சட்ட விரோத வர்த்தகம் மற்றும் கடத்தல்களை கட்டுப்படுத்த, கடத்தலுக்கு மூளையாக செயல்படுபவர்களை கண்டுபிடிக்க, மாநில அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு கட்டாயம் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துஉள்ளார்.
வருவாய் புலனாய்வு இயக்குனரகம் ஏற்பாடு செய்திருந்த, ‘அமலாக்க நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு’ என்பது குறித்த உலகளாவிய மாநாட்டில் பேசிய அவர், மேலும் கூறியதாவது: சட்ட விரோத வர்த்தகம் மற்றும் கடத்தல்களை கட்டுப்படுத்த, சுங்க அதிகாரிகள், தங்களுக்குள் தகவல்களை பகிர்ந்து கொள்ளவேண்டும். மேலும், பகிர்ந்து கொண்ட தகவல்கள், நடவடிக்கைகக்குரியவையா என்பதை உறுதிப்படுத்துவதற்குரிய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். கடந்த, 50 – 60 ஆண்டுகளாக, கடத்தல் மற்றும் சட்ட விரோதமாக வர்த்தகம் செய்யப்படும் பொருட்களில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் சுங்க அதிகாரிகள் குழப்பமடைய தேவையில்லை. இதில், விலையுயர்ந்த உலோகங்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. அத்துடன் போதைப் பொருட்கள், வனம் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் சார்ந்தவையும் இதில் அடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.