1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் – 23ஆம் தேதி, ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில், ஜானகி நாத் போஸூக்கும் – பிரபாவதி தத் தாயாருக்கும் மகனாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். சிறு வயதில் இருந்தே, தெய்வ பக்தியுடன், இரக்க குணம் கொண்டு வாழ்ந்தார். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு, சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களால் கவரப் பட்டு, அவர் சம்பந்தமான புத்தகங்களை விரும்பி படித்தார். மேல் படிப்புக்காக இங்கிலாந்து சென்று, அங்கு ஐ.சி.எஸ். (ICS) படிப்பை படித்து, அதில் தேர்ச்சி பெற்றார். விடுதலை வேட்கையால், கிடைத்த வேலையை துறந்து, பாரத நாடு திரும்பி, சுதந்திரம் என்னும் வேள்வியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
உலக நாடுகளுக்கு பயணம்:
நேதாஜி பாரதம் திரும்பியதும், காந்திஜி போன்ற பல சுதந்திர போராட்ட வீரர்கள் உடன் தொடர்பு கொண்டு, “தேசபந்து” என்று அழைக்கப் பட்ட ‘சித்தரஞ்சன் தாஸ்’ அவர்களை அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டு, செயல் பட்டார். சுதந்திரம் வேண்டி, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு முறை சிறை சென்று உள்ளார். அவர் சிறையில் இருந்த போது, தாயார் இயற்கை எய்தினார். அதற்கு செல்ல முடியாததால், மிகவும் வருந்தினார். எனினும், கொண்ட கொள்கையில், மிகவும் உறுதியாக சிறையில் இருந்தார்.
செண்பக ராமன் – நேதாஜி:
செண்பகராமன் அவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் ஆற்றிய சொற்பொழிவு, பலரையும் கவர்ந்தது. பாரத நாட்டில், ஆங்கிலேய அரசின் அடக்கு முறைகளையும், பல்வேறு கொடுமைகளையும், தனது அனல் தெறிக்கும் பேச்சால், எடுத்து உரைத்தார். இந்த எழுச்சிமிகு பேச்சால், “இந்திய மக்கள் படும் துயரம், மற்ற நாட்டு மக்களுக்கும் தெரிய வந்தது”. பாரத நாடு விடுதலை பெற, பல்வேறு நாடுகளின் ஆதரவையும் பெற்றுத் தந்தது. சுத்தானந்த பாரதியார், சுப்ரமணிய சிவா போன்ற பலருடன் பழகி, “ஜெய் ஹிந்த்” என்ற கோஷம் எழுப்புவார்.
“ஜெய் ஹிந்த்” என்ற வார்த்தையால் கவரப்பட்ட நேதாஜி, தன்னுடைய தாரக மந்திரமாக, அதனை எடுத்துக் கொண்டு, பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், எழுச்சி கொண்ட அந்த வாசகத்தை திரும்பத் திரும்பக் கூறி விடுதலை வேட்கையை ஊட்டினார்.
காங்கிரஸ் தலைவராக நேதாஜி:
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கு, 1939 ஆம் ஆண்டு, மார்ச் 29 ஆம் தேதி அன்று, தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில், காந்திஜியின் ஆதரவாளரான டாக்டர் பட்டாபி சீதாராமையா அவர்களுக்கும், நேதாஜிக்கும் பலத்த போட்டி ஏற்பட்டது. அந்த தேர்தலில், நேதாஜி அவர்கள் 1,580 வாக்குகளும், டாக்டர் பட்டாபி சீதாராமையா அவர்கள் 1,377 வாக்குகளும் பெற்றனர்.
அந்த தேர்தலில், 203 வாக்குகள் வித்தியாசத்தில் நேதாஜி வெற்றி பெற்றார். பசும்பொன் உ முத்துராமலிங்க தேவர், நாடு முழுக்க சுற்றுப் பயணம் செய்து, நேதாஜி வெற்றி பெற, முக்கிய பங்கு வகித்தார்.
பின்னர் ஏற்பட்ட மனக் கசப்பால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, மே மாதம் 1939 ஆம் ஆண்டு, “பார்வர்ட் பிளாக்” (Forward Bloc) என்ற கட்சியை துவக்கினார்.
தேவரும் – நேதாஜியும்:
1939 ஆம் ஆண்டு, செப்டம்பர் 3 ஆம் தேதி, நேதாஜி தமிழகத்திற்கு வந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த யாரும், நேதாஜியின் வரவேற்பு நிகழ்ச்சிக்கும், அவர் சார்ந்த எந்த நிகழ்ச்சிக்கும் பங்கு கொள்ளக் கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். அதனையும் மீறி, சென்னையில் பிரபலமான பொறியாளர் ஐயாசாமி அவர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து, வெள்ளி குடை பிடித்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அவரது வீட்டின் மூன்றாவது மாடியில், நேதாஜியை தங்க வைத்தார். அந்த மூன்று நாட்களும், நேதாஜிக்கு சிறப்பாக பணி செய்தார் ஐயாசாமி அவர்கள்.
1939, செப்டம்பர் மூன்றாம் தேதி மாலையில், சென்னை கடற்கரையில் உள்ள திலகர் கட்டடத்தில், ஸ்ரீனிவாச அய்யங்கார் தலைமையில் நடந்த பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில், “தமிழ்நாடு பார்வர்ட் பிளாக்” (Tamilnadu Forward Bloc) என்ற கட்சியின் கிளையைத் தொடங்கி வைத்து பேசினார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளராக, பசும்பொன் உ முத்துராமலிங்க தேவரை அறிவித்தார், நேதாஜி. மேலும், தேவரை “தென்நாட்டு போஸ்” என்று பெருமையுடன் கூறினார்.
நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு, உலக நாடுகளின் ஆதரவை நாடி, பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். “ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று சேர்க்கும்” முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்த நேதாஜியை பிடிக்கும் முயற்சியில் பிரிட்டிஷ் அரசு முயற்சி செய்தது. நமது நாட்டின் விடுதலைக்காக போராடி, 1940 ஆம் ஆண்டு சிறை சென்றார்.
இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டு இருக்கும் அந்த சந்தர்பத்தில், ஆங்கில அரசிற்கு எதிராக, கிளர்ச்சி செய்வதன் மூலம், நமது நாடு சுதந்திரம் பெற்று விடும் என எண்ணி, ஜனவரி 17-ஆம் தேதி 1941 ஆம் ஆண்டு, மாறு வேடம் அணிந்து, சிறையில் இருந்து தப்பித்தார். திடீரென ஹிட்லரின் அழைப்பு வரவே, அவரின் அழைப்பை ஏற்று, இந்திய சுதந்திரத்தைப் பற்றி, ஹிட்லரிடம் பேசி, அவருடைய உதவியை நாடினார்.
இந்திய தேசிய ராணுவம் – Indian National Army (INA):
ராஷ் பிகாரி போஸ் தொடங்கிய, இந்திய தேசிய ராணுவத்தை (INA – Indian National Army) தொடர்ந்து நடத்தி, இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு தீவிர பயிற்சி அளித்தார். சிங்கப்பூரில் 1943 ஆம் ஆண்டு, நடந்த மாநாட்டில், தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடணத்தை வெளியிட்டார். பின்னர், ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன் பர்மாவில் இருந்த படியே, இந்திய தேசிய ராணுவ படையைக் கொண்டு, ஆங்கிலேயரை 1944 ஆம் ஆண்டு எதிர்த்தார். பல காரணங்களால் தோல்வியைத் தழுவி இருந்தாலும், வானொலி மூலம் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பேசினார். “மனச் சோர்வு அடைந்து விடாதீர்கள், நம்பிக்கையுடன் இருங்கள், எப்போதும் நம்மை அடிமைப் படுத்தி வைக்கும் ஆற்றல், இந்த உலகில், வேறு எந்த சக்திக்கும் இல்லை” என்று உரை ஆற்றினார். அவர் விரும்பியது போலவே, ஆகஸ்ட் 15 ஆம் தேதி, 1947 ஆம் ஆண்டு, நமது நாடு விடுதலை அடைந்தது.
INA அமைப்பில், தேவரின் அழைப்பின் பேரில், பல தமிழக இளைஞர்கள் கலந்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதனால், பெரிதும் மனம் மகிழ்ந்த நேதாஜி அவர்கள், “அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், தமிழனாக, தமிழ் நாட்டில் பிறக்க வேண்டும்” என ஆசைப் படுவதாக கூறினார்.
தமிழ் நாட்டு உணவு வகைகளை மிகவும் விரும்பி சாப்பிடும் நேதாஜி அவர்கள், நமது மாநிலத்திற்கு உரித்தான “மிளகு ரசத்தை” விரும்பி சாப்பிடுவார். “மிளகு ரசத்தை” தேசிய பானமாக அறிவித்து விடலாம் என்று கூட, அவர் கூறியதாக, செய்திகள் உலா வருகின்றது.
நேதாஜி படையில் தமிழர்கள்:
நேதாஜியுடன் பசும்பொன் உ முத்து ராமலிங்க தேவர், எப்போதும் நெருக்கமாக இருந்தார். நேதாஜி மேல் கொண்ட பற்றால், “நேதாஜி” என்ற தமிழ் வார இதழ் ஒன்றை தொடங்கினார்.
“கேப்டன் லட்சுமி சாஹல்” என்று அன்புடன் அழைக்கப் பட்ட, லக்ஷ்மி சுவாமிநாதனும், மலேசியா தமிழ் பெண்ணான ஜானகி ஆதி நாகப்பன், ராசம்மா பூபாலன் ஆகியோரும் நேதாஜி பெண்கள் ராணுவ படையான, “ஜான்சி ராணி படை பிரிவை” தொடங்கி சிறப்பாக செயல் பட்டனர். கேப்டன் லட்சுமி சாஹல் கணவர் பிரேம் குமார் சாஹலும், இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றினார்.
தனது 14-வது வயதில், போஸ் பங்கேற்ற ஒரு பேரணியில், கலந்து கொண்ட ஜானகி அம்மாள், நேதாஜியின் கருத்துக்களால் கவரப் பட்டு, தான் அணிந்து இருந்த, விலை உயர்ந்த காதணியை, இந்திய தேசிய ராணுவத்திற்கு நிதி திரட்டுவதற்காக வழங்கினார்.
நேதாஜியின் பிறந்த தினத்தையொட்டி, 2019ஆம் ஆண்டு, டெல்லி செங்கோட்டையில் நேதாஜியின் அருங் காட்சியகத்தை மத்திய அரசாங்கம் திறந்து வைத்தது. தற்போது, “பராக்கிரம திவஸ்” என்ற பெயரில், “துணிச்சல் தினம்” கடைப்பிடிக்கப் படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. நேதாஜிக்கு பெருமை சேர்க்கும் வகையில், 125-வது ஆண்டு கொண்டாடும் இந்த தருணத்தில், நேதாஜியின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் மத்திய அரசை, அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
நேதாஜி எப்படி மரணம் அடைந்தார் என்பது, இன்னும் நிச்சயமாக சொல்ல முடியாத சூழலில், அவர் மக்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை!