சேவை மூலமாக தேசத் தொண்டு புரியும் சேவா பாரதி

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து
செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை
தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த முறை சேவை மூலமாக தேசத் தொண்டு புரியும்
சேவாபாரதி பற்றி அறிவோம்…

 

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஆரம்பிக்கப்பட்டது முதல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், சேவைப்பணி செய்து கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் இயற்கை பேரிடர்கள், பெரும் விபத்துக்கள் மற்றும் தேசத்திற்கு அவசரகால தேவைகள் என சங்கத்தின் சேவைகள் பரவிக் கிடந்தன. காலப்போக்கில் சேவை என்பது சமுதாயத்தில் கடைக்கோடியில் இருக்கின்றவர்களுக்கு தேவை என்பதை உணர்ந்து, சங்கத்தில் சேவா விபாஹ் துவங்கப்பட்டது.
சேவையே உயர்ந்த தர்மம், சேவை என்பது நமது பாரதிய கலாச்சாரத்தின் தனித்துவமான பண்பாகும். நமது தேசத்தில் எந்த வேறுபாடும் இல்லாமல், சக மனிதர்களுக்கு நம்மால் முடிந்த எல்லா வகையிலும் சேவை செய்வது என்பது நமது இயல்பான குணமாகும். வேத புராண இதிகாசங்களும் இதையே வலியுறுத்தி வந்தன. நமது பாரதிய வரலாற்றை பார்த்தோம் என்றால் தெய்வங்கள், ரிஷிகள், முனிவர்கள், ஆச்சாரியார்கள், அரசர்கள் மற்றும் சாமானிய மக்கள் என அனைவரும், அவரவர் வாழ்க்கையில் சேவை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆஞ்சநேய சுவாமி சேவைக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.
சுவாமி விவேகானந்தர் சேவையின் சிறப்பை கூறுகையில், “பிறருக்காக எவர் வாழ்கிறார்களோ அவர்களே வாழ்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார். வேதவியாசர், “பரோபகாரம் புண்யாய” என்று கூறியுள்ளார். அந்த பரம்பரையில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்ஹேவார் அவர்களின் நூற்றாண்டு விழாவை ஒட்டி “சேவாபாரதி” என்ற அமைப்பை தொடங்கியது.
சேவா பாரதி, “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற நமது பாரம்பரிய கருத்துப்படி, சமுதாய தொண்டாற்றி வருகிறது. இன்று சேவையின் மூலம் பயன் பெறுவோர் தன்னிறைவு பெற்று, சுயசார்பு பெற்று, வருங்காலத்தில் அவர்கள் நாட்டிற்கு சேவை செய்வோராக வேண்டும் என்ற ரீதியில் சேவாபாரதி செயல்பட்டு வருகிறது.
தற்போது கிட்டத்தட்ட 25 மாநிலங்களில் சேவாபாரதி செயல்பட்டு வருகிறது. இவற்றை ஒருங்கிணைப்பதற்காக ராஷ்டர சேவாபாரதி என்ற அமைப்பு உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநிலத்திற்கான சேவாபாரதி அமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேவாபாரதி சேவை செய்யக்கூடிய இலக்குகள் ஐந்து துறைகளில் உள்ளது.
கல்வி
நமது கலாச்சாரம், தேசத்தின் நற்பண்புகளுடன் கூடிய கல்வியை, சமுதாயத்தில் அனைவருக்கும் குறிப்பாக கடைநிலையில் இருக்கும் மக்களுக்கும், தொலைதூர கிராமங்களில் வசிக்கும் ஏழை எளியோருக்கும், மலைவாழ் மக்களுக்கும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு சேவாபாரதி செயல்பட்டு வருகிறது. தென் தமிழ்நாட்டில் கல்வி சேவை மூலமாக, இலவச டியூஷன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்சமயம் 687 மையங்களில் சேவா பாரதி தன்னார்வலர்களைக் கொண்டு, இந்தப் பணி நடைபெற்று வருகிறது.
ஆரோக்கியம்
இன்றும் கூட, சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை தேவையான சுகாதார வசதிகள் இல்லாமல், சுகாதார அமைப்புகளின் பயன் அவர்களை சென்றடையாமல் இருக்கின்றன. இதை கருத்தில் கொண்ட சேவா பாரதி, மருத்துவ வசதி தேவையுள்ள இடங்களில் பின்தங்கிய மக்கள் வாழக்கூடிய பகுதிகளில், மருத்துவ உதவி மையங்கள் மூலமாக சேவை செய்து வருகின்றது. சேவாபாரதியின் தொடர் மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு முகாம்கள், உபகரணங்கள் உதவி மற்றும் யோகா உடற்பயிற்சி போன்ற நிரந்தர ஏற்பாடுகளையும் சேவா பாரதி செய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மூன்று மொபைல் யூனிட் மூலமாக தினசரி இரு இடங்களில் மருத்துவ சேவைகள் நடைபெற்று வருகின்றன.
ரத்ததான முகாம்கள், ரத்த தாணிகளினுடைய பட்டியல் ஆகியவை தயார் செய்து வைப்பது, உறுப்பு தானங்கள் செய்வதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது, தாய்மார்கள், குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அரசாங்கத்தினுடைய மருத்துவ உதவிகள் சாமான்ய மக்களுக்கு சென்றடைய உதவிகளை செய்வது, மனநலம் குன்றிய குழந்தைகளை பராமரிப்பது, வயோதிகர்கள், ஆதரவற்றவர்களை பராமரிப்பது போன்ற பணிகளையும் “ஆரோக்கியம்” என்ற துறையின் கீழ் சேவாபாரதி செய்து வருகின்றது.
நியூரோ தெரபி கேந்திரங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள், இலவச மருத்துவ கேந்திரங்கள் என ஆரோக்கியம் துறையில், சேவாபாரதி பணி செய்து வருகிறது. தென் தமிழ்நாட்டில் 486 மையங்கள் இத்தகைய ஆரோக்கிய பணிகள் செய்து வருகின்றன.
சமூக நலன்
எல்லா விதமான வசதிகள் இருந்தாலும் கூட, சமுதாயம் ஒரு பண்பட்ட சமுதாயமாக, நமது பாரம்பரியத்தை பேணிப் பாதுகாக்கின்ற சமுதாயமாக, நம்முடைய பாரம்பரிய அடையாளத்தை இழக்காமல் இருப்பதற்காக, சமூக நலன் என்ற துறையின் மூலமாக சேவாபாரதி பணி செய்து வருகிறது. சமூகநலன் துறையிலே, கிராமப்புறங்களில் குறிப்பாக மதமாற்றம் நிகழக் கூடிய சூழ்நிலை உள்ள பகுதிகளை கண்டறிந்து, அவ்விடங்களில் “திருவிளக்கு பூஜை” ஏற்பாடு செய்வது, பஜனை ஏற்பாடு செய்வது, தொடர்ந்து நமது பண்பாட்டை கற்பிக்கக் கூடிய பண்பாட்டு வகுப்புகள் ஏற்பாடு ஆகியவை நடத்தி வருகின்றன.
பண்பாட்டு வகுப்புகள் மூலமாக சிறுவர்களுக்கு நமது ஹிந்து பண்பாடு, கலாச்சாரம் மற்றும் நமது புராண இதிகாசங்கள் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. இதன் மூலம் நல்ல சமுதாயம் உருவாவதுடன், மதமாற்றம் போன்ற சமூக விரோதச் செயல்கள் தடுக்கப்படுகின்றன. தென் தமிழகத்தில் 2,527 இடங்களில் இத்தகைய பண்பாட்டு மையங்கள் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
சுயசார்பு
தேசம் சுயசார்புடையதாக வேண்டுமென்றால், ஒவ்வொரு தனி மனிதனும், ஒவ்வொரு குடும்பமும், சுயசார்பு உள்ளதாக வேண்டும். அந்த கண்ணோட்டத்தில், கிராமப்புறங்களில் சுயசார்பு குடும்பங்களை உருவாக்கி, பொருளாதார சமத்துவத்தை உருவாக்குவதற்காக, சேவா பாரதி செயல்பட்டு வருகிறது இதன்படி கிராமப்புறங்களில் சுயஉதவிக் குழுக்கள் அமைத்து, சுயதொழில் பயிற்சிகளை அளித்து, அதன் மூலம் குடும்பங்களுக்கு நிரந்தரமான வருவாய் வருவதற்கு சேவாபாரதி பணி செய்து வருகிறது. குறிப்பாக வாய்ப்புள்ள இடங்களில் தையல் பயிற்சி, கைத்தொழில் பயிற்சி, வருமானம் ஈட்டக்கூடிய சிறு, குறு தொழில்களை கற்றுக் கொடுக்கின்ற பணியை சேவாபாரதி செய்து வருகிறது.
அழகுக்கலை பயிற்சி மையங்கள், கணினி பயிற்சி மையங்கள், தொழில் திறன் வளர்ப்பு மையங்கள், கைவினை தொழில் பயிற்சி மையங்கள் ஆகியவை சேவாபாரதி மூலம் நடைபெறுகிறது. இதன் மூலம் பல குடும்பங்கள், கிராமங்கள் சுயசார்பு உள்ளதாகி உள்ளன. சுயசார்பு கிராமங்களால், தேசம் நிச்சயமாக சுயசார்பு உள்ளதாக ஆகும். தென் தமிழ்நாட்டில் சுயசார்பு பயிற்சி மையங்கள் சுமார் 72 உள்ளன.
பேரிடர் மேலாண்மை
ஆபத்துக் காலத்தில் உதவுவது என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது ஆர்.எஸ்.எஸ் இயற்கை பேரிடர்கள், பெரும் விபத்துகள் போன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படும் போது, பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எஸ் – சேவாபாரதி தொண்டர்கள், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று தேவையான உதவிகளை செய்து, பேரிடரில் இருந்து மக்களை மீட்டு இயல்பான வாழ்க்கைக்கு கொண்டு செல்லக்கூடிய பணியை செய்து வருகின்றார்கள்.
நாகை, கடலூர், குமரி மாவட்டங்களில் சுனாமியின்போது, சேதம் ஏற்பட்ட பகுதிகளில், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதோடு, நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடு இழந்த மக்களுக்கு, குஜராத், மத்தியப்பிரதேச அரசுகளின் உதவியோடு புதிய வீடுகள் கட்டி வழங்கப்பட்டது.
சுனாமி மீட்புப் பணிகள், சமீபத்தில் வயநாட்டு நிலச்சரிவு பகுதிகளில் மீட்புப் பணிகள் போன்றவைகளை குறிப்பிடலாம். இதற்காக ஆர்வமுள்ள தன்னார்வலர்களுக்கு சேவாபாரதி பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கின்றது. தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையுடன் தொடர்பு கொண்டு, இத்தகைய பயிற்சிகளை பள்ளி, கல்லூரிகளில் செய்து காட்டக் கூடிய பணியையும் சேவாபாரதி தொடர்ந்து செய்து வருகின்றது.

கட்டுரையாளர்: மாநில பொதுச் செயலாளர், சேவா பாரதி தென்தமிழ்நாடு