சோதனையிலும் சாதனை படைக்கும் இந்தியப் பொருளாதாரம் : வளர்ச்சிப் பாதையில் உள்நாட்டு உற்பத்தி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2026−-27 நிதியாண்டின் ஏப்ரல்-−-ஜூன் காலாண்டில் 7.8 சதவீதம் உயர்ந்துள்ளது. இது சந்தை எதிர்பார்ப்பான 7.1 சதவீதத்தையும், ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பான 7 சதவீத மதிப்பீட்டையும் மிஞ்சியது. உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள், உயர் எண்ணெய் விலைகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலை இருந்த போதிலும் உள்நாட்டு தேவை, முதலீடு, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் வலுவாக இருந்ததால், இந்த காலாண்டில் 7.8 சதவீதம் வளர்ச்சி சாத்தியமானது.
நிலையான விலையில்
ஜி.டி.பி ரூ. 81.36 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டது, 10.3 சதவீதம் உயர்ந்து, ரூ. 88.27 லட்சம் கோடியை எட்டியது. மொத்த மதிப்பு கூட்டல் 8.2 சதவீதம் வளர்ந்தது. சேவைத் துறை சுமார் 10 சதவீதமும், நிதி, ரியல் எஸ்டேட், ஐ.டி மற்றும் தொழில்முறை சேவைகள் 12.1 சதவீதமும் வளர்ந்தன. உற்பத்தித்துறை 9.2 சதவீதமும், கட்டுமானம் சுமார் 7.7 சதவீதமும், விவசாயம் 3.6 சதவீதமும் வளர்ச்சி கண்டன.
இந்த வளர்ச்சிக்கு முதலீடு முக்கிய உந்துசக்தியாக அமைந்தது. மொத்த நிலையான மூலதன உருவாக்கம் சுமார் 11.9 சதவீதம் உயர்ந்தது. தனியார் முதலீடும் கிட்டத்தட்ட 12 சதவீதமாக அதிகரித்தது. தரவு மையங்கள், மின்சாரம் மற்றும் உலோகங்கள் போன்ற துறைகளில் முதலீடு அதிகரித்துள்ளது. அரசின் மூலதனச் செலவு ஏப்ரல் -−- ஜூலை காலத்தில் ரூ.4.51 லட்சம் கோடியாக இருந்தது.
வங்கிக் கடன் வளர்ச்சி 18.3 சதவீதத்தை எட்டியது. தனியார் இறுதி நுகர்வு செலவு 7.1 சதவீதம் உயர்ந்தது. நிதிப் பற்றாக்குறை கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் எண்ணெய் விலை உயர்வு மற்றும் புவிசார் பதட்டங்கள் போன்ற வெளிப்புற அபாயங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியா தனது எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதி செய்வதால், விலை உயர்வு பணவீக்கம் மற்றும் ரூபாய் மதிப்பில் அழுத்தம் தொடரக்கூடும். பருவமழை நிலைமையால் விவசாய உற்பத்தி மற்றும் கிராமப்புற தேவையை பாதிப்படையலாம்!
ஆனாலும் அரசு உள்கட்டமைப்பு முதலீடும், தனியார் முதலீடும் இணைத்து வளர்ச்சியை ஊக்குவிப்பதை காண முடிகிறது. ஆண்டு நிறைவில் வளர்ச்சி 7 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என சில பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இது இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கு நல்ல அடித்தளம் அமைக்கும் என கருதப்படுகிறது.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : குகத்யா