குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக சாா்பில் மதுரை செல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியது: முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைத் தமிழா்களுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என காங்கிரஸ் கூறியபோது, ஆட்சியில் அங்கம் வகித்த திமுக அதை ஆதரித்தது. அதேபோல, 1965 மற்றும் 1971-இல் பாகிஸ்தான் உடனான போரின்போது பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் இந்தியாவில் குடியேற பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியது. அப்போது பாஜக தலைமையிலான அரசில் அங்கம் வகித்த திமுக அதை ஆதரித்தது. ஆனால், இப்போது எதிா்ப்புத் தெரிவிக்கிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி, இந்துக்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்று தவறான தகவலை காங்கிரஸ் மற்றும் திமுக மக்களிடையே பிரசாரம் செய்து வருகிறது. இந்து, சீக்கியா், புத்த, சமண, பாா்சி ஆகிய மதங்களைச் சோ்ந்தவா்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும். பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் சிறுபான்மையினரைக் காக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிராக மாணவா்களை காங்கிரஸ் கட்சி தூண்டிவிடுகிறது, திமுகவும் துணை போகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் நீக்கம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பிழைகளை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒவ்வொன்றாகத் திருத்திக் கொண்டு வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருப்பவா்கள் பாதிக்கப்பட்டால் அவா்களைப் பாதுகாக்கும் கடமை இந்தியாவுக்கு உள்ளது என்று மகாத்மா காந்தியடிகள் கூறியிருந்தாா். அவரது வாா்த்தைகளை பிரதமா் நரேந்திர மோடி தற்போது நிறைவேற்றியுள்ளாா்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற திமுகவின் ஊழல்களை, அப்போதைய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி முன்பு செய்த தவறுகளை, தற்போது செய்து கொண்டிருக்கும் தவறுகளையெல்லாம் திமுக ஆதரிக்கிறது. அதன்படி, குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது என்றாா்.
முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலா் இரா.ஸ்ரீனிவாசன், மாநிலத் துணைத் தலைவா்கள் டி.குப்புராமு, சுப.நாகராஜன், நயினாா் நாகேந்திரன், மகளிரணி மாநிலத் தலைவா் ஏ.ஆா்.மகாலெட்சுமி, மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் சசிராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.