ஆர்.எஸ்.எஸ் சாமானியர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த ஆறுமுகம் அவர்களைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
முக்காணி ஆறுமுகம் (எ) தூத்துக்குடி ஆறுமுகம் ஜி என்று தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்ட ஸ்ரீ ஆறுமுகம் வன்னிய பெருமாள் அவர்கள் பிப்ரவரி மாதம் 5 அன்று முக்காணியில் பிறந்தார். அவருடைய தந்தையார் வன்னிய பெருமாள், குலசேகரன் பட்டிணத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இலங்கையில் வியாபாரம் செய்துவிட்டு, 1964ல் தாயகம் திரும்பி வந்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முக்காணியில் வாசம் செய்தார்கள். அவருடைய தாயார் கிருஷ்ணம்மாள். ஆறுமுகம் ஜியுடன் பிறந்தவர்கள் 2 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி.
எமர்ஜென்சி முடிந்தவுடன் துக்ளக் பத்திரிகையில் வந்த ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக் சூரிஜியின் பேட்டி பிரசுரமாகி இருந்தது. அதன்மூலம் சங்கத்தைப் பற்றி அறிந்து கொண்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை சங்க அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டார், ஆறுமுகம் ஜி.
அதன் பின்னர் திருநெல்வேலி ஜில்லா சங்கப் பிரச்சாரக்காக இருந்த பாஸ்கர்ராவ் ஜி மற்றும் ஜில்லா செயலாளர் பத்தமடை சுந்தரம் ஜி ஆகியோர் ஆறுமுகம் ஜியை தொடர்புக் கொண்டு, ஷாகாவிற்கு அழைத்தனர். இவ்வாறு ஆறுமுகம் ஜிக்கு சங்க அறிமுகம் கிடைத்தது.
1982 பிப்ரவரி மாதம் 27 அன்று அன்று, ஆர்.எஸ்.எஸ் திருநெல்வேலி ஜில்லா அணிவகுப்பு ஊர்வலம் (பதசஞ்சலன்) முக்காணியில் நடைபெற்றது. இதில் 120 ஸ்வயம்சேவகர்கள் பூரண கணவேஷூடன் கலந்து கொண்டனர். பதசஞ்சலன் நிறைவு பெற்ற பின்பு, பொது நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சூரிஜி பங்கேற்று தமிழில் உரையாற்றினார். இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முக்காணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர்.
சூரி ஜி பேசும்போது, “சங்கஸ்தானில் முதலில் டாக்டர் ஜி தண்ணி போட்டார். பின் அவரைப் பார்த்து எல்லா ஸ்வயம்சேவகர்களும் தண்ணீர் போட்டார்கள். சங்கஸ்தானில் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்துவது பற்றி குறிப்பிட்டார். அப்போது எல்லோரும் சிரித்து விட்டனர். அவரும் பேசி முடித்து விழா நிறைவு பெற்றது. சூரி ஜி, ஆறுமுகம் ஜியிடம் என்னப்பா உங்கள் ஊர்காரர்கள் எல்லாரும் சிரித்தார்களே என்ன? என்று கேட்டார்.
அதற்கு ஆறுமுகம் ஜி, இங்கு தண்ணி போட்டார் என்றால், ‘சாராயம் குடிப்பது’ என்று அர்த்தம், தண்ணீர் தெளித்தார் என்று சொல்ல வேண்டும் என்று கூறினார். அதன் பின்பு சூரிஜி, ஆறுமுகம் ஜியை எப்போது பார்த்தாலும் அவரிடம் உங்கள் ஊர்காரர் நல்ல தண்ணி போடுறாரா? என்று கேட்டு சிரிப்பார், எல்லோரும் இதனைக் கேட்டு சிரிப்போம்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் விஸ்தாரக்காக சங்கப்பணி செய்தார், ஆறுமுகம் ஜி. 1982 முதல் 1985 வரை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தனது கல்லூரி கல்வியை படித்தார். அப்போது ஜில்லா பொறுப்பில் இருந்து ஜில்லா முழுவதும் முழுநேர விஸ்தாரக்காக இருந்து, மாவட்டம் முழுவதும் ஷாகாக்கள் தொடங்கி பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ௫௦க்கும் மேற்பட்ட ஷாகாக்கள் இருந்தன. கல்லூரி பயிலும் போது நமது சங்கத்தின் மாணவ அமைப்பான ஏ.பி.வி.பி அமைப்பைத் தொடங்கினார்.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி, காமராஜ் கல்லூரி, ஏ.பி.சி மகாலட்சுமி கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஏ.பி.வி.பி நிகழ்ச்சிகளை நடத்தினார். ஏ.பி.வி.பி நகர செயலாளராக பணியாற்றினார். தற்போதைய அகில பாரத பொதுச்செயலாளரான தத்தாத்ரேய ஹொஸபாளே, அப்போது தூத்துக்குடி கல்லூரிகளில் உரையாற்றி இருக்கிறார். அகில பாரத அமைப்புச் செயலாளர் கோவிந்தாச்சாரியா ஜி அவர்களை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து, பல ஏ.பி.வி.பி நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார், ஆறுமுகம் ஜி.
1985ல், கல்லூரி படிப்பு முடிந்தவுடன் பிரச்சாரக்காக ராமநாதபுரம் ஜில்லாவில் ராமேஸ்வரத்தை தலைமை இடமாகக் கொண்டு, ஜில்லா முழுவதும் பணி செய்தார். 7 ஆண்டுகள் விஸ்தாரக்காவும், 3 ஆண்டுகள் பிரச்சாரக்காகவும் பணியாற்றி இருக்கிறார். பின்பு 1989ல் டாக்டர் ஜி நூற்றாண்டு விழா நடைபெற்ற சமயத்தில், பா.ஜ.க வளர்ச்சிப் பணிக்கு மாவட்ட அமைப்பாளராக அனுப்பப்பட்டார்.
1995 வரை மாவட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டமாக மாற்ற, 25% பஞ்சாயத்துகளில் பா.ஜ.க கிளைகளை அமைத்து, பா.ஜ.க.க்கு அடித்தளமிட்டார். பின்பு சேவாபாரதியின் கோட்டப் பொருளாளராக இரண்டு ஆண்டுகள் பணி செய்தார். டாக்டர் ஜி நூற்றாண்டு விழா நேரத்தில், சேவா காரியம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், முக்காணியில் “கேசவர் படிப்பகம்” உருவாக்கி, பின்பு அது முழுநேர நூலகமாக செயல்பட்டது.
1994ம் ஆண்டு “நிவேதிதா சேவா டிரஸ்ட்” என்ற அறக்கட்டளையை நிறுவி, 1995ம் ஆண்டு முதல் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி என்று பள்ளியை நிறுவி, 25 ஆண்டுகளுக்கு மேலாக நிறுவனர் மற்றும் நிர்வாகியாக இருந்து கல்விப்பணியாற்றி வருகிறார்.
2003 முதல் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பயிற்சி செய்து வருகிறார். பின்பு 2019 முதல் 2023 வரை மத்திய அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தற்போது சங்கத்தின் அமைப்பான ‘பாரதிய இதிகாச சங்கலன சமிதி’ (BISS) அமைப்பின், மாநில இணைச் செயலாளராக சங்கப்பணி ஆற்றி வருகிறார்.
2018ம் ஆண்டு நடைபெற்ற தாமிரபரணி மகா புஷ்கர விழாவில், பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் அவர்களுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியின் 24 தீர்த்த கட்டத்தில் படித்துறைகளை செப்பனிட்டு விழா சிறப்பாக நடைபெற்றதில் பெரும் பங்காற்றினார்.
தற்போது மன்னார்குடி ஜீயர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் சுவாமிகளுடன் இணைந்து பல சமுதாய பணிகளை செய்து வருகிறார். இன்றும் பிரம்மச்சாரியாகவே இருந்து சங்கப்பணி, சமுதாயப்பணி மற்றும் கல்விப் பணியாற்றும் ஆறுமுகம் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.
கட்டுரையாளர் ; அ. ஓம்பிரகாஷ்