உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ‘சார் தாம்’ கோயில்களில் ஒன்றான கேதார்நாத் கோயிலுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் திறக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு அசாதாரண கூட்டம் வந்துள்ளது. எனவே, அதிகமாக உள்ள கூட்டத்தை கட்டுப்படுத்த இந்தோ திபெத்திய எல்லைப் படையினர் (ஐ.டி.பி.பி) நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் (என்.டி.ஆர்.எப்) கோயில்களில் கூட்டத்தைக் கையாள்வதில் ஐ.டி.பி.பிக்கு உதவி செய்யும். தற்போது, தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். யாத்ரிகர்களின் நெரிசல் காரணமாக சோன்பிரயாக், உகிமத், கேதார்நாத் போன்ற இடங்கள் நிரம்பியுள்ளன. இந்த இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.டி.பி.பி குழுக்கள், யாத்திரிகர்களின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய மருத்துவக் குழுக்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளன கடந்த மே 6, 2022 அன்று கோயிலின் நுழைவாயில்கள் திறக்கப்பட்டு ஒரு வாரமான நிலையில், இதுவரை 1,30,000 க்கும் மேற்பட்ட யாத்ரிகர்கள் கேதார்நாத் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.