வரலாற்றில் முதன்முறையாக, மேற்கத்திய நாடுகளில் சமீப காலமாக ஹிந்து மதத்தவர் மீதான எதிர்ப்பு வெறி (ஹிந்துபோபியா) அதிகரித்து வருவதை ஒப்புக்கொண்டும் ஹிந்துமத எதிர்ப்பு வெறியை கண்டித்தும் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண சட்டமன்றம் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம், ஹிந்து மதத்திற்கெதிரான வெறியை அங்கீகரிக்கும் முதல் மாகாணமாக ஜார்ஜியா மாறியுள்ளது. அமெரிக்காவில் ஹிந்துக்களுக்கு எதிரான சம்பவங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்தத் தீர்மானத்தில், அமெரிக்கா மற்றும் ஜார்ஜியாவின் வளர்ச்சிக்கு பாரத அமெரிக்கர்கள் மற்றும் ஹிந்து அமெரிக்கர்களின் அளப்பரிய பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஹிந்து மதத்திற்கெதிரான செயல்பாடுகளை நிறுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியா மாகாண பிரதிநிதி லாரன் மெக்டொனால்ட், சட்டமன்றத்தில் இந்தத் தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்.
தீர்மானத்தில், ஹிந்து மதம் உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான மதங்களில் ஒன்றாகும், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான ஹிந்துக்கள் உள்ளனர். ஹிந்து மதம், பல்வேறு மரபுகள் மற்றும் நான்கு மதப்பிரிவு நம்பிக்கை அமைப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளது. பரஸ்பர மரியாதை மற்றும் அமைதி ஆகியவற்றின் மதிப்புகளை உள்ளடக்கியது. மேலும், ஹிந்துபோபியா இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சனாதன தர்மம் (ஹிந்து மதம்) மற்றும் ஹிந்துக்கள் மீது, விரோதமான, அழிவுகரமான, இழிவான அணுகுமுறைகள், நடத்தைகள் பாரபட்சம், பயம் அல்லது வெறுப்பை தூண்டுதல் போன்ற 16 வகையான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கடந்த சில தசாப்தங்களாக நாட்டின் பல பகுதிகளில் ஹிந்து அமெரிக்கர்களுக்கு எதிராக 19 வெறுப்பு குற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, ‘ஹிந்து எதிர்ப்பு 21 தவறான தகவல்: சமூக ஊடகங்களில் ஹிந்துபோபியா பற்றிய ஒரு வழக்கு ஆய்வு’ என்ற தலைப்பில் ரட்ஜர்ஸ் பல்கலைக் கழகத்தின் அறிக்கையை இந்த தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது. இது சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் செய்திகள், ஹிந்து மத நம்பிக்கையாளர்களுக்கு நிஜ வாழ்க்கை அச்சுறுத்தலாக எவ்வாறு திருப்பப்படுகின்றன என்பதை விவரிக்கிறது.