சுற்றியுள்ள பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்துள்ளனர். புராணக் கூற்றின்படி ஆராய்ந்தால், வால்மீகி ஆசிரமம், சீதா தேவி தங்கியிருந்த இடம், லவ – குசன் தங்கியிருந்ததும், ஸ்ரீராமர் மற்றும் லட்சுமணனுடன் சண்டையிட்டதும் என அனைத்தும் திருவான்மியூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துள்ளன.
கோயம்பேடு:
ஸ்ரீராமர், அஸ்வமேத யாகம் நடத்தத் திட்டமிட்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக, யாகக் குதிரையை நாடு முழுவதும் அனுப்பினார். அந்தக் குதிரை வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்குள் நுழைந்தபோது, சீதாராம புத்திரர்களான லவ குசா சிறுவர்கள் அதைச் சுற்றி அம்புகளால் வேலி அமைத்துத் தடுத்து நிறுத்தினர். இதனால்தான் அந்த இடம் கோ (குதிரை) + அம்பு (அம்பு) + பேடு (வேலி) – கோ – அம்பு – பேடு என்று அழைக்கப்பட்டது, இது பின்னர் ‘கோயம்பேடு’ என்றும் அறியப்பட்டது.
சென்னையின் கோயம்பேட்டில் அமைந்துள்ள குறுங்காலீஸ்வரர் கோயில் (குசலவபுரீஸ்வரர் கோயில்): தன் தந்தைக்கு எதிராகப் போர் புரிந்து, தன் தவறை உணர்ந்து, அதன் பரிகாரமாக வால்மீக முனிவரின் சொல்லுக்கு இணங்க லவன் – குசன் வழிபட்ட இத்தலம், பித்ரு தோஷம் நீக்கும் தலமாகப் போற்றப்படுகிறது.
மூலவர்: குருங்காலீஸ்வரர் / குசலவபுரீஸ்வரர்
அம்மன்: தர்மசம்வர்த்தினி (அறம் வளர்த்த நாயகி)
இங்குள்ள தீர்த்தம் லவ – குஷ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சண்டை அருகிலுள்ள சிறுவபுரி என்ற இடத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
மதுரவாயல்:
சீதையின் பிரார்த்தனைகளால் மகிழ்ந்த துர்கா தேவி, உடனடியாக அருகிலுள்ள பகுதிகளை மிகவும் வளமான மற்றும் அழகான வயல்வெளிகளாக மாற்றினார். அந்தப் பகுதி இப்போது ‘மதுரவாயல்’ என்று அழைக்கப்படுகிறது.
வானகரம்:
லவ – குசன், வடக்கு நோக்கிப் புறப்படும் வரை, அனைத்து வானரர்களும் அருகிலேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இடம் இப்போது ‘வானகரம்’ என்று அழைக்கப்படுகிறது
மேலம்
புறநானூறில் 358 ஆம் பாடலை ‘வான்மீகியார்’ என்பவர் எழுதியுள்ளார் என்ற விவரம் இருக்கிறது.
358. விடாஅள் திருவே!
பாடலின் பின்னணி: இல்லறத்தைவிட, துறவறமே சிறந்தது என்ற கருத்தை இப்பாடலில் வான்மீகியார் கூறுகிறார்.
திணை: காஞ்சி.
துறை: பெருங் காஞ்சி, மனையறம் துறவறமும் ஆம்.
பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி அற்றே;
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது; ஆகலின்
கைவிட்டனரே காதலர்; அதனால் ,
விட்டோரை விடாஅள் திருவே;
விடா அதோர் இவள் விடப்பட்டோரே.
உரை: கதிரவனால் சூழப்பட்ட, இப்பயன் மிக்க பெரிய உலகத்தை ஒரே நாளில் பலர் ஆட்சி செய்திருக்கிறார்கள். இல்லறத்தையும், துறவறத்தையும் ஆராய்ந்துப் பார்த்தால், துறவறத்துக்கு, இல்லறம் கடுகளவும் ஒப்பாகாது. அதனால், தவம் செய்வதை விரும்பியவர்கள் பற்றுக்களை கைவிட்டனர். பற்றுக்களை விட்டவர்களைத் திருமகள் கைவிடமாட்டாள். திருமகளால் கைவிடப்பட்டவர்கள் பற்றுக்களை விடமாட்டார்கள்.
போகர் என்னும் சித்தர் எழுதியுள்ள ’போகர் ஏழாயிரம்’ என்னும் நூலின் 5834 − -36 ஆம் பாடலில், வால்மீகியை ‘தமிழ் பண்டிதர்’ என குறிப்பிடுகிறார். வான்மீகர், சூத்திர ஞானம் என்ற தன்னுடைய தமிழ் ஏட்டில் வாசியின் மூலம் ஞானத்தை அறியும் வழியை கூறுகிறார்.
சிவசிவா பதினெண்பேர் பாடற் கெல்லாம்
திறவுகோல் வால்மீகன் பதினாறாகும்:
சிவம்பெத்த சித்தரேல்லா மென்னூல் பார்த்துச்
சிவனோடே கோள் சொன்னார் சினந்தான் நாதன்:
அவமாகிப் போகாமல் சிவனுத் தார
அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக:
நவமான நவக்கிரகம் தன்னுளேயே
நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கப்பால். – 11
வான்மீகர் ஆருட சாஸ்திரம்-150 என்பது வான்மீகர் முனிவரால் அருளப்பட்ட, ஆரூடம் (நிமித்தம்/ஜோதிடம்) பார்ப்பதற்கான ஒரு பண்டைய தமிழ் நூல் ஆகும். இது 150 பாடல்களைக் கொண்ட தொகுப்பு ஆகும். இதில் எளிமையான முறையில் ஜோதிடம் பார்க்கும் வழிமுறையை வகுத்துள்ளார். கோரக்கர் மலைவாகடம் என்னும் நூலில் 126 பக்கத்தில், சாயா விருட்சக் கற்பம் பற்றிய குறிப்பில், பொள்ளாச்சி அருகே உள்ள காஞ்சன பருவதம் , மஞ்ச மலையில் வால்மீக மகரிஷி ஆச்சிரமம் அமைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடி முருகன் கோயிலில், வன்னி மரத்தடியில் வால்மீகி முனிவர் (வான்மீகர்) ஜீவசமாதி கொண்டுள்ளார். மேலும் திருவான்மியூரில் வான்மீகநாதருக்கு தனி கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வால்மீகியும், ராமாயணமும் தமிழ் திருநாட்டில் தொடர்பு கொண்டுள்ளது நமது பெருமையே.