சப் – இன்ஸ்பெக்டர் ஆக வேண்டியவர் சங்கப் பிரச்சாரக் ஆக மாறினார்

ஆர்.எஸ்.எஸ் சாமானியர்களையும், அசாதாரணமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் சுடலையாண்டி அவர்களைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

 

சண்முகவேல் தாஸ் – சீதையம்மாள் தம்பதியினருக்கு மகனாக, 1959 ஆம் ஆண்டு, மே மாதம் 15 ஆம் தேதி பத்தமடையில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார், சுடலையாண்டி அவர்கள். உடன் பிறந்த சகோதரர்கள் இருவர், சகோதரிகள் மூவர்.
பதினோராம் வகுப்பு வரை, பத்தமடையில் உள்ள இராம சேஷய்யர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அதன் பிறகு பி.யூ.சி மற்றும் பி.காம் படிப்பை நெல்லை இந்து கல்லூரியில் படித்தார். அதனைத் தொடர்ந்து அஞ்சல் வழியில் எம்.பி.ஏ படிப்பை அழகப்பா பல்கலைக்கழகத்திலும், எம்.எஸ்.சி (யோகா) படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், சட்டப் படிப்பை திருப்பதியில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியிலும் படித்துத் தேர்ச்சிப் பெற்றார்.
1969ல், பத்தமடை சுந்தரம் ஜி மூலமாக சுடலையாண்டி ஜிக்கு சங்க அறிமுகம் கிடைத்தது. தனது 10 வயதிலேயே பாலர் ஷாகாவிற்கு செல்லத் தொடங்கினார். எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நேரத்தில், சங்க அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, சுவற்றில் “துடிக்கும் வீரா தோள் தட்டு, சர்வாதிகாரத்திற்கு பாடை கட்டு” போன்ற வசனங்கள் எழுதியும், நெல்லையைச் சுற்றி உள்ள திரையரங்குகளில் படம் பார்த்து வெளியே வருபவர்களிடம், எமர்ஜென்சிக்கு எதிரான அடக்குமுறைகளை மக்கள் அனைவரும் அறியும் வகையில், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கையேடுகளை விநியோகித்து தைரியமாக செயலாற்றினார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற எமர்ஜென்சிக்கு எதிரான சத்தியாகிரகப் போராட்டத்தில் டவுன் வித்யாசங்கர் ஜி, பாலு ஜி, சிங்கப்பா ஜி, பத்தமடை சுவாமிநாதன் ஜி ஆகியோருடன் சேர்ந்து அனைவரையும் ஒருங்கிணைத்து, போராட்டத்தில் பலரையும் கலந்து கொள்ள செய்தார்.
எமர்ஜென்சி முடிந்த பிறகு, பாஸ்கர்ராவ் ஜி திருநெல்வேலி ஜில்லா பிரச்சாரக்காக வந்தார். அவரது வழிகாட்டுதலில், கல்லூரியில் பி.காம் பயின்று கொண்டு இருக்கும் போதே தொடர்ந்து மூன்றாண்டுகள், ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தென்காசி, செங்கோட்டை பகுதிகளுக்கு விஸ்தாரக்காக சென்று வந்தார்.
சிறு வயதிலிருந்தே காவல்துறையில் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்ற லட்சியம் சுடலையாண்டி ஜிக்கு இருந்தது. அந்த ஆசையை நிறைவு செய்ய, பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போதே என்.சி.சி.யில் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சிகள் பெற்றார். என்.சி.சி.யில் “பி” மற்றும் “சி” சான்றிதழ் பெற்றதுடன், மலையேற்றம் பயிற்சி போன்ற பல கடினமான பயிற்சிகள் பெற்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டார்.
1980ல் பட்டப்படிப்பு முடித்ததும், தான் மிகவும் விரும்பிய சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு தேர்வானார். அந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருடன் பகிர்ந்து, பயிற்சிக்கு செல்ல தயாரானார். பாஸ்கர்ராவ் ஜியிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்ற எண்ணத்தில், அவரிடம் தான் தேர்வு செய்யப்பட்ட செய்தியை சுடலையாண்டி ஜி கூற, பாஸ்கரராவ் ஜி சங்கப் பிரச்சாரக்காக வரவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து, சங்கப்பணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். அதனால் மனம் மாறிய சுடலையாண்டி ஜி, தான் மிகவும் ஆசைப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு செல்லாமல், சங்கப் பிரச்சாரக்காக வந்தார்.
தொடக்கத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பிரச்சாரக்காக பொறுப்பு வகித்தார். பின்னர் தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூர், கோவில்பட்டி தாலுகா பிரச்சாரக்கானார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி ஜில்லா பிரச்சாரக் பொறுப்பில் இருந்தார். அப்போது ஹிந்து சமுதாயத்தை சேர்ந்த 63 சமுதாய தலைவர்களை நேரடியாக சந்தித்து, விஜயதசமி அன்று அனைத்து தசரா சப்பரங்களும் ஒருசேர அணிவகுத்து, தூத்துக்குடி நகரில் வரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, ஹிந்து சமுதாய ஒற்றுமை ஏற்பட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். அந்த பிரம்மாண்டமான சப்பரப் பேரணி நிகழ்ச்சியில், சங்கத்தின் மூத்த அகிலபாரத பொறுப்பாளராக இருந்த சூரிஜியின் சிறப்புரை இருந்தது. இந்த நிகழ்ச்சி, ஹிந்து சமுதாய ஒற்றுமை மேம்பட முக்கியக் காரணமாக அமைந்தது.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் கோபம் கொண்டு ஆத்தூர் சோமசுந்தரி அம்மன் ஷாகாவை தாக்கினர். அதில் சுடலையாண்டி ஜி, சுகுமார் ஜி, ராகவன் ஜி, சுடலைமணி ஜி போன்றவர்கள் பாதிக்கப்பட்டனர். எனினும் திரும்ப அவர்களைத் தாக்கி, ஷாகா நடத்த இடையூறு ஏற்படுத்தியவர்களை, அடித்து ஓட விட்டது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என நம்மிடம் தெரிவித்தார், சுடலையாண்டி ஜி.
பத்து வருடங்கள் பிரச்சாரக்காக இருந்த பின்னர், குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டிற்கு திரும்பி, சென்னையில் ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் காசாளராக வேலை செய்து கொண்டே தம்பி மற்றும் தங்கைக்கு திருமணம் செய்து வைத்தார்.
சென்னையில் பணியாற்றிய போது, பாஹ் கார்யவாஹ், சென்னை மாநகர ஷாரீரிக் பிரமுக் என பல சங்கப் பொறுப்புகளில் இருந்து உள்ளார். தற்போது வழக்கறிஞராகவும், அகிலபாரத பசு பாதுகாப்பு அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளராகவும் செயலாற்றும் இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் பகுதியில் ஸ்ரீ கோகுலம் கோ சேவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
1989 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ராமலக்ஷ்மி அம்மாளை திருமணம் செய்த சுடலையாண்டி ஜிக்கு சிந்து, பிரம்மேஸ்வரி என்ற இரண்டு மகளும், சண்முகராஜேஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் சிந்து அமெரிக்காவில் யோகா ஆராய்ச்சியாளராகவும், மகன் பிரபல தனியார் நிறுவனத்தில் உயர் பொறுப்பிலும், இளைய மகள் பிரம்மேஸ்வரி தொலைக்காட்சி செய்தியாளராகவும் பணியாற்று கின்றனர்.
1980ல், முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமும், 1981ல், இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமும், 1982ல், மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமும் முடித்துள்ளார், சுடலையாண்டி ஜி.
தான் மிகவும் விரும்பிய சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட போதும், பாஸ்கர்ராவ் ஜியின் அழைப்பால், தனது
ஆசையைத் துறந்து, சங்கப் பிரச்சாரக்காகி, தற்போது கார்யகர்த்தராக சங்கப்பணி செய்து வரும் சுடலையாண்டி ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக இருந்து வருகிறார்.

கட்டுரையாளர் : அ. ஓம்பிரகாஷ்