தமிழா உனக்குத் தேவை ஆட்சியா ? அராஜகமா?

இனி தமிழகத்திற்கு தேவை ஆட்சியா, அராஜகமா என்பது நம் அனைவர் மனதிலும் வியாபிக்கும் ஒரு கேள்வி. இதுகுறித்து பலரின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் ஒரு ஹிந்து எழுத்தாளரும், ஒரு கிறிஸ்தவ சமயப் பிரமுகரும் இந்த வாரம் கருத்து பரிமாறிக் கொள்கிறார்கள். சிந்திப்போம்.

 

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டத்தொடங்கி விட்டது. உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடான பாரதத்தில், மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை ஒரு திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. வாக்குகளைச் சேகரிக்க வீதியெங்கும் தொண்டர்படை புடைசூழ வலம் வரும் வேட்பாளர்கள், அவர்களை வரவேற்க ஆரத்திகளோடு காத்திருக்கும் பெண்மணிகள். வீடுதோறும் சின்னங்கள், கொடிகள் என்று ஒவ்வொரு தேர்தலிலும் ஆர்ப்பாட்டங்களுக்கு குறைச்சலே இல்லை.
இத்தனைக்கும் ஜனநாயக முறைப்படி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை நமக்குப் புதிதல்ல. குறைந்தபட்சம் சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களாக இங்கே இருந்துவரும் முறை இது. மானூர், உத்தரமேரூர் போன்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகள், கிராமசபைகளிலும், நகரசபைகளிலும் “குடவோலைத் தேர்தல்” முறை செம்மையாகச் செயல்பட்டு வந்ததைக் காட்டுகின்றன. அந்தக் காலத் தேர்தல் முறையில், நாம் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தகுதியை நிர்ணயிப்பதில் அவர்கள் காட்டிய கறாரான வழிமுறைகள்தான்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இருக்கவேண்டிய முக்கியத் தகுதிகளாக அவர்கள் கருதியது: சொந்தமாக வீடும், வரி செலுத்தக்கூடிய கால்காணி நிலமும் வைத்திருக்க வேண்டும். கல்வியறிவு உடையவர்களாக, அறநெறி பிழையாதவர்களாக, நேர்மையான வழியில் சம்பாதிப்பவர்களாக வேட்பாளர்கள் இருக்கவேண்டும். மூன்று வருடத்திற்குள் அவர்கள் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது போன்றவை. அதேபோல பின்வரும் “தகுதிகளைக்” கொண்டவர்களுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது.
அதாவது, உறுப்பினராக இருந்து கணக்குக் காட்டாமல் இருந்தவர்கள், அப்படிப்பட்டவர்களுடைய நெருங்கிய உறவினர்கள், பஞ்சமாபாதகங்களைச் செய்தவர்கள், தீயவர்களோடு சேர்ந்து கெட்டுப் போனவர்கள், லஞ்சம் வாங்கியோர், அடுத்தவர் பொருளைக் கவர்ந்தோர், ஊருக்குத் துரோகம் செய்தோர், கள்ளக் கையெழுத்துப் போட்டவர்கள் ஆகியோர் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார்கள் என்கின்றன அந்த விதிமுறைகள்.
இப்படி அரசியலில் நேர்மையையும், நல்ல குணங்களையும் எதிர்பார்த்தவர்களாக நம்முடைய முன்னோர்களின் சமுதாயம் இருந்தது, யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதைவிட, யாரையெல்லாம் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதில் நம் முன்னோர்கள் தெளிவாக இருந்தனர் என்பதை மேலே குறிப்பிட்ட விதிமுறைகளிலிருந்து அறிகிறோம்.
ஆனால், இப்போது நேர்மையான அரசியல்வாதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். எத்தனை பேர் தங்களுடைய பதவிக்காலம் முடிந்தவுடன், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கான பணத்தை எப்படிச் செலவழித்தோம் என்று கணக்குக் காட்டுகிறார்கள்? எத்தனை பேர் வருமானத்திற்கு ஈடான சொத்துக் கணக்கைக் காட்டுகிறார்கள்? சராசரி மாத வருமானம் உள்ளவர்கள் கூட கார் வைத்திருக்கும் இந்த நாளில், கோடி கோடியாகச் சம்பாதித்தும் தங்களிடம் கார் கூட இல்லை என்று தேர்தல் சொத்துக் கணக்குக் காட்டும் அரசியல்வாதிகள் அல்லவா, இப்போது இருக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் எந்த மாதிரியான வேட்பாளர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது மிக அவசியம். போட்டியிடுபவர்களில் யாருக்கு ஆகச் சிறந்த தகுதி இருக்கிறது என்பதைக் கவனித்து வாக்களிக்கவேண்டும். இதைத் தவிர, ஹிந்துக்கள் மனதில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயமும் உண்டு. பல்வேறு மதக் குழுக்கள் இன்னாருக்குத்தான் வாக்கு அளிக்கவேண்டும் என்று “உத்தரவு” இட்டு, அந்தக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் அப்படியே வாக்களிக்கும் போது, அதன் தாக்கத்தைக் கவனிக்காமல் வாக்களிப்பது ஹிந்துக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகவே தள்ளிவிடுகிறது. ஹிந்து சமயம் தொடர்பான விஷயங்களில், அவர்களின் குரல் ஒட்டுமொத்தமாக ஒலிக்கவில்லை என்பதால், அரசியல்வாதிகளும் அந்தக் கோரிக்கைகளைக் கேட்பதில்லை.
திருப்பரங்குன்றம் தொடங்கி, கோயில்கள் தொடர்பான விஷயங்களிலும் சரி, மதச்சடங்கு தொடர்பான விஷயங்களிலும் சரி, ஏன் ஹிந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் முறைகளில் கூட, அவர்களின் உரிமைகள் கவனிக்கப்படுவதே இல்லை. நியாயமான உரிமைகளைக் கூடப் போராடியே பெற வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில், எந்த அரசாங்கம் அமையவேண்டும், குறிப்பாக எந்தக் கட்சி ஆட்சியில் அமரவே கூடாது என்பதையும் சிந்தித்து வாக்களிக்கவேண்டிய கடமை, தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு.
நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. அது வெறும் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் கருவி மட்டும் அல்ல, நமது உரிமைகளைக் காப்பாற்றவும், அவை தடுக்கப்படும் போது, அந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் பயன்படும் ஆயுதம். ஆகவே, தேர்தல் நாளில் நம்முடைய வாக்குகளைச் செலுத்துவதுதான் வாக்காளர்களாக உள்ள ஒவ்வொருவருடைய தலையாய கடமை. தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக தேர்தல் நாளை விடுமுறையாகக் கருதி வாக்களிக்காமல் விட்டுவிட்டு, அதன் பிறகு ஐந்து ஆண்டுகளும் நம்முடைய உரிமைகள் பறிபோகின்றதே என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை.
இன்றைய காலகட்டத்தில் உத்திரமேரூரிலிருந்து நாம் கற்க வேண்டிய முக்கியப பாடம் இதுதான்: பொறுப்பற்ற தேர்வினால் ஒழுங்கின்மைக்கும், பலவீனமான அதிகாரத்திற்கும், நாம் வழிவகுத்துவிடக் கூடாது. நமது பிரதிநிதிகளாக யார் இருக்கலாம்/ இருக்கக்கூடாது, தேர்தல் எவ்வாறு நடைபெற வேண்டும், அரசு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் எவ்வாறு காக்கப்பட வேண்டும் என்பதற்கெல்லாம் தெளிவான விதிமுறைகள் முன்பு இருந்தன. அதே உணர்வில், இன்றைய வாக்காளரும் உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து, நிலைத்தன்மை, நல்லாட்சி மற்றும் பெரும்பான்மை சமூக நலன்களின் பாதுகாப்பு இவற்றை உறுதி செய்யும் தேர்வு எது என்பதை ஆராய வேண்டும். ஒற்றுமை இல்லாமல் சிதறும் வாக்குகள் பிரதிநிதித்துவத்தை பலவீனப்படுத்தும்; நமது உரிமைகளை மீட்கும் வழி அதுவல்ல.
வரப்போகும் தமிழகத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்படிப்பட்ட ஒரு தேர்தலில், சிதறும் வாக்குகள் மக்கள் பாதுகாக்க விரும்பும் சமூக முன்னுரிமைகளையே பலவீனப்படுத்திவிடும் என்பதை வாக்காளர்கள் உணர வேண்டும். விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினால், ஆட்சி, கல்வி, வேலைவாய்ப்பு, சட்டம் ஒழுங்கு, கலாச்சாரம், நலத் திட்டங்கள் போன்ற துறைகளில் தங்கள் நியாயமான உரிமைகளைப் பிரதிபலிக்காத முடிவுகளுக்கே அது வழிவகுக்கலாம். தேர்தல் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தை மட்டும் பற்றியது அல்ல; அது ஒரு சமுதாயத்தின் கூட்டு அரசியல் தெளிவையும் குறிக்கிறது. ஆகவே இம்முறை மிகுந்த கவனத்தோடு வாக்களியுங்கள். அனைவரும் கண்டிப்பாக 100% வாக்களிப்போம். நல்லவர்களை தேர்ந்து எடுப்போம்.
கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர்