சர்வதேச மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை!

சர்வதேச மோட்டார்சைக்கிள் கூட்டமைப்பான எஃப்ஐஎம் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பை போட்டியில் மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை ஐஸ்வர்யா பிஸ்ஸே.

இந்தப் போட்டி மொத்தம் 4 ரேஸ் பந்தயங்களை உள்ளடக்கியதாகும். இந்த நான்கிலும் பங்கேற்ற ஒரே வீராங்கனையும் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக துபையில் நடைபெற்ற பந்தயத்தில் மகளிர் பிரிவில் பங்கேற்ற ஒரே வீராங்கனை ஐஸ்வர்யா மட்டுமே. இதனால், அவரே அந்தப் பிரிவில் முதலிடம் வந்தார்.

போர்ச்சுகலில் நடைபெற்ற இரண்டாவது பந்தயத்தில் ஐஸ்வர்யா உள்பட 3 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
அதில் ஐஸ்வர்யா மூன்றாவதாக வந்தார். அடுத்தபடியாக ஸ்பெயினில் நடைபெற்ற பந்தயத்தில் பங்கேற்ற 5 வீராங்கனைகளில் 5ஆவது இடத்தைப் பிடித்தார் ஐஸ்வர்யா.

உலக சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி பந்தயம் ஹங்கேரியில் அண்மையில் நடந்து முடிந்தது.
இதில் பங்கேற்ற 4 வீராங்கனைகளில் ஐஸ்வர்யா நான்காவது இடம்பிடித்தார். ஒட்டுமொத்தமாக அதிக (65) புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் ஐஸ்வர்யா, மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்தார்.

இந்தியாவிலிருந்து சர்வதேச மோட்டார்சைக்கிள் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.

மிகவும் கடும் சவாலை எதிர்கொண்டு இந்தப் பட்டத்தை வென்றுள்ள ஐஸ்வர்யா கூறுகையில், ஹங்கேரியில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் நான் வெற்றி பெறவில்லை என்றாலும் என் வாழ்க்கையில் நான் பங்கேற்ற மிகச் சிறந்த போட்டியாக இதைக் கருதுகிறேன். இந்தப் பந்தயத்தில் பங்கேற்க வேகம் மட்டும் போதாது; பொறுமையும் நிதானமும் வேண்டும். நான் 250-சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிளைப் பயன்படுத்தினேன். என்னுடன் பங்கேற்ற பிற வீராங்கனைகள் 450-சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிளைப் பயன்படுத்தினர். இதனால், அவர்களுக்கும் எனக்கும் 25 நிமிடங்கள் இடைவெளி ஏற்பட்டது. இருப்பினும், மகளிர் பிரிவில் இந்தியா சார்பில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணான ஐஸ்வர்யா பிஸ்ஸே, கடந்த ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் சர்வதேச அளவில் முதல் முறையாக பங்கேற்றார். அப்போது பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்.  அத்துடன், முடங்கிவிடாமல் காயத்திலிருந்து மீண்டு வந்து வெற்றி வாகை சூடி, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வரலாறு படைத்த அவருக்கு இந்திய மோட்டார்சைக்கிள் கூட்டமைப்பு (எஃப்எம்எஸ்சிஐ) வாழ்த்து தெரிவித்தது.

5 முறை தேசிய சாம்பியன்ஷிப் (ரோடு ரேஸ் மற்றும் ரேலி சாம்பியன்ஷிப்) பட்டத்தை வென்று சாதனை படைத்த முதல் இந்திய வீராங்கனையான ஐஸ்வர்யா, அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மோட்டார்சைக்கிள் விளையாட்டில் மிகச் சிறந்த பங்களிப்பு செய்த வீராங்கனை என்ற விருதை எஃப்எம்எஸ்சிஐ, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டில் ஐஸ்வர்யாவுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
மோட்டார்சைக்கிள் பந்தயம் ஆண்கள் மட்டுமே பங்குபெறும் விளையாட்டல்ல; பெண்களாலும் சாதித்துக் காட்ட முடியும் என்று நிரூபித்து வரும் ஐஸ்வர்யா பிஸ்ஸே தொடர்ந்து பல போட்டிகளில் வென்று, தாய்நாட்டுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துவோம்!