‘வெள்ள நிவாரண நிதி வந்து சேரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட காலக் கெடு தாண்டிவிட்டது. என்றாலும், இதை வைத்துக் கொண்டு தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று கூறிவிட முடியாது,” என்று, தி.மு.க., – எம்.பி., பாலு கூறினார்.
பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்குவதை முன்னிட்டு நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பின், தி.மு.க., – எம்.பி.,பாலு கூறியதாவது:மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிராக கவர்னர்கள் நடந்து கொள்கின்றனர். அதுகுறித்து பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பேசவும், இதற்காக தி.மு.க., சார்பில் கொண்டு வரும் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி தரவும் வேண்டும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படவில்லை. இந்த விஷயத்தில் தமிழகம் புறக்கணிக்கப்படும் நிலையில் அரசு என்ன நினைக்கிறது என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.
புயல் வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர்கள் நேரில் வந்து பார்வையிட்டனர். ஆனாலும், நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. ஜனவரி 27க்குள், நிவாரண நிதி தருவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதியளித்திருந்தார்.
அவ்வாறு அளிக்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. உடனடியாக நிதியை தர வேண்டும். இதை வைத்துக் கொண்டு, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பாக கூற முடியாது.
அரசு ஒரு தேதியை குறிப்பிட்டு சொல்லியுள்ளது. அதுவும் உள்துறை அமைச்சர், பொறுப்புள்ள அமைச்சர். அதை தரவில்லை என்றால், அதற்காக அவரை தண்டிக்க முடியாது. தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிப்பதற்கு எந்த வாய்ப்போ, காரணமோ இருக்கப் போவதில்லை.
‘நீட்’ தேர்வு ரத்து குறித்து ஒவ்வொரு முறையும் பேசுகிறோம். ஆனால், பதில் வரவில்லை. எட்டு நாள் மட்டுமே நடக்கும் பார்லிமென்டின் குறுகிய கால கூட்டத்தொடரில் இது குறித்து விவாதிக்க வாய்ப்பில்லை. தி.மு.க., கூட்டணியில் தொகுதிகளை இறுதி செய்வதற்கு காலக்கெடு நிர்ணயித்து விட முடியாது. இந்த தேதிக்குள் முடித்தாக வேண்டுமென்ற கட்டாயம் ஏதும் இல்லை. எப்படியும் தேர்தலுக்கு முன்பாக அறிவித்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.