ஒருமுறை யுதிஷ்டிரர், பகவான் கண்ணனிடம் தீயசக்திகளிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ள, நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்க, அதற்கு ரக்ஷாபந்தன் விரதத்தை அனுஷ்டிக்குமாறு கூறினார்.
நமது நாட்டில் எந்த ஒரு நல்ல காரியம் நடந்தாலும், அது இறுதி வரை தொய்வின்றி நடக்க, பண்டிதர் கர்த்தாவின் கையில் முதலில் ரக்ஷை கட்டுவார். கோயில் நிகழ்ச்சிகளுக்கும், இது பொருந்தும். நமது பாரம்பரியம், அனைத்து ஜீவராசிகளும் மகிழ்ச்சியுடன் வாழட்டும், துன்பங்கள் அவர்களை அணுகக்கூடாது என்பதுதான். பாரத நாட்டில் பிறந்த நமக்கு அனைவரும் உடன் பிறந்தவர்கள். நமது நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்கு அசம்பாவிதம் நடந்தாலும் நாம் மனது உடைந்து போகின்றோம்.
‘’வசுதைவ குடும்பம்’’ என்கிறோம் – குடும்பத்தினரையே குடும்பமாகப் பார்க்க முடியாத நாம் சமூகத்தை எப்படி அன்புடன் தோழமையாக பார்க்கப் போகிறோம். இன்று நேர்மறையான எண்ணங்கள் சமூகத்தில் தளர்ந்து விட்டது. எல்லோரும் ஒற்றுமையுடன் அன்புடன், சகோதர மனப்பான்மையுடன் இருந்தால் தானே நேர்மறை எண்ணங்கள் வளரும். பிணைப்பு உள்ள இடத்தில் தான் அன்பு தோன்றும். அங்கு தான் அமைதி ஏற்படும்.
சங்கம் தனது நூற்றாண்டு விழா நேரத்தில், (குடும்ப ப்ரபோதன்) குடும்ப ஏற்பாட்டை முக்கிய விஷயமாக எடுத்துக் கொண்டது. அன்பு, ஒற்றுமை பண்பு கொண்டவர்கள் தான் எடுத்துக்காட்டான குடும்பத்தை ஏற்படுத்த முடியும். குடும்ப அமைப்பு முன்பு போல் சகஜமாக இருக்க வேண்டுமானால், நாம் நமது கலாச்சாரத்தை பின்பற்றி, அதை அனுசரித்து வாழ வேண்டும். நல்ல பண்புள்ள, கபடமில்லாத மனிதர் நமது வீட்டிற்கு வந்தால், நமக்கு பேரானந்தம் உண்டாகும். அதனால், நாமும் அவ்வாறு இருக்க முயற்சி செய்ய வேண்டும். பழைய வரலாறுகள், சம்பவங்களை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். ரக்ஷாபந்தன் விழா மூலம் நல்ல பண்புகளை நமதாக்கிக் கொள்ள உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆரம்ப காலக்கட்டத்தில், வட பாரதத்தில் மட்டும் குறிப்பாக ராஜஸ்தானில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த ரக்ஷாபந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இஸ்லாமியர்களின் ஆட்சி நடக்கும்போது, நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இதில் வட மாநிலத்தவர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது பெண்கள் தங்கள் பாதுகாப்பு கருதி ஒரு ஆடவனை சகோதரனாக ஏற்றுக்கொண்டு, அவரது கையில் ராக்கி என்ற ரக்ஷையை கட்டுவாள், அன்று முதல் கடைசி மூச்சு வரை, அவன் தான் அவளது பாதுகாவலன். இது ஒரு புனித, தெய்வீக பந்தம். சகோதர – சகோதரித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சி.
இந்தப் பண்டிகை வட மாநிலத்தவர்கள் வசிக்கும் எல்லா வீடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. தன்னுடன் பிறந்த சகோதரன், எல்லா வளங்களும் பெற்று, ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்தி ராக்கி கட்டி, இனிப்புகள் வழங்கி அவரிடமிருந்து பரிசுகள் பெற்றுக் கொள்வார்கள் ரக்ஷாபந்தனுக்கு சரித்திரப்பூர்வமான ஆதாரமும் உள்ளது. போரஸ் (புருஷோத்தமன்) என்ற வீரன், அரசன் அலெக்ஸாண்டருடன் சண்டையிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவனால் அலெக்ஸாண்டரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் மனைவி புருஷோத்தமனின் கையில் ராக்கி கட்டினாள், அதன் மூலம் அவனுக்கு சகோதரி ஆனால். அதனால் சண்டை போடாமல் படையை திருப்பி சென்றான்.
சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பேசும் பொழுது அனைவரையும் “சகோதர-சகோதரிகளே’’ என்று தான் குரல் கொடுத்திருக்கிறார். அந்த ஒலிக்கு அத்தனை மகத்துவம், சக்தி இருக்கின்றது. இந்த நல்ல நாளில், நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைவுபடுத்திக் கொள்வோம். இன்று உலகில் பாரதியர்கள் வசிக்கும் பகுதிகளில், இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. நமது பண்டிகைகள் அனைத்தும் முந்தைய கலாச்சாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்தும். இந்த ரக்ஷாபந்தன் சகோதரத்துவத்தை உணர்த்தும் பண்டிகை. அன்பு, ஒற்றுமையை பரவலாக்க உண்டான பண்டிகை. அன்பு இருக்கும் இடத்தில் பிணைப்பு இருக்கும், அங்கு அமைதியும் நிச்சயம் இருக்கும். இன்று உலகளாவிய பிரச்சினைக்கு இது மிகப்பெரிய தீர்வு.
தவறான பாரத வரைபடத்தை மாற்றக்கோரிய வீராங்கனை
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என 39 பதக்கங்களை கைப்பற்றி 4வது இடம் பிடித்து பாரதம் சாதனை படைத்தது. இதில் குத்துச்சண்டை போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பாரத நட்சத்திரங்கள் 7 தங்கம், 3 வெள்ளி என 10 பதக்கங்களைக் கைப்பற்றினர்.
அந்தவகையில், இதனை கொண்டாடும் விதமாக, பாரத குத்துச்சண்டை அணியினர், கிளாஸ்கோவில் உள்ள பிரபலமான பாரத உணவகத்திற்கு சென்றனர். உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரத வரைபடத்தில் வடகிழக்கு மாநிலங்கள் விடுபட்டிருந்தன. இதனை கண்ட லவ்லினா, உணவக நிர்வாகத்திடம் அவர்களது தவறை சுட்டிக்காட்டி, தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். உணவக நிர்வாகம், அதனை சரி செய்வதாகக் கூறி மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் பதக்கம் வென்ற பாரத நட்சத்திரங்கள், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பிரதமர் மோடி, ‘என்ன நடந்தது லவ்லினா? அந்த உணவகக்காரருடன் சண்டையிட்டீர்கள்’ எனக் கேட்டார்.
அதற்கு லவ்லினா, ‘மகிழ்ச்சியான தருணத்தில், உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த நமது பாரத வரைபடத்தின் தவறை கண்டேன். அது மிகவும் வேதனை அளித்தது. உடனே உணவக நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டினேன். அதனை திருத்திக் கொள்வதாக தெரிவித்தனர்’, என்றார்.
அப்போது லவ்லினாவை பாரட்டிய மோடி, ”வரைபடத்தை திருத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனை அவர்களிடம் சுட்டிக்காட்டியதை பாராட்டுகிறேன். அந்த வீடியோ சாதாரணமானதல்ல. அது, மக்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும்,” எனக் கூறினார்.
கட்டுரையாளர் : காந்தாமணி நாரநாயணன்