தமிழும் சமஸ்கிருதமும் கலாச்சார இரட்டையர்

சமஸ்கிருதமும் தமிழும் செம்மொழிகளுள் செறிந்தவை. கணக்கிடவே முடியாத தொன்மை வாய்ந்தவை. தமிழ்க் கடவுளர்கள் எனப் போற்றப்படும் சிவபெருமானும் முருகப்பெருமானும் அருளிச் செய்ததாகக் கருதப்படுபவை (சிவபெருமானின் டமருகத்தினின்று உதித்ததவை சம்ஸ்கிருத எழுத்துகள் என்பதும் முருகப்பெருமான் அகத்தியருக்கு உபதேசித்தருளியதே தமிழ் என்பதும் பிரசித்தம்).

சம்ஸ்கிருதமும் தமிழும் கலந்து எழுதப்படும் நடையே மணிப்
பிரவாளம். தமிழகத்தில் மணிப்
பிரவாளம் மிகவும் போற்றுதற்குரிய இடத்தைப் பெற்றிருந்தது. வைணவ உரையாசிரியர்கள் மணிப் பிரவாள நடையிலேயே உரை எழுதினார்கள்.

“முத்தும் பவழமும் கோர்த்தாற் போன்றது மணிப்பிரவாளம்” எனத் தமிழ்ப் பாடநூல் திட்டத்தில் மாணவச் செல்வங்கள் கற்றது போக, இன்றோ, “வாயிலில் மாட்டும் எலுமிச்சையும் மிளகாயும் கலந்த திருஷ்டி போன்றது மணிப்
பிரவாளம்” எனக் கற்கும் நிலை உள்ளது. இதைவிடப் பெரிய துரோகத்தை மாணவச் செல்வங்
களுக்கு நாம் செய்து விட முடியாது.

தமிழ்க் கவிஞர்களின் எழுத்தினின்று தமிழகத்திலும், தமிழ் மக்களின் உள்ளங்
களிலும், சம்ஸ்கிருதம் வேரூன்றி இருந்தது (இருக்கிறது) என்பதனை உள்ளங்கை நெல்லிக்
கனி போல் அறியலாம். தேவாரத்திலும், திருவாசகத்திலும், திவ்யப் பிரபந்தங்களிலும், திருப்புகழிலும் விரவியிருக்கும் சம்ஸ்கிருதச் சொற்களைப் பார்ப்போமாயின் இதன் உண்மை நமக்கும் விளங்கும்

உதாரணமாக அருணகிரிநாதரின் கந்தரலங்காரம் நூலில் “சிகராத்ரி கூறிட்ட” என ஆரம்பிக்கும் பாடலில் “வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ” என வேண்ட, உடனே அவர் வாயினின்று அடுத்த இரு வரிகளாக “பணி பாச சங்க்ராம பணாமகுட நிகர அட்சம பட்ச பட்சி துரங்க ந்ருப குமரா குக ராட்சச பட்ச விட்சோப தீர குணதுங்கனே” என ஒவ்வொரு சொல்லும் சம்ஸ்கிருதச் சொல்லா
கவே வந்துள்ளது  (கந்தரலங்காரம் 52வது பாடல்).

அருளாளர்கள், தமிழ் இலக்கியத்தின் செம்மணிகளாகத் திகழ்ந்தவர்கள் சம்ஸ்கிருதத்
தையும் தமிழையும் வெவ்வேறு மொழிகளாகக் கூடக் கருதவில்லை. ஒரே மொழியாகவே கண்டார்கள். மக்கள் மனதிலும் அவ்வாறான உணர்வு இருந்தால்தானே கவிகளின் வாக்கிலும் இலக்கியப் பதிவிலும் அது பிரதிபலிக்கும்? “சமஸ்கிருதம் கற்காதவர்களுக்கு தமிழ் கற்றல் முழுமை அடையாது” என்றல்லவா (தொல்காப்பிய சூத்திர விருத்தி இயற்றிய) சிவஞான முனிவர் அருளியிருக்கிறார்.

பாணினியின் இலக்கணச் சூத்திரங்களுக்கும் நன்னூல் சூத்திரங்களுக்கும் உள்ள ஒற்றுமையையும்; சைவ சித்தாந்
தத்திற்கும் அத்வைத சித்தாந்தத்
திற்கும் உள்ள ஒற்றுமையையும்; பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்
திற்கும் திருமூலரின் அட்டாங்க யோகத்திற்கும் உள்ள ஒற்றுமையை
யும், தமிழ் நீதிநூல்களிலும் சம்ஸ்கிருத நீதி நூல்களிலும் ஔவையும் திருவள்ளுவனும் பர்த்ருஹரியும் கூறும் நீதிகளின் ஒற்றுமையையும் கண்டவர்கள் இரு மொழிகளையும் வேறென்று நினைக்கவும் கூடுமோ?

கம்ப ராமாயணத்தையும் வில்லி பாரதத்தையும் வால்மீகியும் வியாசரும் படித்தார்கள். என்றால் “ஆஹா! நாங்கள் எழுதியதை இவர்கள் மேலும் கவினுற எடுத்தியம்பி விட்டனரே!” என மூக்கில் விரல் வைத்து வியப்பார்கள் என்றே தோன்றுகிறது. அவ்வளவு ஆழ்ந்த அர்த்தங்களையும் செறிந்த கருத்துகளையும் மூல நூலில் உள்ளது தெளிவுறத் துலங்குமாறு கவிபுனைய வேண்டு
மெனின் இவ்வறிஞர்களின் சம்ஸ்கிருத ஞானம் எவ்வளவு ஆழ்ந்ததாக இருந்திருக்க வேண்டும்?

இப்படி நம் வாழ்வியலில் கலந்து நம் அனைத்து உள்ளங்களையும் குளிர்வித்து அறிவைப் பட்டைதீட்டி, பாரதத்தின் ஒற்றுமையில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் சம்ஸ்கிருத்தை இன்று “கடினம்” என்றும், “ஆரியமொழி” என்றும், “வந்தேறிய மொழி” என்றும் செத்த மொழி என்றும் கிளிப் பிள்ளை போல பேசுவோர் கூற்றை நம்புமளவிற்கு நாம் வந்து விட்டதன் காரணம், ‘சம்ஸ்கிருதம் கற்பது’ என்னும் தொழிலை நாம் மறந்தது தான்.

பள்ளிகளில் நம் பிள்ளைகள் மொழிப் பயிற்சி பெறுவது ஒரு புறம்; நாம் அனைவரும் இன்றிலிருந்து நம் வாழ்விடங்
களிலேயே சம்ஸ்கிருதம் கற்க ஆரம்பிப்போம். சம்ஸ்கிருதம் எழுதப் படிக்கத் தெரிந்தோர் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்போம். ”கற்றலிற் கேட்டலே நன்று’ என்ற பழமொழிக்கேற்ப உருவாகி
யுள்ளது சமஸ்கிருத பாரதியின் ‘உரையாடல் தொடங்கி உன்னதங்கள் வரை’ எனும் உத்தி. அது எண்ணற்றோரை சமஸ்கிருத்தின் பால் ஈர்த்துள்ளமை கவனம் கவர்கிறது.  “நாப்பாடம் சொல்லி நயம் உணர்வார்” என்கிற நாலடியார் வரியும் பேசிப் பேசி மொழி கற்கும் முறையை வலியுறுத்துகிறதே.

திண்ணைப் பள்ளிகளிலும், பாடசாலைகளிலும் ஆதீனங்
களிலும் தமிழும் சம்ஸ்கிருதமும் இரு கண்களாகவே கற்றுக் கொடுக்கப்பட்டமை ஒழிந்து, இன்று தமிழை நன்கு கற்போரே அரிதாகிவிட்ட நிலை வந்து விட்டது. அண்மைக்காலத்தில் வடலூர் பெருமானார் வள்ளலார் தாம் நிறுவிய பள்ளியில் சமஸ்கிருதம் கற்பிப்பதை கட்டாயமாக்கினார் என்று எங்கள் ஊரில் (மந்தைவெளிப்பாக்கம்) சமஸ்கிருத பாரதி நிகழ்ச்சியில் அருளுரை வழங்கிய சிவத்திரு ஊரன் அடிகளார் தெரிவித்தார். “நான் சமஸ்கிருதம் பயின்றிருந்தால் தமிழ் மொழிக்கு இப்போது செய்வதை விடவும் அதிக அளவு தொண்டு செய்ய முடிந்திருக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (1964 சமஸ்கிருத நாள் கருத்தரங்கில்).

“இளமையில் கல்” எனக் கற்கும் வயதில் போதித்து, ஒன்று, இரண்டு, மூன்றென்ன, கற்கும் பருவத்தில் எத்தனை மொழிகளைக் கற்க முடியுமோ, அவ்வளவையும் கற்றல் வேண்டும் என ஊக்குவித்து நம் தமிழ் மண்ணின் மைந்தர்களை உலகின் தலைவர்களாக ஆக்கும் திறன் பெற்றவர்களாகச் செய்வதை விடுத்து “ஒரு மொழி கற்றலே கடினம்!  மும்மொழிக் கொள்கை நாட்டிற்கு நன்றன்று” என்னும் அரசியலுக்கு நம் இளைய தலைமுறையினரை பலியாக்கும் நிலைமையை மாற்ற நாம் மாறாது முயற்சி செய்தல் வேண்டும்.

.     கட்டுரையாளர்: எழுத்தாளர்