கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் 200 வெண்கல சாமி சிலைகள் (உற்சவ மூர்த்திகள்) பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் அலாவுதீன் கில்ஜி, மாலிக்காபூர் போன்ற கொள்ளைக்காரர்களின் கொள்ளிக்கண் படாமல் காப்பாற்றுவதற்காக கோயில் அர்ச்சகர்களும் ஊர்மக்களும் சேர்ந்து புதைத்து வைத்த விக்கிரகங்கள். இவற்றை ஒளித்து வைத்த இடத்தை சொல்ல மறுத்து கொடூரமாகக் கொல்லப் பட்டவர்கள் எத்தனையோ அடியார்கள்.
ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் ஷாகாவில் “எங்கெங்கும் திருக்கோயில், புனித நீர், திருத்தலம்; செங்குருதி சிந்தி வீரர் தூய்மை காத்த திருவிடம்” என்று பாரத மண் பற்றிப் பாடுவதன் நிஜ பதிவு அது. இப்படியெல்லாம் பக்தர்கள் காப்பாற்றிய விக்கிரகங்களை மாபியா கும்பல் கடத்திச் சென்று வெளிநாட்டு வியாபாரிகளிடம் காசுக்கு விற்கும் கயமையை ஒரு ஆங்கிலப் புத்தகம் தோலுரித்துக் காட்டுகிறது.
THE IDOL THIEF என்ற இந்தப் புத்தகத்தை எழுதிய விஜயகுமார் சிங்கப்பூர் ஷிப்பிங் நிறுவன நிர்வாகி. தமிழகத்தின் தொன்மையான சிற்பிகளின் கலை நுணுக்கத்தை உலகறியச் செய்வதற்காக வலைப்பூ ஒன்று தொடங்கி அதில் பல கோயில்களில் உள்ள உற்சவ விக்ரகங்களை பதிவிட்டார். வந்த எதிர்வினைகள் அவரை தூக்கிவாரிப் போடச் செய்தன. இவர் எந்த விக்கிரகங்களை படம் எடுத்து பதிவிட்டாரோ அவற்றின் ஒரிஜினல்கள் பல நாடுகளின் அருங்காட்சியகங்களில் இருப்பதாக வலைப்பூவை பார்வையிட்ட கடல் கடந்த நம்மவர்கள் தெரிவித்தார்கள். என்ன அர்த்தம்? தமிழகக் கோயில்களில் மிஞ்சியவை களவு போனவற்றின் போலிகள்!
பல நாடுகளின் காவல்துறை சார்ந்த சிலை மீட்பு டீம்கள் இவர் தொடர்புக்கு வந்தன. நாளாவட்டத்தில் உலகின் மிகப்பெரிய சிலை கடத்தல்காரன் சுபாஷ் கபூர் உள்ளிட்ட பல மலைவிழுங்கிகள் சட்டத்தின் பிடியில் சிக்கின. (கபூரின் நியூயார்க் கிடங்கில் மட்டும் கைப்பற்றப்பட்ட உற்சவ மூர்த்திகள் உள்ளிட்ட தொன்மையான பாரத கலைப் படைப்புகள் 750 கோடி ரூபாய்க்கு மேல் விலை போகக்கூடியவை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்). நாளொன்றுக்கு 3 விக்கிரகங்கள் வீதம் ஆண்டில் சுமார் 1,௦௦௦ சிலைகள் கடத்தப்படுகிறது என்பது நூலாசிரியர் தெரிவிக்கும் தகவல். ஆவணப்படுத்தாத ஆயிரங்களில் ஒரு ஆயிரம் இது. மற்றவை? தேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த கையோடு ஆஸ்திரேலியாவின் கைமுறுக்கப்பட்டு அங்கிருந்து சுமார் 200 உற்சவமூர்த்திகள் 2014 ல் பாரதம் திரும்பின.
இவ்வளவு சிலைகள் திருடு போயிருக்கிறது. அறநிலையத்துறை என்ன செய்தது? சித்தமல்லி, ஸ்ரீ்புரந்தான் கிராமங்களில் சோழர் கால நடராஜர், சிவகாமி சிலைகள் களவாடப்பட்ட பிறகு சிலைகள் காப்பகத்திற்கு அவற்றை எடுத்துச் செல்வதற்காக அறநிலையத்துறை அதிகாரிகள் சாவகாசமாக அந்த ஊர்களுக்குப் போன அவலக் கதையை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. விஜயகுமார் எழுதியுள்ள முதல் புத்தகமாம் இது. படிக்கத் தொடங்கினல் கீழே வைக்க மனது வராதபடி விறுவிறுப்பாக கதை நகர்கிறது. இது நிஜத்தின் பதிவு என்பது கவனத்திற்கு வரும் போது முள்ளாய் உறுத்துகிறது. நெஞ்சு கனக்கிறது. நமது விக்கிரகங்களை அருங்காட்சியகங்களில் அழகாகத்தானே காட்சிப்படுத்துகிறார்கள் என்று நினைத்து ஏமாறக்கூடாது. சிலை வடிக்கும் போதே சிற்பிகள் அதில் உயிர் பதித்துத் தருவது பக்தன் மனம் ஒன்றி வழிபடவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன்தான்.
சிலை கடத்தல் என்பது வெறும் திருடன்-போலீஸ் சங்கதி அல்ல, சர்வதேச சதிகாரர்கள் திட்டமிட்ட ரீதியில் பாரத கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நிர்மூலமாக்க தோது பார்க்கிறார்கள் என்ற கோணத்தில் பார்த்தால் ஆபத்து எவ்வளவு பெரியது என்பது புரியும்.