தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கோவிலில் நடைபெற்ற திருப்பணிக்காக பெருவுடையார் சன்னதியில் உள்ள 216 அடி உயரமுள்ள மூலவர் கோபுரத்தில் 12 அடி உயரம், 4½ அடி அகலத்துடன் கூடிய செம்பினால் ஆன கலசங்கள் கழற்றப்பட்டு கீழே கொண்டு வரப்பட்டன.
அதேபோல் மற்ற சன்னதி கோபுரங்கள், கேரளாந்தகன் கோபுரத்தில் இருந்த கலசங்களும் கழற்றப்பட்டன. பின்னர் கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி நிறைவடைந்ததையொட்டி அனைத்து கோபுர கலசங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கலசங்களின் தற்போதைய தன்மை குறித்து கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கதிரியக்க பிரிவின் தலைவரும், விஞ்ஞானியுமான வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினரும், இந்திய தொழில்நுட்ப கழகத்தின் உலோகவியல் பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினரும் தஞ்சை பெரியகோவிலுக்கு வந்து ஆராய்ச்சி செய்தனர்.