அரசியல் நிர்பந்தம், ஊடக அழுத்தம் போன்ற காரணங்களால், தங்களின் பெயர் மக்களிடம், குறிப்பாக சிறுபான்மையினரிடம் கெட்டுவிடக்கூடாது என கருதி செயல்படுகிறது தமிழக அரசு. இதனால் அரசின் முடிவுகள் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுகிறது. உதாரணமாக கொரோனாவுக்கு மருத்துவம் பார்க்காத தனியார் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார். அவர் சிறுபான்மையினர் என்பதால் நிதியுதவி. நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் குடும்பத்துக்கு நிதியுதவி, ஆழ்துளை கிணற்றை மூடாத பெற்றோர்களால் உயிரிழந்த சுஜித் வில்சனின் தாய்க்கு அரசு வேலை, நிதியுதவி. இப்படி தமிழக அரசின் தவறுகளுக்கு பல உதாரணங்கள் சொல்லலாம். நியாயப்படி அரசு சுஜித்தின் தந்தையை கைது செய்திருக்க வேண்டும், மருத்துவருக்கு நிதியுதவி செய்திருக்கக்கூடாது. நீட்டை எதிர்கொள்ள கல்வி தரத்தை உயர்த்தியிருக்க வேண்டும். மனிதாபிமானம் வேறு, அரசு நிர்வாகம் வேறு. மனிதாபிமானத்தை கருதினால், தங்கள் சொந்த பணம், கட்சியின் பணத்தை கொடுத்திருக்கலாம். மக்களின் வரி பணத்தை கொடுப்பது, அரசு வேலை என்பதெல்லாம் சரியான நடைமுறை அல்ல. திமுக முந்திக்கொள்கிறது, அனுதாப அரசியல் செய்கிறது, ஊடகத்தால் ஆதாயம் தேடுகிறது என்பது உண்மைதான். ஆனால், அதை எதிர்கொள்ள நேர்வழி அரசியலையே அதிமுக பின்பற்ற வேண்டும். தற்கொலைக்கு பணம் கொடுப்பது தவறான முன்னுதாரணம் என சமீபத்தில் நீதிமன்றமே இடித்துரைத்துள்ளது. இனியாவது அரசு இதைப்போன்ற விஷயங்களில் நேர் வழியில் நடக்கும் என நம்புவோம்.
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை — திருக்குறள்