சிக்கிம் வெள்ளம் மீட்பு பணியில் களம் இறங்கிய இந்திய விமானப்படை வீரர்கள்

சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நம் விமானப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுஉள்ளனர். வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், லாச்சென் பள்ளத்தாக்கில் சமீபத்தில் மேக வெடிப்பால் பலத்த மழை கொட்டியது. இதனால், தீஸ்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சுங்தாங் அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில், 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், ராணுவ வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை, 34 ஆக உயர்ந்துள்ளதாக சிக்கிம் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது. சிக்கிமை ஒட்டிய மேற்கு வங்க மாநிலத்தில் 40 உடல்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணியரை மீட்கும் நடவடிக்கையில் நம் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக, லாச்செனில் சிக்கியிருந்த வயதானவர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணியர் ஏராளமானோர், விமானப்படை ஹெலிகாப்டர் வாயிலாக மங்கன் மாவட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுங்தாங் மாவட்டத்தின் ரபோம் கிராமத்தில் சிக்கியுள்ள, 200க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் விமானப் படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு, மருத்துவம் உள்ளிட்ட முதலுதவி உதவிகளும் விமானப் படை வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு, இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை சிக்கிம் அரசு முடுக்கிவிட்டுள்ளது.