விஸ்வ சம்வாத் கேந்திரம், தமிழ்நாடு கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் நடத்திய நாரதர் ஜெயந்தி’யில் பத்திரிகையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். அகில இந்திய வானொலி, பிரைம் பாய்ண்ட், வின் டிவி இவற்றைச் சேர்ந்த சுதர்சன், ஸ்ரீனிவாசன், நிஜந்தன், ‘குமுதம் சிநேகிதி’ லோகநாயகி ஆகியோருக்கு ரூபாய் 10,000 பணமுடிப்பு நினைவுப் பரிசுடன் விருது வழங்கப்பட்டது.
விஜயபாரதம் ஆசிரியர் வீரபாகு ஆற்றிய தலைமையுரையில், இன்று ஊடகங்களில் உண்மையான பல தகவல்கள் மறைக்கப்படுவதும் தவறான கருத்துகளை மக்களிடம் பரப்பப்படுவதும் நடைபெறுகிறது. இது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றார். “ஒரே நாடு ஒரே மக்கள்’ என்ற கொள்கையுடைய விஸ்வ சம்வாத் கேந்திரம் பல மாணவர்களை ஊடகத் துறையில் பணியாற்ற பயிற்சியளித்து வருவதை பற்றியும் கூறினார்.
அகில இந்திய வானொலியை சேர்ந்த சுதர்சன், நாரதரின் கீர்த்திகளை கூறி, அவர் பத்திரிகையாளர்களின் முன்னோடி என்று புகழுரை சூட்டினார். மேலும் நாரதரின் கலகங்களும் நன்மையில் முடிந்தது. இன்றோ நிலைமை தலைகீழாக உள்ளதாகவும் இன்றைய சுயநலமிக்க மக்கள், தேச பக்தியையும் சுதந்திரப்போராட்ட தியாகிகளையும் மறந்துவிட்டது கூறினார்.
குமுதம் சிநேகிதியின் ஆசிரியர் லோகநாயகி மாறிவரும் சூழலில் ஊடகத்தின் பங்கினையும் பெற்றோர்களின் கடமையையும் பெண்களின் அறிவுசார் முன்னேற்றத்தின் அவசியத்தையும் பற்றி உரையாற்றினார்.
ஆர்.எஸ்.எஸ் அகில பாரத சக பிரச்சார் பிரமுக் நந்தகுமார் பேசுகையில், மகாபாரதத்தில் நாரதர் என்றால் பல வார்த்தைகளுக்கு ஒரு அர்த்தமும் ஒரு பல அர்த்தமும் உடையவர் என்றும் இன்றைய ஊடகங்கள் ஒரே சிந்தனைகளோ கருத்துகளோ இன்றி, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தேசபக்தி இன்றி தவறான செய்திகளை வெளியிடுவதை கூறினார். மேலும் ஒரு பத்திரிகையாளரான காந்தியடிகள் ஒரு பத்திரிகையாளன் உண்மையானவனாகவும் கோபம், வெறுப்பு இன்றியும் எழுதவேண்டும்” என்ற கூற்றை மேற்கோள் காட்டி ஒரு சிறந்த பத்திரிகையாளனின் கடமையை விளக்கினார். அம்பேத்கர், ஹெட்கேவார் போன்றோர் பத்திரிகை துறையில் கடைப்பிடித்த தர்மம், ஆற்றிய சேவைகளை குறிப்பிட்டார்.