வைணவ ஆசாரியர் உய்யக்கொண்டாரின் பல சீடர்களில் ஒருவர் மணக்கால் நம்பி. உய்யக்கொண்டாரிடம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அணுக்கத் தொண்டு செய்து வந்தார். உய்யக்கொண்டாரின் மனைவி காலமாகிவிடவே, அவரது பெண் குழந்தைகள் இருவரையும் மணக்கால் நம்பி, கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தார்.
ஒருநாள் இச்சிறுமிகளை நீராட்டி அழைத்துவரும் வழியில், சேறு மிகுந்த வாய்க்கால் ஒன்று குறுக்கிட்டது. நீராடி வந்த சிறுமிகள் அதில் இறங்க பயந்தனர். மணக்கால் நம்பிகள் சற்றும் யோசியாமல், சேற்று வாய்க்காலின் மேல் கவிழ்ந்து படுத்துக்கொண்டார். தம் முதுகின்மேல் பத்திரமாகச் சிறுமிகள் கால் வைத்து நடந்து, வாய்க்காலைக் கடக்கச் செய்தார். வீட்டை அடைந்ததும், தம் உடலில் சேறு போக மணக்கால் நம்பி நீராடச் சென்றார். நடந்ததை அறிந்த உய்யக்கொண்டாரின் உள்ளம் நெகிழ்ந்தது. உமக்கு நாம் செய்ய வேண்டுவது என்ன?” என்று மணக்கால் நம்பியை அவர் கேட்டார்.
உற்றேன் உகந்து பணி செய்து உன்பாதம் பெற்றேன் ஈதேயின்னம் வேண்டுவது எந்தாய்!” என்று கூறித் தங்கள் திருவடி சேவையே அடியேன் வேண்டுவது என்று மணக்கால் நம்பி விண்ணப்பித்தார்.
இனி எதிர்காலத்தில் யமுனைத் துறைவர் என்றழைக்கப்படும் ஸ்ரீமந் நாதமுனிகளின் பேரனுக்கு, உபதேசங்களைத் தக்க காலத்தில் செய்து உதவுக!” என்று மணக்கால் நம்பிகளுக்கு, உய்யக்கொண்டார் கட்டளையிட்டார். அதன்படியே மணக்கால் நம்பிகளும் நடந்து கொண்டார்.
எத்தனையோ ¬மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்