உலகையே திரும்பிப் பார்க்க வைத்த செஸ் சாம்பியன்

தன்னுடைய முயற்சி மற்றும் திறமையால், சதுரங்க விளையாட்டில் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் பிரக்ஞானந்தா. இவருடைய தந்தையார் ரமேஷ் பாபு, தாயார் நாகலட்சுமி. பிரக்ஞானந்தாவிற்கு வைஷாலி என்கிற மூத்த சகோதரி உள்ளார். இவரும் ஒரு சதுரங்க மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற முதல் சகோதர – சகோதரி ஆவர். வைஷாலி 2023 ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது பெற்றுள்ளார்.
பிரக்யானந்தா தனது 12 வது வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆனவர். நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் பாரதியர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை இருமுறை வீழ்த்தி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். இந்த மாபெரும் வரலாற்று வெற்றியின் மூலம் அவருக்கு 70.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் பின்னணியில் தாய் நாகலட்சுமி அம்மாவின் உத்வேகமூட்டும் வார்த்தைகள் முக்கியப் பங்கு வகித்தன. பிரக்ஞானந்தா தானே பகிர்ந்துகொண்டபடி, போட்டித் தொடரின் இரண்டாவது பாதியில் (ஜூன் மாதம் தொடங்கியபோது) அவரது அம்மா அவருக்கு அழைப்பு விடுத்து, “இது புது மாதம், நீ நல்லா விளையாடுவாய்” என்று சொன்னார். அவர் அதை “அம்மா எப்போதும் சொல்வது போலத்தான்” என்று எடுத்துக்கொண்டாலும், அதன் பிறகு அவர் நான்கு ஆட்டங்கள் தொடர்ந்து வென்று வரலாறு படைத்தார். “அம்மா ஏதோ தெரிஞ்சு வைத்திருக்கிறார்” என்று புன்னகையுடன் பிரக்ஞானந்தா கூறினார். தோல்வி அடைந்த போது, அவரது தாயார் சொன்ன மந்திரச்சொல், பிரக்ஞானந்தாவிற்கு மிகவும் உத்வேகம் கொடுத்தது.
2023 செஸ் உலகக் கோப்பையில் இரண்டாவது இடத்தை பிடித்தது, 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்றது, 2025ல் FIDE சர்க்யூட் தொடரை வென்றது, மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர்களில் ஒருவர் என பல சாதனைகளை புரிந்துள்ளார்.
நார்வே செஸ் தொடரில் சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்வர் விஜய் நேரில் சந்தித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ 50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். பிரக்ஞானந்தாவுடன் விஜய் செஸ் விளையாடினார், அதில் பிரக்ஞானந்தாவே வெற்றி பெற்றார்
பிரக்ஞானந்தாவின் பயணம் ஒரு நடுத்தரத் குடும்பத்தின் தியாகம், உழைப்பு மற்றும் தாயின் அசைக்க முடியாத ஆதரவுக்கு சான்று. அவரது அடுத்த இலக்கு, உலக சாம்பியன் பட்டம் என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார். சதுரங்க விளையாட்டில் தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் பிரக்யானந்தா, மேலும் பல சாதனைகள் படைக்க நாமும் வாழ்த்துவோம்!

கட்டுரையாளர்: நூலகர்,
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம், தமிழ்நாடு