சில பயணங்கள்.. சில பதிவுகள்.. மேலும் சில பதிவுகள்

4. நாலு வார்த்தையில் நாட்டியம்

கும்பகோணத்து மடத்துத் தெருவில் இருக்கும் சித்தி ரெசிடென்சி ஹோட்டல், 2013. வரவேற்பறை சோபாவில் வசதியாக நான். நேரம் காலை 6 மணி, கடந்த மூன்று நாட்களாக இங்கே தான் வாசம். அதாவது ரிசப்ஷனில் இருக்கிறேன். நாள் வாடகையாக ரூபாய் ஆயிரம் வசூலிக்கும் இந்த ஓட்டலின் அறையில் செய்தித்தாளைப் படிக்க முடியாதபடி வெளிச்சக் குறைவு. அறையை காலி செய்யும்போது மேற்படி காரணங்களுக்காக ஏதாவது ஆடி தள்ளுபடி செய்யப்படுமா என்று கேட்க வேண்டும்.
கண்ணாடிக் கதவை திறந்து உள்ளே வருபவரும், செல்பவரும் ஒவ்வொருவரும் என் கவனச் சிதறல்களுக்கு காரணம் ஆகிறார்கள். முக்கால் பேண்ட் என்.ஆர்.ஐ, இடுப்பில் பேரனோடு மடிசார் பெண்மணி, ஆட்கள் புடைசூழ வரும் கரைவேட்டி என்று வரிசையாக. சிலர் எதிரில் இருக்கும் முருகன் கஃபே திறந்து விட்டது என்று பரபரப்பாக வெளியேறுகிறார்கள். இத்தனை கூத்தையும் திறக்கப்படாத மெடிக்கல் ஷாப்பின் பெயர் பலகையில் இருந்து அபிராமி பார்த்துக் கொண்டிருக்கிறாள். நான் அசராமல் “கடைசிக்கோடு” படித்துக் கொண்டிருக்கிறேன். ரமணன், கவிதா வெளியீடு. குறிப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன். இதோடு மூன்றாவது முறையாக, பேனா மூடி சோபா இடுக்கில் விழுந்து, அதை நான் தேடி எடுத்து, ரிசப்ஷனில் இருந்த பெண் சிரித்தாரா இல்லையா என்பது உறுதிப்படவில்லை. உலகத்தின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்திற்கு ‘எவரெஸ்ட்’ என்ற பெயர் எப்படி வந்தது என்பது ‘கடைசிக் கோடு’ என்ற புத்தகத்தில் இருக்கிறது. கர்னல் ஜார்ஜ் எவரெஸ்ட் என்ற சர்வே அதிகாரியின் பெயர்தான் உலகத்தின் மிக உயரமான மலை சிகரத்திற்கு சூட்டப்பட்டு இருக்கிறது. எவரெஸ்ட் மலை மீது இந்த அதிகாரியின் கால் பட்டதா என்பது படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த வரிகள்:
சரித்திரம் என்பது காலத்தால் மறந்து போகக் கூடியது. பூகோளம் என்பது காலம் கடந்து நிலைத்து நிற்பது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியான மதராஸ் கவர்னரின் ஆணையை விட, ஆடை அணியாத ஈட்டி ஏந்திய ஒரு மலைவாசியின் மொழி அங்கு வலிமையானதாக இருந்திருக்கிறது. ஞாயிற்றை “சங்கிலியால் அளக்கலாமோ’’ என்றார் மகாகவி பாரதியார். சங்கிலியை நில அளவைக்கு பயன்படுத்தும் முறை அவருக்கு தெரிந்திருக்கிறது இந்தப் புத்தகம் நில அளவைப் பற்றி.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பாரதத்தில் முதல் சர்வேயர் ஆக நியமிக்கப்பட்டவர் கேப்டன் வில்லியம் லாம்ப்டன் (1802). இவரைப் பற்றியும் இவருடைய ஊழியர்களைப் பற்றியும் சொல்லும் புத்தகம் தான் இது. “இந்தியா வரைபடத்துக்கான முதல் கோட்டை வரைந்த உடன் அது பற்றிய குறிப்பை லாம்ப்டன், கல்கத்தாவில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு அனுப்புகிறார். இந்தக் குறிப்பு கவர்னர் ஜெனரல் பார்வையில் பட, ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது. காலம் தாழ்த்துவது என்ற அரசாங்க முறைமைக்கு பிரிட்டிஷ் ஆட்சியும் விதிவிலக்கல்ல என்ற செய்தி நமக்கு ஆறுதலாய் இருக்கிறது.
பாரதிய வரைபடத்தை சற்று உற்று நோக்கினால் கன்னியாகுமரி, ஹைதராபாத், நாக்பூர், ஆக்ரா எல்லாம் ஒரு நேர்கோட்டில் அமைந்திருப்பதை பார்க்கலாம். இந்த நேர்கோடு, முக்கோண விவரங்கள் ஆரம்பத்தில் நமக்கு சலிப்பாக இருந்தாலும், போகப்போக நாமே சர்வேக்கான சங்கிலிகளை சுமக்க ஆரம்பித்து விடுகிறோம். தியோடலைட் கருவியை தஞ்சை பெரிய கோயிலின் மேலே ஏற்ற முயன்ற போது கயிறு அறுந்து விட்டது என்பதை விறுவிறுப்பாக சொல்கிறார். நமக்கு அந்தக் காட்சியின் முடிச்சு இன்னும் அவிழவில்லை.
கவர்னர் ஜெனரல் லார்ட் வில்லியம் பென்டனிக் படகிலிருந்து இறங்குகிறார். ஹூக்ளி நதியின் மறு கரையிலிருந்து ஒரு ஆடம்பர படகிலிருந்து வந்து இறங்குகிறார். அதன் பெயர் சோனா முக்கி. அவரது சொந்த உபயோகத்திற்காகவும், இரவில் நில ஒளியில் நதியில் செல்வதற்காகவும் நிர்மாணிக்கப்பட்டது. கரையில் இறங்கி மெய்க் காப்பாளர்கள் சூழ மாளிகைக்குள் வந்தபின் லாம்டன் அறிமுகப்படுத்தப்படுகிறார்…
“சரியாக முதல் இந்திய மேப் தயாராக இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகும்?”
“ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள்”.
“நோ. அது மிகவும் தாமதம் ஆகிவிடும். நாம் இப்போது முக்கால் இந்தியாவை கையில் வைத்திருக்கிறோம். சில நாட்களில் இந்த நாடு முழுவதும் நம் ஆட்சியில். அதற்குள் எனக்கு முழு தேசத்தின் மேப் தேவை. நமது எல்லைகள், வரி வசூலிக்க வேண்டிய பகுதிகள் தெளிவாக இருந்தால் தான் சரியாக நிர்வகிக்க முடியும்”
“முயற்சிக்கிறேன் சார்”.
“பிரிட்டிஷ் தளபதிகள் முயற்சிப்பவர்கள் இல்லை முடிப்பவர்கள்”.
“சரி சார்”.
அதிகார வட்டத்தின் உயர் மட்டத்தில் உரையாடல்கள் ஏதும் இருப்பதில்லை. எல்லாம் உத்தரவுகள் தான் என்பது அழகாக விளக்கப்பட்டு இருக்கிறது.

‘சங்க நூல்களும் வைதிக மார்க்கமும்’ என்ற நூல் பி.எஸ் சுப்பிரமணிய சாஸ்திரி இயற்றியது. திருப்பனந்தாள் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருணந்தி தம்பிரான் சுவாமிகளின் பொருளுதவியால் 1951ல் வெளியிடப்பட்டது. இந்த நூல், பாலையில் கிடைத்த பருகு நீர். ஒரு பக்கம் இமயம்போல் தொடரும் வேத, புராண, உபநிஷத்கள். இன்னொரு பக்கம் ஆழமறியாப் பெருங்கடல், தமிழ்ச் செல்வங்களை வைத்திருக்கும் ஆழ்கடல் இரண்டையும் ஒப்பிட்டுக் கொண்டே செல்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி. சலிப்பே அறியாத சாஸ்திரி ஒப்பீடுகளை ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே போகிறார். சமஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் அப்படி ஒரு பாண்டித்யம்.
உதாரணம் பக்கம் 36.
கரிகால பெருவளத்தான். தருமத்தை ஐயமற உணர்ந்த அந்தணரை கொண்ட சபையில் வேள்வி முறைகளை நன்கு அறிந்த ரித்விக்குகள் செய்ய வேண்டியவற்றை நன்கு செய்து காட்ட கற்புடைய மனைவியுடன் வேள்விச்சாலையில் இருந்து கருட சயனம் செய்து புகழைப் பெற்றான் பெருவளத்தான். இச்செய்தி புறநானூற்றில் 224 ஆம் செய்யுளில் உள்ளது.
பாண்டியரும், சோழரும், சத்திரியர்கள் அதனால் அவர்கள் வேள்விகளில் ஈடுபட்டனர் என்று வாதாடுகிறார், சுப்பிரமணிய சாஸ்திரி. நீத்தாருக்கு செய்ய வேண்டிய சடங்குகளின் அவசியத்தைப் பற்றி ஒரு பக்கம் மகாபாரதமும், புறநானூறு, பரிபாடல், மலைப்படுகடாம் ஆகியவை இன்னொரு பக்கமும் ஒரே அளவில் வற்புறுத்துவதை சாஸ்திரி சுட்டிக்காட்டுகிறார்.
தமிழர் வேறு, ஹிந்து சமயம் வேறு என்ற பதாகையை, பஞ்சு பஞ்சாக செய்ய இந்த ஒரு புத்தகம் போதும். இதைத் தமிழ் அன்பர்கள் பரப்புரை செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

சாதாரணமாக எல்லா வீட்டிலும் விசேஷங்களில் கல்யாணங்களில் நடக்கக் கூடியது தான் இது. விருந்தினரை அழைக்க பத்திரிகை வைக்கும் போது, ஒரு நண்பரை கூடவே அழைத்துச் செல்வோம். நிகழ்ச்சி நெருங்கும் போதுதான், அந்த நண்பருக்கு பத்திரிகை வைக்கவில்லை என்பது நினைவுக்கு வரும். நானும் அப்படித்தான். முதலில் எழுத வேண்டிய விஷயத்தை, இப்போது எடுத்து எழுதுகிறேன். அபிராமி அந்தாதிக்கு உள்ள வெவ்வேறு உரைகளைப் பற்றி சொல்கிறேன்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் முருகவேள் உரையோடு கூடிய புத்தகம் ஒன்று கிடைத்தது. பிறகு காஞ்சிபுரம் ஸ்ரீமத் ராமானந்த யோகி எழுதிய விருத்தியுரை படித்தேன். பிறகு நான்கு தொகுதிகளாக வந்த கி.வா. ஜகந்நாதன் எழுதிய உரையைப் படித்தேன். நூலகத்தில் பி.கே சண்முகநாதன் எழுதிய புத்தகம் இருந்தது. அதை ஊன்றி படித்தேன். திருமதி தேவகி முத்தையாவின் உரையையும் கண்டேன்.
கி.வா.ஜ உரையை விருந்து சாப்பாடு என்றும் முருகவேள் விளக்கத்தை வீட்டு சாப்பாடு என்றும் சொல்லலாம். ராமானந்த யோகியின் புத்தகத்தைக் கட்டுச்சாதம் என்றும் தேவகி முத்தையாவின் உரையை கல்கண்டு சாதம் என்றும் சொல்லலாம். இத்தனை இருந்தும் சண்முகநாதன் உரை தனிச் சிறப்புடையது. அது தாய்ப்பால் போல வெளிப்படுகிறது. சண்முகநாதன் உரையை வாங்குவதற்காக திண்டுக்கல்லுக்குப் பயணம் போனேன். அங்கே அபிராமி ஆலயத்தில் “உங்களைப் போல் நிறைய பேர் புத்தகம் கேட்டு வராங்க சார்” என்ற பதில் மட்டும் கிடைத்தது. பின்னர், என் அவா அறிந்த ஒருவர். புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்தார். வாசகர்கள் அனுபவிப்பதற்காக கொஞ்சம் கொடுக்கிறேன்.
“கொள்ளேன் மனத்தின் நின் கோலமல்லாது” என்ற வரிகளுக்கான விளக்கம்: சில மேதாவிகள் சர்வ சமய சமரசம் என்று பேசிக்கொண்டு, ஒன்றிலும் நிலைத்திராமல் எல்லா சமயமும் ஒன்றுதான் என்று மிக்க அனுபவசாலிகள் போலக் கூறுகின்றனர். இது வாயளவே.
ரயில் நிலையத்தில் நின்று கொண்டு அதன் வழியாகப் போகும் எல்லா தொடர்களும் சென்னைக்குத் தான் போகின்றன என்ற அறிவு மட்டும் நம்மை சென்னை கொண்டு சேர்க்காது. ஏதேனும் ஒரு ரயிலை தேர்ந்தெடுத்து, அதில் பிரயாணம் செய்ய யோக்கியதையை கொடுக்கும் டிக்கெட்டை வாங்கி அந்த ரயில் வரும்போது, அதில் ஏறி அமர்ந்தாலே சென்னை செல்ல முடியும். அதுபோல மனிதனின் பிரதான லட்சியமான மோட்சத்தை அடைய விரும்புகிறவன், ஏதாவது ஒன்றை மர்க்கட முஷ்டியாக பிடித்துக் கொண்டு, ஒழுக வேண்டும். அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில் நான்கு வார்த்தைகள். அதை வைத்துக்கொண்டு நவரச நாட்டியமாடுகிறார் சண்முகநாதன்.
தொடரும்…

கட்டுரையாளர் : சுப்பு