மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதையடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக மாறியது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மாணவர்கள் அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதல் மாநிலமாக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உச்ச நீதிமன்றத்திலும் கேரள அரசு வழக்கு தொடர்ந்தது. இதேபோல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், தனிநபர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் கடந்த மாதம் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கவும் மறுக்கப்பட்டது.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான 144 வழக்குகள் மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே அமர்வு, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது.
அனைத்து வழக்குகளையும் விசாரிக்காமல் ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பிக்கப் போவதில்லை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.