பாரத கப்பற்படையின் வரலாறு பல போர்க்கப்பல்களின் வீர தீரச் செயல்களால் நிரம்பியுள்ளது. எனினும், ஐ.என்.எஸ். விக்ராந்த் (INS Vikrant – IAC-1) என்ற உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலின் வருகை, தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் திறனில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது.
இந்த ராட்ஸசக் கப்பல், ‘ஆத்மநிர்பர் பாரத்’ இலக்கின் மகத்தான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. பாரதத்தின் கடல்சார் வரலாற்றில் இதுவரை கட்டப்பட்டதிலேயே மிகப்பெரிய கப்பல் இதுவாகும்.
ஐ.என்.எஸ். விக்ராந்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் அதன் சுதேசிப் பங்களிப்பாகும். இந்தக் கப்பலின் ஒட்டுமொத்த உள்ளடக்கத்தில் 76 சதவீதம் உள்நாட்டுப் பொருட்களும், தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, இதன் கட்டமைப்பில் கிட்டத்தட்ட 90 சதவீதம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பாரதத்திலேயே செய்யப்பட்டது. இதன் கட்டுமானத்தில், பாதுகாப்புத் துறையில் கோலோச்சும் BEL, BHEL, GRSE, Keltron, Larsen & Toubro, Wartsila India போன்ற பெரிய தொழில்துறை நிறுவனங்களுடன், 100-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) பங்களிப்பு உள்ளது.
இந்த பிரம்மாண்டக் கப்பலின் திட்டச் செலவு சுமார் ₹20,000 கோடி ஆகும். இந்த ஒற்றைக் கப்பலின் மூலம், பாரதம் விமானம் தாங்கிக் கப்பலை உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டும் திறன் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா போன்ற ஒரு சில உலக நாடுகளின் உயரடுக்கு பட்டியலில் இணைந்து பெருமை கொள்கிறது.
ஐ.என்.எஸ். விக்ராந்தின் காலவரிசை:
தற்போதைய விக்ராந்த், அதன் புகழ்பெற்ற முன்னோடியான பாரதத்தின் முதல் விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தின் (R11) பெயரைத் தாங்கி நிற்கிறது. அந்தக் கப்பல், முதலில் இங்கிலாந்தில் HMS Hercules என்ற பெயரில் 1945ல் தொடங்கப்பட்டு, பின் 1957ல் வாங்கப்பட்டு, 1961ல் பாரத கப்பற் படையில் சேர்க்கப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தக் கப்பல், 1971 பாரதம்- பாகிஸ்தான் போரின்போது, கிழக்கு பாகிஸ்தானில் கப்பற்படை முற்றுகையை உறுதி செய்து, பங்களாதேஷ் உருவாகக் காரணமாக இருந்தது. அதன் நீட்சியாக, புதிய விக்ராந்தின் (IAC-1) கட்டுமானப் பணிகள் 1999ல் திட்டமிடப்பட்டு, 2022 செப்டம்பர் 02 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் பாரத கப்பற்படையில் அதிகாரப்பூர்வமாகப் இணைக்கப்பட்டது.
திறன்கள் மற்றும் தேசியப் பெருமை:
ஐ.என்.எஸ். விக்ராந்த், சுமார் 45,000 டன்கள் எடையுடன் கடலில் மிதக்கும் நகரமாகக் காட்சியளிக்கிறது. இதன் நீளம் 262 மீட்டர்கள், அகலம் 62 மீட்டர்கள் ஆகும். இது அதிகபட்சமாக 28 நாட்டிகல் வேகத்தில் பயணிக்க வல்லது. இக்கப்பலில் சுமார் 1,600 பணியாளர்கள் பணியாற்ற முடியும். இது பாரதத்தின் வளர்ச்சியடைந்த தொழில்நுட்பம், உறுதிப்பாடு மற்றும் சுயசார்புத் திறனின் துல்லியமான பிரதிபலிப்பாகும்.