சீட் பெல்ட் அணிய உறுதிமொழி ஏற்போம்

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் பலோன்ஜி குழுமத்தின் தலைவரும் 10 பில்லியன் சொத்து மதிப்பு கொண்டவருமான சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்தார். அகமதாபாத்திலிருந்து மும்பை நோக்கி மெர்சிடஸ் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் எதிர்பாராமல் மும்பைக்கு அருகே பால்கர் என்னும் இடத்தில் உள்ள சூரியா நதியில் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சைரஸ் மிஸ்த்ரி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் முதல் கட்டத்தில் விபத்து நடந்தபோது கார் மிக வேகமாக சென்றது. சைரஸ் மிஸ்த்ரி பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஆனால் சீட் பெல்ட் அணியவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனை மேற்கோள் காட்டியுள்ள மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, “நான் காரில் பயணிக்கும்போது பின் இருக்கையில் அமர்ந்தாலும் இனிமேல் தவறாமல் சீட் பெல்ட் அணிவேன் என்று உறுதிமொழி ஏற்கிறேன். உங்கள் அனைவருக்கும் இதை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். நம் குடும்பத்திற்காக இதை செய்வோம்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சைரஸ் மிஸ்திரியின் தற்செயலான மரணத்திலிருந்து நமக்கும் சில பாடங்கள் உள்ளன. காரை கவனமாக இயக்க வேண்டும், மித வேகம் மிக்க நன்று, நீங்கள் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியுங்கள், முக்கியமாக, பின் இருக்கைகளை அமர்ந்தாலும் கட்டாயம் சீட் பெல்ட் அணியுங்கள் என்பதுதான் அது.

காரில் நாம் நமது பாதுகாப்புக்கான சீட் பெல்டை அணியாவிட்டால் விபத்தின்போது ஏர் பேக் திறக்காது. எனவே விபத்தின்போது சீட் பெல்ட் தான் நமது முதல் பாதுகாப்பு. ஏர் பேக் என்பது இரண்டாவதாகவே இருக்கும்.

அனைத்து கார்களிலும் அரசு விதிமுறைப்படி பின்புற சீட் பெல்ட்கள் உள்ளன. ஆனால் வெகு சிலரே அவற்றை முறையாக பயன்படுத்துகிறார்கள். பின்புறம் அமர்வது மிகவும் பாதுகாப்பானது என்பது ஒரு மாயை. விபத்தின்போது பின்னால் அமர்ந்திருப்பவர் சில சமயங்களில் 40 ஜி (40 மடங்கு புவியீர்ப்பு விசை) வேகத்தில் தூக்கி வீசப்படுவார். அதாவது 80 கிலோ எடையுள்ள நபர் அந்த சமயத்தில் 3,200 கிலோவாக இருப்பார்.

ஒருவேளை முன்பக்க பயணி சீட் பெல்ட் அணிந்திருந்தும், பின்பக்க பயணி அணியாமல் இருந்தால், விபத்தின் போது, ​​யானையின் எடையுடன் பின்பக்க பயணி விழுவதால், முன்பக்க பயணி பலத்த காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ வாய்ப்புள்ளது.

எனவே, அன்புள்ள கார் பயனர்களே, காரை பயன்படுத்தும்போது நாம் சீட் பெல்ட்களுக்கும் சேர்த்தே பணம் செலுத்துகிறோம். பின்னர் ஏன் அவற்றை நாம் பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கக்கூடாது?