சினிமாவை விஞ்சிய காங்கிரஸின் நாடகம்

ராமாயணம், மஹாபாரதம் தொடர்கள் துவங்கி பாகுபலி போன்ற படங்களில், சண்டைக் காட்சிகளில் பல்லாயிரக்கணக்கான போர் வீரர்களை காட்ட “கிராபிக்ஸ்” பயன்படுத்துவார்கள். மொத்தமே 500 பேர் என்றாலும், லாங் ஷாட்டில், அந்த 500 பேரை நூறு இடத்தில் திரும்பத் திரும்ப ஒட்டினால் 50,000 பேர் இருப்பது போல அந்தக் காட்சி பிரம்மாண்டமாக திரையில் தெரியும்.
நாடக கம்பெனி காங்கிரசும், இப்போது அதே டெக்னிக்கை கையிலெடுத்துள்ளார்கள். பிரதமர் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக 2026 நவம்பர் 1 அன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில், 10 லட்சம் பேர் திரள்வோம் என்று கொக்கரித்தார்கள். ஊடகங்களும், ஏதோ பெரிதாக நடக்கபோகிறது என்றெல்லாம் தூபம் போட்டார்கள். நிகழ்ச்சியன்று, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர், அவர்கள் சார்பு ஊடகங்கள், 5 லட்சம் வந்தார்கள், 10 லட்சம் வந்தார்கள் என தங்கள் வாய்க்கு வந்த எண்ணிக்கையை அடித்து விட்டார்கள். தமிழ்நாட்டில் ஒரு தொலைக்காட்சி, 2 கோடி பேர் பங்கேற்றனர் என பொய் செய்தி பரப்பியது.
சரி, இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள். தனியார் நியூஸ் ஏஜென்சி ஒன்று காங்கிரசுக்கு தெரியாமல் டிரோன் மூலம் மைதானத்தை வீடியோ எடுத்து வெளியிட்டது. பல சமூக ஊடகங்கள், மைதானம் சென்று கணக்கிட்டார்கள். அவர்கள் தரும் புள்ளி விவரம் இது.
டெல்லியில் கடும் மழைப்பொழிவு காரணமாக, மைதானத்தின் ஒரு பகுதி, சேறும் -சகதியுமாக இருந்தது. அந்தப் பகுதியில் ஒரு நாற்காலி கூட போடப்படவில்லை. மீதமுள்ள இடத்தில், சுமார் ௨௮,௦௦௦ நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. இதில் சுமார் ௨௧,௦௦௦ நாற்காலிகளே நிரம்பியிருந்தன. மைதானத்திற்கு வெளியேயுள்ள சாலைகளில் நின்றுக் கொண்டும், அமர்ந்துக் கொண்டும் இருந்தவர்கள் அதிகபட்சம் ௧௦,௦௦௦ பேர்தான் இருப்பார்கள். மொத்தமாக இந்த கூட்டத்திற்கு வந்தவர்கள் ௩5,000 முதல் 50,000 பேர்.
போலீசார் மைதானம் சுற்றியுள்ள பகுதிகளில், டிரோன் மற்றும் நேரடியாக நடத்திய ஆய்வின்படி, இந்த கூட்டத்திற்கென குறைந்தபட்சம் 45,000 அதிகபட்சம் 60,000 பேர்தான் டில்லி நகருக்குள் வந்திருக்கலாம் என்று தெரிவிக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த 50,000 பேரை, 23 கட்சிகள் சேர்த்து திரட்டியுள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மமதா பானர்ஜி கட்சி, முஸ்லீம் லீக், இடதுசாரி மாணவர்கள், அகிலேஷ் யாதவ் கட்சி, லாலு பிரசாத் கட்சி, சரத் பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எல்லோரும் சேர்ந்து, கொண்டு வந்த கூட்டம். எதற்கு வந்தோம், என்ன பிரச்சனை என்றே தெரியாமல், காசு கொடுத்து அழைத்து வந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.
10 லட்சம் பேரை திரட்டுவோம் என்று சூளுரைத்து, அதில் 5 சதவிகிதம் திரட்டவே மூச்சு முட்டிய காங்கிரஸ் கட்சி, பாகுபலி சினிமா டெக்னிக்கை கையில் எடுத்தது. கிராபிக்ஸ், ஏ.ஐ., எல்லாம் வைத்து பிரம்மாண்டமாக காட்ட முற்பட்டது. காங். தயவில் வயிறு வளர்க்கும் சில ஊடகங்கள், எங்கோ நடந்த பழைய நிகழ்ச்சி படங்களை வெளியிட்டு அல்ப திருப்தியடைந்தார்கள். இன்னொரு நகைச்சுவையாக அர்ஜெண்டினா அணி கால்பந்து உலகக்கோப்பையை வென்ற போது நடந்த வரவேற்பு கூட்டத்தின் போட்டோ மற்றும் கேரளாவில் ஒரு கடை திறப்புவிழாவிற்கு நடிகை ஒருவர் வந்த போது, அவரை காண திரண்ட கூட்டத்தின் போட்டோ எல்லாம் கூட, ‘ராகுலை காண வந்த கூட்டம்’ என்று பரப்பி மகிழ்ந்தார்கள்.
இன்றுள்ள Gen Z பற்றி இன்னமும் இண்டி கூட்டணிக்கு தெரியவில்லை. மிகவும் புத்திசாலிகளான அவர்கள், காங்கிரஸ் கட்சியினர் போட்ட போட்டோக்கள், வெளியிட்ட செய்திகளின் உண்மைத்தன்மையை அடுத்த 1 மணிநேரத்தில், ஆதாரத்துடன் அப்பளமாக நொறுக்கி விட்டார்கள்.