14. தமிழ் இலக்கிய வரதராசன்
பொய் சொல்லும் பழக்கமில்லை என்பதால் தர்ம புத்திரனுடைய ரதம் தரையைத் தொடாது என்று பல காலமாக இங்கே சொல்லப்படுகிறது. நண்பன் ரவியும் அப்படித்தான். ரவியுடைய வாகனம் பூமியைத் தொடாது என்று வைத்துக்கொண்டால், ஷோபனாவின் வாகனம் பூமிக்கே வராது. மந்தவெளியில் இருந்து மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலுக்குப் போவதற்கு அவளுக்கு வழி தெரியாது. எனவே நான் எஸ்கார்ட்.
ஒரு முறை சமையல்கார மாமி லீவு போட்டு விட்டார். “சுப்பு நாளைக்கு மாமி வர மாட்டார். நான் தான் சமைக்கணும் நீ காத்தால வந்துடு எனக்கு பேச்சுத் துணையாக இருக்கும் என்று சொல்ல மறுநாள் காலையில் மந்தவெளி வீட்டில் நான்.
பெரிய விருந்து இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் விருந்தேயில்லை. குக்கர் வைத்து சாதம், சாம்பார், தயிர் சாதத்திற்கு ஊறுகாய் என்பதாக ஒரு முன்னெடுப்பு. சமையல் கட்டில் குக்கரை வைத்துவிட்டு வாசலறையில் உட்கார்ந்திருக்கும் எனக்கு இடையிடையே ஆங்கில இலக்கியப் பயிற்சி. கோல்ரிச் எழுதிய “Rhyme of the Ancient Mariner” என்ற கவிதையை என்னுடைய மூளையில் ஏற்றிவிட வேண்டும் என்பது அவளுடைய திட்டம்.
பெருமளவு வெற்றி என்று சொல்ல முடியாவிட்டாலும், எனக்கும் ஆங்கிலக் கவிதைக்கும் இடையே இருந்த இடைவெளி கொஞ்சம் குறைந்துவிட்டது. ஆனால் முழுமையாக ரசிக்க முடியாமல் எப்போது குக்கர் வெடிக்குமோ என்று பயத்திலேயே நான் இருந்தேன். பயம் என்பது ஷோபனாவுக்கு கிடையாது. வீட்டில் மின்தடை ஏற்பட்டால், தைரியமாக பியூஸ் பாக்சில் கை வைத்து சரி செய்வது அவள்தான். அவளுக்கு பின்னே ரவி, ரவிக்குப் பின்னே சுப்பு.
அந்தக் காலத்தில் (1970களில்) செய்திகளுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை மட்டுமே நம்பியிருந்தோம். அதிலும் ஷோபனாவுக்குத்தான் முதலிடம். அரசாங்கத் துறையில் பணி செய்வதாலும், அன்றாடம் எல்லா வீட்டு டி.வி.யிலும் தென்படுவதாலும், ஷோபனா அதிகார பீடத்தில் இருப்பதாக சிலர் நினைப்பதுண்டு. காலை நேரத்தில் யாரோ ஒருவர் வந்து, ஷோபனாவிடம் ஒரு கோரிக்கை வைத்துவிட்டுப் போவார். அவர் அந்தப் பக்கம் போனவுடன் ஷோபனா இந்தப் பக்கம் வருவாள்.
“சுப்பு, உனக்கு தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் யாரையாவது தெரியுமா” என்று கேட்பாள்.
“என்ன விஷயம்“
“அயனாவரத்தில் இருந்து வந்திருந்தார். அவருக்கு லோன் வேணுமாம்“
“எனக்கு ஒரு விஜபியைத்தான் தெரியும். அது இங்கு செல்லுபடியாகுமா என்று தெரியவில்லை” என்று சொல்வேன்.
“யார் அந்த விஐபி?”
“பராசக்தி”
அப்பாவித்தனமாக “சரி பராசக்தியிடம் சொல்லு” என்று சொல்ல, நானும் அதன்படி செய்ய, நாலில் இரண்டு பலித்துவிடும்.
அடுத்த வாரம், செங்கல்பட்டில் இருந்து ஒருவர். இந்த முறை காலேஜ் அட்மிஷன். அதற்கும் சிபாரிசு தேவைப்பட, அதுவும் பராசக்தியிடம் சொல்லப்பட, அதுவும் நடந்துவிட, அவர் முதல் வேலையாய் செங்கல்பட்டு பூராவும் இந்தச் செய்தியைப் பரப்பிவிடுவார். இந்தப் படையெடுப்பை என்ன செய்வதென்று நாங்கள் யோசித்து, யோசித்து…
A gaja mum bumium paradx nan saruvamum anavane. இது என்னவென்று யோசிக்க வேண்டாம். இந்தியாவிற்கு வந்த போர்த்துக்கீசியர்களில் சிலர் தமிழக கடற்கரைக்கு வந்தார்கள். அவர்கள் தமிழ் மொழியில் ஆர்வம் கொண்டு எழுதிய வரிகள் தான் இவை.
“ஆகாசமும், பூமியும் படைத்தவன் சர்வமும் ஆனவனே” என்ற தமிழ் வரிகளை அவர்கள் பாஷையில் எழுதி இருக்கிறார்கள். இத்தகைய தமிழ்ச்செல்வங்கள் உலகம் பூராவும் உள்ள அருங்காட்சியகங்களில் கொட்டிக் கிடக்கின்றன. தஞ்சை மன்னன் ரகுநாத நாயக்கர், டென்மார்க் நாட்டு அரசருக்கு எழுதிய கடிதம், பொன் ஓலையில் எழுதப்பட்டது. டென்மார்க் நாட்டு மியூசியத்தில் பத்திரமாக உள்ளது. உலகம் போற்றும் தமிழுக்கு உள்ளூரில் என்ன இடம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
தமிழ் மொழி காலங்கள் தோறும் வரையறுக்கப்பட்ட இலக்கண வரம்பிற்கு ஏற்றவாறு தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. ஒவ்வொரு சொல்லும், எழுத்தும் எவ்வாறு பிறக்கிறது என்பதையும், அதற்கு வேண்டிய நா, உதடு, பல், அன்னம் இவற்றின் முயற்சிகளையும் இலக்கண நூல்கள் பிரித்துக்காட்டுகின்றன.
இப்படிப்பட்ட அன்னைத் தமிழுக்கு அணிகலனாய் டாக்டர் மு. வரதராசனார் எழுதிய புத்தகம் தமிழ் இலக்கிய வரலாறு / சாகித்திய அகாடமி. இந்தப் புத்தகத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார் மு.வ. அவர் எழுதியபடி தமிழ் இலக்கிய கால அட்டவணை.
பழங்காலம் – சங்க காலம்
கிமு 500 /கிபி 200
அகம் புறம் பற்றிய பாட்டுகள்.
நீதி இலக்கியம்
கிபி 100 /கிபி 500
திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம்.
இடைக்காலம்
பக்தி கிபி 600/கிபி 90
நாயன்மார், ஆழ்வார், கலம்பகம்
காப்பிய இலக்கியம்
கிபி 90/கிபி 1200
சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய சமண, பௌத்த நூல்கள்
இறையனார் கலவியல் முதலிய இலக்கண நூல்கள்
சேக்கிழார், கம்பர், ஒட்டக்கூத்தர், அவ்வையார்
உலா, பரணி, பிள்ளைத்தமிழ்
உரை நூல்கள்
கிபி 1200/கிபி 1500
இளம்பூரணர், பேராசிரியர்
வைணவ, சைவ சித்தாந்த நூல்கள்.
புராண இலக்கியம்
கிபி 1500/கிபி 1800
புராணங்கள், தல புராணங்கள்,
இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர் உரைநடை வளர்ச்சி.
இக்காலம்
19ஆம் நூற்றாண்டு
கிறிஸ்தவர், ராமலிங்கர், நாவல், கட்டுரைகள்,
இருபதாம் நூற்றாண்டு
பாரதி, கல்கி, புதுமைப்பித்தன்,
சிறுகதை, நாவல், நாடகம்,
வாழ்க்கை வரலாறு, கட்டுரை, ஆராய்ச்சி.
பழங்காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கி வந்த தமிழ் மொழியில் தோன்றி வளர்ந்த இலக்கியங்களில் ஒரு பகுதி இன்று வரையில் காக்கப்பட்டு வருகிறது. அந்தப் பழைய தமிழை சங்க இலக்கியம் என்ற பெயரால் பிரிக்கப்படுகிறது. தொல்காப்பியனார் என்ற பழம் புலவர் ஒருவர் அன்றைய மொழியையும், நூல்களையும் ஆராய்ந்து “தொல்காப்பியம்” என்ற இலக்கண நூலை இயற்றியுள்ளார். சங்க இலக்கியம், தொல்காப்பியம் என்ற இரண்டுமே பழைய தமிழ் மொழி. இந்தியாவில் பேச்சு வழக்கில் உள்ள மொழிகளின் இலக்கியங்களுள் மிகப் பழமையானவை இவைகளே ஆகும். (பக்கம் 30)
திராவிட இயக்கமும், மு.வ.வும் சமகாலத்தவர்கள். ஒரே காலத்தில் வாழ்ந்தாலும், அந்த கோட்பாடுகளில் ஒட்டாமல் வாழ்ந்தவர் மு வ. வடமொழியில் இலக்கியச் செல்வத்தையும், சமயக் கருத்துகளையும், கலைக் கொள்கைகளையும் விரிவாக எழுதி வைத்தார்கள். அவ்வாறு வடமொழியில் எழுதி வைத்தவர்களில் பலர் தென்னாட்டு அறிஞர்கள் என்பதை பலர் மறந்து விடுகிறார்கள். (பக்கம் 18)
தமிழ் இலக்கிய வரலாறு குறித்து பல நூல்கள் வெளிவந்தாலும். மு.வ.வின் தனி சிறப்பு சார்பின்மை. ஒரு கருத்தை நேர்மையாகவும், விளக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எழுத முடியும் என்பதற்கு மு.வ.வின் தமிழ் இலக்கிய வரலாறு ஒரு எடுத்துக்காட்டு.
பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதை வில்லிட மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும் தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்தடித்து மேதேவர்ஆர மார்பன் வாழ்க என்று பந்தடித்துமே.
வஞ்சி மாநகரில் மகளிர் பந்து அடித்து ஆடும் போது, பாடுவதாக உள்ள பாடல் பந்தடிக்கும் போது, பெண்கள் அசையும் அசைவை புலப்படுத்தும் ஓசை நயம் உள்ளது. (சிலப்பதிகாரம், – பக்கம் 104)
தமிழ் மொழியின் சொற்கள் அடிச்சொற்களோடு மற்ற உறுப்புகள் சேர்ந்து ஒட்டி அமையும் சொற்கள். ஆகவே சொற்களின் அமைப்பு தெளிவாகத் தோன்றும், மிகப் பழைய இலக்கியங்களில் உள்ள சொற்களும் அவ்வாறு அமைந்தனவே. அவற்றின் அடிச்சொற்களும் இக்காலத்து சொற்களின் அடிச்சொற்களும் ஒரே வகையானவை. “உணா” என்பது பழைய சொல். “ஊண்”, “உண்டி” என்பன இடைக்கால சொற்கள். “உணவு” என்பது இக்காலச் சொல். அடிச்சொல் “உண்” என்பது மூன்றிலும் தெளிவாகத் தெரிகிறது. விகுதி முதலியன மட்டும் வேறுபடும். ஆகவே சில முறை படித்த பிறகு பழங்காலத்து செய்யுளும் பழகிய தமிழாகவே உணரப்படுகிறது. (பக்கம் 09)
அளக்க முடியாத பொருளை அளக்க முயன்றிருக்கிறார், விவரிக்க முடியாத பெருமையை விவரிக்க முயன்றிருக்கிறார், தமிழின் அளவைக் கண்டு அவர் அஞ்சவில்லை, அதன் அழகில் அவர் மயங்கியிருக்கிறார், என்று மு.வ.வை வாழ்த்துவோம். கட்டுரையை எழுதி முடித்து தலைப்பு வைக்கும் போது தடையில்லாமல் வந்தது ‘தமிழ் இலக்கிய வரதராசன்.’
கட்டுரையாளர் : சுப்பு
தொடரும்…