வெளிநாட்டிலிருந்து வாங்கவில்லை; பாரதத்தில் உருவாக்கினோம்!” ஹீலியம் இல்லாத MRI-க்குப் பின்னால் ஒரு தமிழரின் அறிவியல் பயணம் ஹீலியம் இல்லாத
எம்.ஆர்.ஐ — ஒரு ‘அட!’ பாரதக் கதை
எம்.ஆர்.ஐ என்றால் என்ன? ஒரு பெரிய இயந்திரத்துக்குள் நம்மை படுக்க வைத்து, உடலுக்குள் இருக்கும் விஷயங்களை வெட்டாமல் படம் எடுப்பது. எக்ஸ்−ரே-க்கு அடுத்த தலைமுறை என்று சொல்லலாம். ஆனால் இந்த இயந்திரத்தின் பின்னால் ஒரு சின்ன பிரச்சினை இருந்தது. ஹீலியம். மிகவும் குளிர்ந்த நிலையில் காந்தத்தை வைத்திருக்க இந்த அரிய வாயு தேவைப்பட்டது. விலை அதிகம், பராமரிப்பு சிக்கல், விநியோகப் பிரச்சினை வேறு. “ஹீலியம் இல்லாமல்
எம்.ஆர்.ஐ செய்ய முடியாதா?”
இந்தக் கேள்வியை பாரதத்தில் ஒருவர் சீரியஸாக எடுத்துக் கொண்டார். அவர் டாக்டர் அர்ஜுன் அருணாசலம். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. அவர் வெளிநாட்டில் படித்திருந்தாலும், அவரது பாரத கல்விப் பயணத்தின் ஒரு முக்கிய அத்தியாயம் சென்னைப் பல்கலைக்கழகம். பின்னர் அமெரிக்காவில் உயர்கல்வி மற்றும் MRI ஆராய்ச்சியில் அனுபவம் பெற்றார். அந்த அனுபவத்தை பாரதத்துக்கு கொண்டு வந்து, Voxelgrids Innovations என்ற நிறுவனத்தின் மூலம் உள்நாட்டு எம்.ஆர்.ஐ தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் இறங்கினார்.
இங்கேதான் கதை சுவாரஸ்யமாகிறது. வெளிநாட்டிலிருந்து ஒரு எம்.ஆர்.ஐ இயந்திரத்தை வாங்குவது ஒரு விஷயம். அதை நாமே உருவாக்குவது வேறு விஷயம். Voxelgrids நிறுவனம் உருவாக்கிய 1.5 Tesla MRI, பாரம்பரிய MRI-களில் இருக்கும் liquid-helium சார்பை நீக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இயந்திரம் compact ஆக மின்சாரத் தேவையும் குறைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பராமரிப்புச் சுமையையும் குறைக்கும் நோக்கில் தயார் செய்யப்பட்டது. அதாவது,
எம்.ஆர்.ஐ என்றால் பெரிய நகரம், பெரிய மருத்துவமனை, பெரிய செலவு என்ற சமன்பாட்டை மாற்றும் முயற்சியில் இதனை ஒரு மாபெரும் சாதனை என்று சொல்லலாம்! வெளிநாட்டு தொழில்நுட்பத்தையோ முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்களையோ சாராமல், பாரத அறிவு மற்றும் பொறியியல் திறனால் மருத்துவ இயந்திரத்தை உருவாக்குவது — அதைவிட பெரிய சாதனை. இதுதான் இந்த முயற்சியின் முக்கியத்துவம். இது ஒரு எம்.ஆர்.ஐ இயந்திரத்தின் கதை மட்டுமல்ல. சென்னையில் கல்வி கற்ற ஒரு பாரதியர், பாரதத்தின் தேவையைப் புரிந்து கொண்டு, உலகத் தரத்திலான மருத்துவத் தொழில்நுட்பத்தை பாரதத்தில் உருவாக்க முயன்ற கதை. இன்று எம்.ஆர்.ஐ. நாளை இன்னும் என்ன? அந்தக் கேள்விக்கான பதில் நம்முடைய ஆய்வகங்களில் எழுதப்பட வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்டது (Made in India) என்று பொருளில் மட்டும் எழுதுவது போதாது. இந்தியாவில் வடிவமைத்து இயந்திரமாக உருவாக்கப்பட்டது (Designed in India. Engineered in India. Solved for India) என்று உலகமே சொல்லும் நாள் வர வேண்டும்.
கட்டுரையாளர்: சமூக ஆர்வலர்