ஒருநாள் ரமண மகரிஷி ஆசிரமத்திலுள்ள சமையல் அறைக்குள் நுழைந்தார். அங்கே தரையில் அரிசி இரைந்துக் கிடப்பதைக் கண்டார். கீழே குனிந்து ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கி மூட்டை அரிசியோடு சேர்ந்தார்.
வெகுநேரமாய் ரமணரைக் காணாத பக்தர்கள் அவரை நாலாபுறமும் தேடினர். சிலர் அவர் சமையலறையில் அரிசி பொறுக்கிக் கொண்டிருப் பதைப் பார்த்தனர். ‘வீட்டையும் உறவையும் துறந்து வந்த மகான் சிந்திக்கிடக்கும் அரிசியைப் பொறுக்குகிறாரே’ என வியந்தனர். ‘ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவர் தரிசனத்துக்குக் காத்துக் கிடக்க இந்தப் புழுக்கத்தில் இவருடைய சக்தி வீணாகிறதே’ என வருந்தினர்.
‘‘ஸ்வாமி ! பக்தர்கள் கொடுத்த ஏராளமான அரிசி மூட்டைகள் இங்கேயும் கிடங்கிலும் இருக்கின்றன. சிந்திய அரிசிக்காக இத்தனை கஷ்டப்பட வேண்டுமா?’’ என்றனர்.
‘‘இவைகளை வெறும் அரிசியாகப் பார்க்காதீர்கள்! விவசாயிகளின் உழைப்பு, மழை, சூரிய ஒளி, காற்று, மண்வளம், உரச்சத்து எல்லாம் கலந்திருக்கிறது. இது காலில் மிதிபடலாமா? அமுதசுரபியில் ஒட்டியிருந்த ஒரு பருக்கைச் சோறுதான் பாண்டவர்களைத் துர்வாசரின் சாபத்திலிருந்து மீட்டது என்று படித்தால் ஆயிற்றா? இதைப் பறவைகளுக்குத் தூவினால் அவை பசி ஆறுமே!’’ என்றார்.