சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஜயபாரதம் தேசிய வார இதழ்

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த முறை சமுதாய நலன், பண்பாட்டு விழுமியங்கள், தேச ஒருமைப்பாடு ஆகிய கருத்துக்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கி வரும் விஜயபாரதம் வார இதழ் பற்றி அறிவோம்…

 

மக்களுக்காக இயங்கும் எந்த அமைப்பும், மக்களை சென்று சேர பிரச்சார சாதனங்கள் இன்றியமையாதவை. அந்தவகையில், நூற்றாண்டு கண்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) செய்தி வெளியீட்டுத் துறையில், உ.வே.சா, பாரதியார், திரு.வி.க, கல்கி கிருஷ்ணமூர்த்தி, கி.வா. ஜகந்நாதன் என பல முன்னோடிகளின் அடியொற்றி செய்தி வெளியீட்டுப் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் இயங்கி வருகிறது, தமிழகத்தின் போர்வாளாக ‘விஜயபாரதம் வார இதழ்’.
1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, ஆரம்பகாலத்தில் பிரச்சார சாதனங்களில் கவனம் கொடுக்கவில்லை இயக்கக் கட்டமைப்பில் மட்டுமே அதன் கவனம் ஆரம்பத்தில் இருந்தது. சில நேரங்களில் அரசும், சித்தாந்த ரீதியாக சங்கத்தை எதிர்த்தவர்களும் முன்வைத்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்க மட்டுமே சிறிய பிரசுரங்களை வெளியிட்டு வந்தனர். அதுவரை கொள்கை விளக்கத்திற்காக சிறு துண்டுப் பிரசுரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன.
சுதந்திரம் பெற்ற பிறகு கருத்துப் பரவலாக்கத்தில் பத்திரிகைகளின் தேவை உணரப்பட்டது. ஆனால் சுதந்திரம் பெறுவதற்கு சில வாரங்கள் முன்னதாகவே, சங்கத்தின் முன்னெடுப்பில் 1947ல் ஆங்கிலத்தில் ‘ஆர்கனைசர் வார இதழும், ஹிந்தியில் ‘பாஞ்சஜன்யா’ வார இதழும் தொடங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, நாட்டின் பிரதான மொழிகள் பலவற்றிலும் சங்கத்தின் சிந்தனையைத் தாங்கி, வார இதழ்கள் தொடங்கப்பட்டன.
விவேக் (மராத்தி), சாதனா (குஜராத்தி), தியாகபூமி, விஜயபாரதம் (தமிழ்), கேசரி, ஜன்மபூமி (மலையாளம்) விக்ரமா (கன்னடம்), ஜாக்ருதி (தெலுங்கு), ஸ்வஸ்திகா (வங்கம்), ராஷ்ட்ரதீப் (ஓடியா), ஆலோக் (அஸாமி) போன்ற பிரச்சார நோக்கிலான பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. இவை அனைத்தும் சங்க வட்டாரத்தில் விழிப்புணர்வுப் பத்திரிகைகள் (ஜாக்ரண் பத்ரிகா) என்று அழைக்கப்பட்டன.
நன்னெறி வரலாறு
பாரதம் சுதந்திரம் அடைந்த புதிதில் மக்களுக்கு நமது வரலாற்றை, நமது மொழிகளில், நம்மவர்களால் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதை தேசபக்தியுள்ள அனைத்து பெருமக்களும் உணர்ந்தார்கள். அதன் விளைவாக “நன்னெறி” பிறந்தது. 1948 மத்தியில் எளிமையான சிறு செய்தித்தாள் வடிவில் நன்னெறி வெளிவரத் தொடங்கியது. கலாச்சார விழிப்புணர்வூட்டும் செய்திகளைத் தாங்கி வெளிவந்த வார இதழ் அது
தியாகபூமி வரலாறு
ஹிந்துக்களின் கலாச்சார தலைமை பீடமான மதுரை மாநகரில் இருந்து 1950 வாக்கில் “தியாகபூமி” வார இதழ் சஞ்சிகை வடிவத்தில் (Tabloid Format) வெளிவரத் தொடங்கியது. அதன் துவக்க கால ஆசிரியர்களுள் ஒருவர் சமூக சேவகரான ஒபுளா கே நித்யானந்தம். சுதந்திரக் காற்றை சுவாசிக்க தொடங்கியிருந்த பொதுமக்களுக்கு, தேசம் அன்னியர்களிடம் அடிமைப்பட்ட காரணங்களையும், போராடி பெற்ற சுதந்திர வரலாற்றையும் எளிய தமிழில் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஊட்டுவதில் “தியாகபூமி” முன்னணி வகித்தது.
‘தியாக பூமி’ வார இதழ் முதலில் மதுரையில் இருந்து 1950ல் வெளியானது. 1960ல் சென்னை, சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதன் முதல் ஆசிரியராக, காலஞ்சென்ற சங்கப் பிரசாரகர் திரு. சுப்பராவ் இருந்தார். அவரை அடுத்து சி.கனகராஜன் ஆசிரியராகச் செயல்பட்டார். 1973ல், ஆசிரியராக எஸ்.எஸ்.மகாதேவன் பொறுப்பேற்றார். பழைய அச்சுத் தொழில்நுட்பத்தில் இந்த இதழ் வெளிவந்தது.
1857ல் முதல் சுதந்திரப் போர் எனும் மகத்தான பேரெழுச்சி, 1957ல் நூற்றாண்டு கண்ட போது, தியாகபூமி அது குறித்து அரிய தகவல்கள் அடங்கிய மலர் ஒன்றை வெளியிட்டது.
விரிவான வரலாற்று ஆய்வுக்கு பிறகு, 1974ல், “சத்ரபதி சிவாஜி மஹாராஜா முடிசூட்டியதன் 300வது ஆண்டு விழா மலர்” வெளியிட்டது, தியாகபூமி. இது விழிப்புணர்வுள்ள பொதுமக்களின் கவனத்தை, கருத்தைக் கவர்ந்தது. தியாக மலர், தேசபக்தி மலர், தொண்டு மலர் என்று பண்பின் அடிப்படையில் அரிய தகவல்கள் தொகுத்து மலர்கள் வெளியிட்டு புகழ் பெற்றது. கலாச்சாரம் வற்றடிக்கப்பட்ட சூழலில், வளர்ந்து வரும் அடுத்த தலைமுறையினர் கண்ணில் அரிய பண்புகளைக் காட்டுவதற்காக, இத்தகைய ஒரு பணியை சிரமேற்கொண்டது தியாகபூமி.
1975 ஆம் ஆண்டு நாட்டில் நெருக்கடிநிலை திணிக்கப்பட்டபோது, ‘தியாகபூமி’ தடை செய்யப்பட்டது. அதன் ஆசிரியரும், நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். அதையடுத்து நெருக்கடிநிலை நீக்கப்படும் வரை, தியாகபூமி வெளியாகவில்லை.
விஜயபாரதம் வரலாறு
1977ல் நெருக்கடிநிலை விலக்கிக் கொள்ளப்பட்டு, தேர்தலில் நிகழ்ந்த மத்திய ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, மீண்டும் ‘தியாகபூமி’ தொடங்கி சில இதழ்கள் வெளியாகின. எனினும் கால மாற்றத்திற்கு ஏற்ற புதிய வடிவில் பத்திரிகை வெளிவர வேண்டும் என முடிவு செய்யப்பட்டு அதன் விளைவாக, 1978 ஜூலையில் விஜயபாரதம்’ தேசிய வார இதழ் தொடங்கப்பட்டது. அதன் முதல் ஆசிரியராக ஹண்ட்ரட் ஜி ஸ்ரீநிவாசன் பொறுப்பேற்றார்.
அவரை அடுத்து, திருவாளர்கள் சாது வே.ரங்கராஜன், சு.வெங்கட்ராமன், சிவராம கிருஷ்ண சர்மா, சுந்தர. ஜோதி (1995 – 2004), சடகோபன் (2004 –- 2006), ம. வீரபாகு (2006 –- 2020), குரு சிவகுமார் (செப்டம்பர் 2020 – 2021, அக்டோபர்) ஆகியோர் செயல்பட்டனர். தற்போது இதன் ஆசிரியராக பெ.வெள்ளைதுரை உள்ளார்.
விஜயபாரதம் அலுவலகம், முதலில் சென்னையில் பெரம்பூர், படேல் சாலையில் இயங்கியது. அடுத்து ரங்கசாயி தெருவில் இயங்கிய இதன் அலுவலகம், 1995ல் சேத்துப்பட்டு சங்க கார்யாலயத்திற்கு எதிரே உள்ள காசி பில்டிங்கிற்கு இடம் மாறியது. 2017 முதல் புரசைவாக்கத்தில் டாக்டர் அழகப்பா சாலையில் இயங்கி வருகிறது.
தமிழகத்தில் பிரிவினை வாதத்தையும், மொழி வெறியையும் கொண்டாடும் சூழல் பரவியிருந்த வேளையில், தன்னலம் இல்லாமல் மொழி, ஜாதி, சமய பேதம் பார்க்காமல் எளியோர் மத்தியில் தொண்டு புரியும் நல்லோர் பற்றி மக்களுக்கு எடுத்துச் செல்லும் அர்த்தமுள்ள பணியை விஜயபாரதம் தொடர்ந்து செய்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் தீபாவளி மலரை வெளியிட்டு வருகிறது. இதன் மலர்கள் தமிழக பத்திரிகையாளர்கள். வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜயபாரதம் தீபாவளி சிறப்பிதழை தனது வாசகர்களுக்கு இலவசமாகவே வழங்கி வருவது தனி சிறப்பு.
தமிழகம் மட்டுமல்லாது தமிழ் பேசும் குடும்பங்கள் உள்ள தேசத்தின் பல பகுதிகளிலும், விஜயபாரதம் வார இதழ் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிநடை போடுகிறது. விஜயபாரதத்தின் இந்த சீரிய பணிக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் வாசகர்கள். ஆதரவாளர்கள், விளம்பரதாரர்கள் அனைவரின் ஆசியுடன் எதிர்வரும் இரு ஆண்டுகளில் தனது 5௦வது ஆண்டை கொண்டாட உள்ளது.
தமிழக இதழியல் துறையில் ஹிந்துத்துவ சிந்தனை கொண்ட நபர்களை உருவாக்கும் முயற்சியாக விஜயபாரதம் தேசிய வார இதழ் தமிழ்நாடு முழுவதும் இருந்து, பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 இளைஞர்களுக்கு இதழியல் குறித்த ஒருவார கால பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. முக்கிய பத்திரிகைகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த செய்தி சேகரிப்பாளர்கள், உதவியாசிரியர்கள், கார்ட்டுனிஸ்ட் உள்ளிட்ட பத்திரிகையாளர்களை அழைத்து வந்து அவர்கள் மூலம் பயிற்சியாளர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இத்தகைய வகுப்புகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்தப்படுகின்றன. இதில் பயிற்சி பெற்ற பல நபர்கள் தற்போது தமிழக முன்னணி ஊடகங்களில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
சென்னை மேற்கு மாம்பலம் ஜெயகோபால் கரோடியா பள்ளியிலும், அண்ணாநகர் ஜெயகோபால் கரோடியா விவேகானந்தா பள்ளியிலும், சேத்துபட்டு மகரிஷி வித்யாமந்தரிலும் இத்தகைய பயிற்சிகள் நடைபெற்றன. இதழியல் பணியில் ஊரக இளைஞர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தி, இதழியல் வகுப்பு நடத்தி, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, ஊக்குவித்து விஜயபாரதம் ஒரு புதுமை படைத்தது. இன்று எல்லா தமிழ் சேனல்களும், பிரபல தமிழ் நாளிதழ்களும் அத்தகைய இளைஞர்களை இருகரம் நீட்டி வரவேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்:  சேக்கிழான்