‘சோம்நாத்’ இந்தச் சொல்லைக் கேட்கும்போதே, நம் இதயங்களில் ஒரு பெருமித உணர்வு ஏற்படுகிறது. இது பாரத ஆன்மாவின் நிலைத்த பிரகடனம். சோம்நாத் சிவலிங்கத்தை தரிசித்தாலே, ஒருவர் பாவங்களிலிருந்து விடுபட்டு, தனது நியாயமான விருப்பங்களைப் பெற்று, மரணத்திற்குப் பிறகு சொர்கத்தை அடையலாம் என்று கூறப்பட்டுள்ளது.
1026-ம் ஆண்டு ஜனவரி மாதம் கஜினி முகமது இந்த ஆலயத்தை தாக்கினார். ஒரு வன்முறை மிகுந்த, கொடூரமான படையெடுப்பின் மூலம், நம்பிக்கையையும், நாகரீகத்தையும் பறைசாற்றும் ஒரு மாபெரும் கலாச்சார சின்னத்தை அழித்தார்.
சோம்நாத்தின் மீது நடந்த முதல் படையெடுப்பு, அந்த நகரத்து மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரம், ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு ஆகியவை பல்வேறு வரலாற்றுப் பதிவுகளில் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைப் படிக்கும்போது இதயம் நடுங்குகிறது. ஒவ்வொரு வரியும் துயரம், கொடுமை ஆகியவற்றால் நிறைந்துள்ளன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அந்த கொடூரம், மற்ற படையெடுப்பாளர்களையும் சோம்நாத் மீது மீண்டும் தாக்குதல் நடத்த தூண்டியது. அது நமது மக்களையும், கலாச்சாரத்தையும் அடிமைப்படுத்தும் ஒரு முயற்சியின் தொடக்கமாக இருந்தது.
ஆனால், ஒவ்வொரு முறையும் ஆலயம் தாக்கப்பட்டபோது, அதைக் காக்க முன்வந்து, தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த மாபெரும் துணிச்சல் மிக்க ஆடவரும், மகளிரும் நம்மிடம் இருந்தனர்.
ஒவ்வொரு முறையும், தலைமுறை தலைமுறையாக, நமது மாபெரும் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள், தாங்களாகவே ஆலயத்தை மீண்டும் கட்டிப் புத்துயிர் அளித்தனர். சோம்நாத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்வதை உறுதிசெய்ய உன்னதமான முயற்சி மேற்கொண்ட அகல்யாபாய் ஹோல்கர் போன்ற மாமனிதர்களை வளர்த்த அதே மண்ணில் நாமும் வளர்ந்திருப்பது நமது பாக்கியம்.
1890-ம் ஆண்டுகளில் சுவாமி விவேகானந்தர், சோம்நாத்துக்கு வருகை தந்தார். அந்த அனுபவம் அவரை மிகவும் நெகிழச் செய்தது. 1897-ல் சென்னையில் ஆற்றிய ஒரு சொற்பொழிவின் போது, அவர் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
அப்போது அவர், “தென்னிந்தியாவின் இந்தப் பழமையான கோயில்களும், குஜராத்தின் சோம்நாத் போன்ற கோயில்களும் உங்களுக்குப் பெரும் ஞானத்தைக் கற்பிக்கும். எந்தவொரு புத்தகத்தையும் விட, நமது இனத்தின் வரலாற்றைப் பற்றிய கூர்மையான பார்வையை, அவை உங்களுக்கு வழங்கும்.
இந்தக் கோயில்கள் நூற்றுக்கணக்கான தாக்குதல்களின் அடையாளங்களையும், நூற்றுக்கணக்கான முறை புத்துயிர் பெற்ற அடையாளங்களையும் எவ்வாறு தாங்கி நிற்கின்றன என்பதைக் கவனியுங்கள்.
அவை தொடர்ந்து அழிக்கப்பட்டாலும், இடிபாடுகளில் இருந்து மீண்டும் எழுந்து, முன்பைவிடப் புத்துணர்ச்சியுடனும், வலிமையுடனும் நிற்கின்றன அதுதான் தேசிய மனப்பான்மை. அதுதான் தேசிய உயிரோட்டம். அதைப் பின்பற்றுங்கள். அது உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.
அதை விட்டுவிட்டால் உயிர்வாழ முடியாது. அந்த உயிரோட்டத்திலிருந்து நீங்கள் விலகும் கணமே, மரணம் விளைவாக அமையும்” என்றார்.
சுதந்திரத்திற்குப் பிறகு சோம்நாத் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் புனிதமான கடமை சர்தார் வல்லபாய் படேலின் திறமையான கைகளுக்கு சென்று சேர்ந்தது. 1947-ம் ஆண்டு தீபாவளி நேரத்தில் அங்கு அவர் மேற்கொண்ட ஒரு பயணம் அவரை மிகவும் நெகிழச் செய்தது.
அதன் விளைவாக, அந்த ஆலயம் அதே இடத்தில் மீண்டும் கட்டப்படும் என்று அறிவித்தார். இறுதியாக, 1951-ம் ஆண்டு மே 11-ம் தேதி, சோம்நாத்தில் பிரமாண்டமான கோயில் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டது.
அதில் அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பங்கேற்றார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண சர்தார் படேல் உயிருடன் இல்லை. ஆனால் அவரது கனவு நிறைவேற்றப்பட்டு தேசத்தின் முன் கம்பீரமாக நின்றது. அப்போதைய பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு, இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
இந்த சிறப்பு நிகழ்வில், குடியரசுத் தலைவரும், அமைச்சர்களும் பங்கேற்பதை நேரு விரும்பவில்லை. இந்த நிகழ்வு இந்தியா பற்றி ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கும் என்று அவர் கூறினார். ஆனால் டாக்டர் ராஜேந்திர பிரசாத் உறுதியாக இருந்து இதில் பங்கேற்றார். அதன் பிறகு நடந்தவை வரலாறு.
சர்தார் படேலுக்கு உறுதியுடன் ஆதரவு கொடுத்த கே.எம். முன்ஷியின் முயற்சிகளை நினைவுகூறாமல் சோம்நாத்தைப் பற்றிய எந்தத் தகவலும் முழுமையடையாது. 1026-ம் ஆண்டில் நடந்த முதல் தாக்குதலுக்குப் பிறகு ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், சோம்நாத்தில் உள்ள கடல் அன்றைய அதே தீரத்துடன் இப்போதும் கர்ஜித்து அலைகளின் ஒலியை எழுப்புகிறது.
சோம்நாத்தின் கரைகளைத் தழுவும் அலைகள் ஒரு கதையைச் சொல்கின்றன. என்ன நடந்தாலும், அந்த அலைகளைப் போலவே, சோம்நாத்தும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறது.
கடந்த காலத்தின் ஆக்கிரமிப்பாளர்கள் இப்போது காற்றில் கலந்த தூசிகளாகி விட்டனர்.
அவர்களின் பெயர்கள் மறைந்து விட்டன. அவர்கள் வரலாற்றின் ஏடுகளில் அடிக்குறிப்புகளாகிவிட்டனர். ஆனால் சோம்நாத் பிரகாசமாக நின்று, அடிவானத்தைத் தாண்டி ஒளி வீசுகிறது. 1026-ம் ஆண்டு தாக்குதலால் சிறிதும் குறையாத நிலையான ஆன்மாவை அது நமக்கு நினைவூட்டுகிறது.
சோம்நாத் ஒரு நம்பிக்கையின் கீதம். வெறுப்புக்கும், மதவெறிக்கும் தற்காலிகமாக அழிக்கும் சக்தி இருக்கலாம். ஆனால் நன்மையின் மீதான நம்பிக்கையும், உறுதியும் அழியாத நிலைத் தன்மையை உருவாக்கும் சக்தி கொண்டவை என்பதை சோம்நாத் நமக்குச் சொல்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாக்கப்பட்டு, அதன் பிறகு தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்ட சோம்நாத் ஆலயம் மீண்டும் எழ முடிகிறது. அதேபோல் படையெடுப்புகளுக்கு முன்பு நமது தேசம் கொண்டிருந்த அதே பெருமையை நம்மால் நிச்சயமாக மீட்டெடுக்க முடியும். ஸ்ரீ சோம்நாத் மகாதேவரின் ஆசீர்வாதங்களுடன், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான புதிய உறுதியுடன் நாம் முன்னோக்கிப் பயணிப்போம்.
− நரேந்திர மோடி
(பாரதப் பிரதமர் மற்றும் சோம்நாத் அறக்கட்டளையின் தலைவர்)