வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. திபு சந்திர தாஸ் என்ற ஹிந்து இளைஞரை வன்முறை கும்பல் அடித்துக் கொன்றது. அவரது உடலை மரத்தில் கட்டிவைத்தும், நடுரோட்டில் போட்டும் எரித்தது. ஹிந்துக்களின் வீடுகளுக்கு தீ வைத்தது.
மத்திய அரசு, வங்கதேச தூதர் ரியாஸ் ஹமீதுல்லாவை வரவழைத்து கண்டனம் தெரிவித்தது. வங்கதேச வன்முறைகளை கண்டித்து பாரதத்திலும் தில்லி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, அஸ்ஸாம் என பரவலாக போராட்டங்கள் பல நடந்தன.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் குறி வைத்து தாக்கப்படுவதை அடுத்து அந்த நாட்டுக்கு பாரத அரசு அரிசி ஏற்றுமதி நிறுத்த வேண்டும் என்று தேசபக்தி உள்ள பாரத அரிசி வர்த்தகர்கள் கோரியுள்ளார்கள். இது தவிர அந்த நாட்டிற்கு பாரதம் அளித்து வரும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளதாக ‘ஆர்கனைசர்’ செய்தி தெரிவிக்கிறது.
அந்நாட்டில் ஹிந்து இளைஞரின் கொடூரக் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்பி., சசி தரூர், “வருத்தம் தெரிவிக்கும் அறிக்கைகள் மட்டும் போதாது. வன்முறையைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை தேவை”’ என்று வலியுறுத்தினார்.
“வங்கதேசத்தில், ஒரு தலித் இளைஞரை உயிரோடு எரித்துவிட்டார்கள். நீங்கள் எல்லாரும் காஸா பகுதியில் ஏதாவது நடந்தால் அதற்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறீர்களே! ஆனால், உங்கள் வாயிலிருந்து ஒரு சொல்கூட வரவில்லை.” என விமர்சனம் செய்தார் உ.பி. முதல்வர் யோகி.
‘ரைசிங் அஸ்ஸாம்’ மாநாட்டில் பங்கேற்ற அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, “வங்கதேச அமைதியின்மை, நம் வடகிழக்கு மாநிலங்களை கடுமையாக பாதிக்கும். (1971ல்) வங்கதேசம் சுதந்திரம் பெற்றபோது, அஸ்ஸாம் மக்கள் தொகையில் குடியேறிகள் (முஸ்லிம்கள்) 15% மட்டுமே இருந்தனர். தற்போது அது 40% என அதிகரித்துள்ளது” என்றார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது, “ஹிந்து இளைஞர் கொல்லப்பட்டதை கண்டிக்கிறோம். குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இடைக்கால அரசின் ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான 2,900 க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.
வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்வதை அடுத்து, முதல்முறையாக நியூயார்க் டைம்ஸ் ‘ திபு சந்திர தாஸ் உயிருடன் கொளுத்தப்பட்ட’ (யாரால்!) விஷயத்தை செய்தியாக வெளியிட்டது.
வரும் 2026 பிப்ரவரியில் வங்கதேசத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டெமாக்ரட் கட்சி எம்பிக்கள், ‘அரசியல் கட்சிகளைப் புறக்கணித்து தேர்தல் நடத்துவது தவறு’ என்று யூனுஸை கடிந்து கொண்டனர்.
இதற்கிடையில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் கையில் சிக்கி, மீண்டும் பாகிஸ்தானாக மாறி வருகிறது வங்கதேசம். இன்குலாப் மஞ்ச் மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, அடையாளம் தெரியாத நபரால் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார். சுட்டவர் பைசல் கரீம் மசூத் என அடையாளம் காணப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது. ஆனால் பாரத உளவு அமைப்புதான் காரணம் என செய்தி பரப்பி, வங்கதேசம் முழுவதும் கலவரம் வெடித்தது.
இந்நிலையில் வங்கதேச தேர்தலில் வெற்றிபெற சதி செய்வதாக முகமது யூனுஸ் மீது குற்றம் சாட்டிய ஹாதியின் சகோதரர், ஹாதியின் கொலைக்கு யூனுஸே காரணம் என்றார். “முகமது யூனுஸ்தான் ஓஸ்மான் ஹாதியின் கொலைக்குக் காரணம். இதன் பின் நிறைய அரசியல் காரணங்கள் உள்ளன.
தற்போது ஹாதி மரணத்தை ஒரு பிரச்சினையாகப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறார் அவர்” என்று குற்றம் சாட்டினார். ஓஸ்மான் ஹாதியின் சகோதரன், “ஹாதியைக் கொன்றது (பாரதம் இல்லை) யூனுஸ்தான்” என்று பேட்டி அளித்தது, யூனுஸுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாரதத்துக்கு எதிராக மட்டுமின்றி, யூனுஸுக்கு எதிராகவும் பேசி வந்தவர் ஹாதி.
‘யூனுஸுக்கு தான் பிரதமராக வேண்டும் என்ற ஆசை; எனவே ஷேக் ஹசீனா கட்சியை முடக்கினார். ஹசீனா பாரதத்தில் தஞ்சம் புகுந்துவிட்டார். அடுத்த தலைவி பேகம் கலீதா ஜியா. அவர் இப்போது லண்டனில் சிகிச்சையில் இருக்கிறார். எனவே இதுதான் பிரதமராக சந்தர்ப்பம் என்று கணக்கிட்டு, யூனுஸ் வேலைகள் செய்கிறார்’ என அரசியல் கட்சியினர் வங்கதேச சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஷேக் ஹசீனா, கலிதா ஜியா தவிர தனக்கு எதிரிகளாக இருக்கும் ஹாதி போன்ற சிறிய தலைவர்களையும் யூனுஸ் தரப்பு கொன்று வருவதாக வங்கதேசத்தில் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவும் இப்போது வங்கதேசத்தை விட்டு விலகுவது போல் செய்திகள் உலா வருகின்றன.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, “வங்கதேச நிறுவனர் (ஷேக் முஜிபுர் ரஹ்மான்) நாட்டை, மதசார்பற்ற நாடாக இருக்க கனவு கண்டார். இந்தக் கனவு நிறைவேற, அனைத்துத் தரப்பு மக்களும் அமைதியாக வாழ்வதை எங்கள் அவாமி லீக் கட்சி உறுதி செய்தது. இன்று வங்கதேசத்தில் சிறுபான்மையின மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்” என்கிறார்.
ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் வழக்குகள் தொடரப்பட்டதால் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்தார். தற்போது வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வங்கதேசம் திரும்பியுள்ளார். அவரை மக்கள் திரண்டு வரவேற்றுள்ளனர். இவர் பிப்ரவரியில் நடக்க உள்ள தேர்தலில் போட்டியிடுவாராம்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்
– செங்கோட்டை ஸ்ரீராம்