திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தை அமைப்பினரும் கி. வீரமணியின் திராவிட கழகத்தினரும் ‘ஆகஸ்டு’ மாதத்தை ‘ஆகத்து’ என்றே குறிப்பிடுவார்கள். காரணம் அதில் ‘ஸ்’ என்ற சம்ஸ்கிருத எழுத்து வருகிறதாம். அதிமுகவில், ஐந்து ஆண்டு எம்.எல்.ஏ. பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, தேர்தலுக்கு முன்பு கட்சி மாறிய பழ. கருப்பையா கூட ‘ஜனதா கட்சி’ என்று குறிப்பிட மாட்டார். ‘சனதா கட்சி’ என்றே குறிப்பிடுவார். காரணம் ‘ஜ’ என்பது சமஸ்கிருதமாம். ஆனால் இந்த தமிழ் ஜீவிகள் கருணாநிதியின் புதல்வர் ‘ஸ்டாலின்’ பெயரை உச்சரிக்கும் போதோ, எழுதும்போதோ எப்படி குறிப்பிடுவார்கள்? அதில் முதல் எழுத்தான ‘ஸ்’ என்பது சமஸ்கிருதமாச்சே…!
‘கருணாநிதி’ என்ற பெயர்கூட சமஸ்கிருதச் சொல்தானே…! அது மட்டுமல்ல தி.மு.கவின் சின்னமான ‘உதய சூரியன்’ என்ற வார்த்தை கூட சமஸ்கிருதம் தான் என்பதை கருணாநிதி மறுக்க முடியுமா?
இதையெல்லாம் கருணாநிதி மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு தமிழகத்தில் ஹிந்தியை எதிர்த்து பெரும் கிளர்ச்சி ஏற்பட்டதுபோல சமஸ்கிருத ‘திணிப்பை’ எதிர்த்து பெரும் கிளர்ச்சி உருவாகும் என்று சமீபத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த கல்வி ஆண்டில் மத்திய அரசு நடத்தும் பள்ளிக் கூடங்களில் மூன்றாம் மொழி வகையில் விருப்பப் பாடமாக சமஸ்கிருதம் இருக்கும் என்ற அறிவிப்பின் எதிரொலியாக இப்படி அவர் பேசுகிறார்.
வழக்கம்போல தமிழகத்தின் மறுமலர்ச்சி நாயகன் வை.கோவும் டாக்டர் அன்புமணியும் சமஸ்கிருதத்தை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் இவர்கள் எல்லோருமே ‘உருது’வுக்காக வக்காலத்து வாங்குபவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
இவர்கள் ‘ஹிந்தி’ கூடாது என்று ஆர்ப்பரிப்பார்கள். அதனால் நம்ம குப்பனும் சுப்பனும் வட மாநிலங்களில் வேலைக்குப் போகும்போது மொழி தெரியாமல் பேந்தப் பேந்த முழிப்பார்கள். ஆனால் தமிழுக்காகவே அவதாரம் எடுத்தவர்கள் போல் காட்டிக்கொள்ளும் இவர்களின் வாரிசுகளான பேரன், பேத்திகளை ஆங்கில மொழிக் கல்வி நிறுவனங்களில் சேர்த்து ஹிந்தி படிக்க வைக்கிறார்கள். தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் இத்தகைய பிரிவினைவாதிகளை சுத்தமாக ஒதுக்கித் தள்ளிய தமிழக மக்களுக்கு கோடி நமஸ்காரம்.