கடந்த, 12 நாட்களாக இயல்பு வாழ்க்கை முடங்கிய, ஜம்மு – காஷ்மீரின், காஷ்மீர் பகுதியில், அமைதி திரும்புகிறது. பதற்றம் அறவே தணிந்துள்ளதால், இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்ப முன் வந்துள்ளனர். அரசு அலுவலகங்கள், நேற்று வழக்கம் போல இயங்கின. இதையடுத்து, பள்ளி, கல்லுாரிகளை, திங்கள் கிழமை முதல், திறக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது. தடை செய்யப்பட்டிருந்த தொலைபேசி இணைப்புகள், மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன.
ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, 5 ம் தேதி ரத்து செய்யப்பட்டது. மாநிலம், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப் பட்டது. இதையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சாதாரண போன்கள், மொபைல் போன்கள், இணையதள தொடர்பு, கேபிள், ‘டிவி’ சேவைகள் துண்டிக்கப்பட்டன. பிரிவினைவாதம் பேசிய அரசியல் தலைவர்கள், கைது செய்யப்பட்டனர்; சிலர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனால், காஷ்மீரில், சிற்சில கல்வீச்சு சம்பவங்கள் தவிர்த்து, பெரிய அளவிலான எதிர்ப்புகள் எதுவும், கடந்த, 12 நாட்களாக இல்லை.
நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், மாநில அரசின் உயரதிகாரிகளின் போன்கள் செயல்பட துவங்கின. இன்று முதல், படிப்படியாக அனைவருக்கும் இணைப்புகள் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, பள்ளிகளும், திங்கள் கிழமை முதல் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த, 5ம் தேதி, சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்ட நாளில் இருந்து, இதுவரை, வன்முறையில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை; பெரிய அளவிலான காயங்களும் யாருக்கும் ஏற்படவில்லை. எனவே, வரும் நாட்களில், படிப்படியாக நிபந்தனைகள் தளர்த்தப்படும்; கெடுபிடிகள் நீக்கப்படும்; மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்யப்படும். .நேற்றைய நிலவரப்படி, மொத்தமுள்ள, 24 மாவட்டங்களில், 12மாவட்டங்களில், இயல்பு நிலை நிலவுகிறது என ஜம்மு – காஷ்மீர், தலைமை செயலர், பி.வி.ஆர்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.