கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, தடையை மீறி மாநிலம் முழுவதும் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை நிறுவி, அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்போம் என இந்து முன்னணி அரசுக்குச் சவால் விடுத்துள்ளது.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது ;
தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி விழாவிற்குத் தடை விதித்திருப்பது ஏற்க முடியாதது. இந்த தடை உத்தரவை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தடை காரணமாக விநாயகர் பொம்மை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கும்.
முதல்வர் பதவியில் தான் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என பழனிசாமி பழனியில் குடும்பத்தோடு யாகம் செய்ததை நான் பார்த்திருக்கிறேன். ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் கோயில் கோயிலாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது இந்து கடவுள்களுக்கு மரியாதை அளித்து, விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அனுமதி வழங்கியிருக்க வேண்டும்.
அதிமுகவும் எஸ்.வி.சேகரும்: அன்றும் இன்றும்…
அரசியல் காரணத்திற்காகவும், சிறுபான்மை ஓட்டுக்காகவுமே இப்போது விநாயகர் சதுர்த்தி விழாவிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நக்சலைட் சிந்தனையுள்ள அதிகாரிகள் முதல்வருக்குத் தவறான ஆலோசனை வழங்கி தடை விதித்துள்ளனர்.
தடையை மீறி மாநிலம் முழுவதும் மனித இடைவெளியை உறுதி செய்து ஒன்றரை லட்சம் விநாயகர் சிலையை நிறுவி, இந்து முன்னணி சார்பாக வழிபாடு நடத்தப்படும்.