சங்க பரிவார் ஆகிறது ‘ குடும்பம்’!

நமது பண்பாடு குடும்பத்தில் வேர் கொண்டது. பண்பாட்டை பேணிப் பாதுகாக்க, குடும்ப அமைப்பை சீர் செய்யும் முயற்சி அவசியம் எனக் கருதி, பல பத்தாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ், ‘குடும்ப பிரபோதன்’ (குடும்ப விழிப்புணர்வு) பணிபுரிந்து வருகிறது.

அண்மைக் காலமாக பொது வெளியிலும், குடும்பத்தை பற்றிய அக்கறையால் பிரபலங்கள் கருத்து சொல்லி வருகிறார்கள். ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “பெற்றோரை வைத்துக் காப்பாற்றத் தவறும் மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15 சதவீதம் பிடித்தம் செய்து, அரசு அந்த தொகையை பெற்றோர் கணக்கில் செலுத்தும்” என்று சொல்லி எச்சரிக்கிறார்.

அதன் மறுபக்கமாக, பாரத உச்சநீதிமன்ற நீதிபதி திருமதி பி.வி நாகரத்னா, “பெற்றோர் ஊழல் செய்து செல்வம் சேர்த்திருந்தால், அதை அவர்களின் பிள்ளைகளான புதல்வனோ, புதல்வியோ தொட மறுக்க வேண்டும்” என்று புது யோசனை தெரிவிக்கிறார்.

குடும்பத்தில் பணம் ஆதிக்கம் செலுத்துவது குறித்து இவ்வளவு கவலை தலைதூக்குவது காரணத்தோடு தான். “பண விஷயமாக எழும் சர்ச்சையால், கணவன் மனைவி சண்டையிட்டு பிரிவதும், விவாகரத்து செய்வதும் அதிகரிக்கிறது; நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில், 40 சதவீத குடும்பங்கள் இந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளன” என ஒரு நீதியரசர் தெரிவித்திருப்பது திடுக்கிடச் செய்யும் தகவல்.

‘வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அவ்வப்போது ஒன்றுகூடி அமர்ந்து மனம்விட்டு உரையாடும் பேச்சுவார்த்தைப் பயிற்சியெடுக்குமாறு’ சங்க பெரியவர்கள் சகஜமாக சொல்லி வருவது இதற்கு மருந்தாக அமைவது கண்கூடு. இந்தத் தீர்வுக்கு வீச்சு அதிகம்.

நல்லுறவுக்கான இந்த பயிற்சி குடும்பத்தைத் தாண்டி, உலக அளவில் கவனம் பெறுகிறது; ஒரு உதாரணம்: பாரதத் தலைநகரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு ஜனவரி 13 அன்று சென்ற சீன கம்யூனிஸ்டுக் கட்சி குழுவினருக்கும், ‘எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழகுவது சங்க மரபு’ (“we believe in dialogue”) என்று எடுத்துக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நூறு ஆண்டுகளாக சங்கம் வெற்றிகரமாக செயல்படுவது குறித்த சூட்சுமத்தை அறிய எல்லா நாடுகளுக்குமே ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. சீனா அதில் ஒன்று. “இளைஞர்களை பண்பாளர்களாக உருவாக்கும் சங்க ஷாகா செயல்முறை எங்கள் நாட்டுக்கும் தேவை” என்று சங்கத்தை ஊன்றி கவனிக்கும் பல்வேறு உலக நாடுகள் கோரி வருகின்றன. சமீப காலமாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் இவ்வாறு தெரிவிக்கிறார். சங்கத்தின் புண்ணியத்தில் ஒரே குடும்பம் ஆகி வருகிறதா உலகம்?