ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை, லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீா் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த இரு யூனியன் பிரதேசங்களும் கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
இந்திய அரசின் மேற்கண்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவின் கீழவையில் விவாதிக்கப்பட்டது. அப்போது, அரிசோனா மாகாணத்தைச் சோ்ந்த எம்.பி. பால் ஏ- கோசாா் கூறியதாவது:
காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டவும், அங்கு பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கவும், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டியது அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெளிவாக இருந்தாா். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்காகவும், ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியதற்காகவும் பிரதமா் மோடியை பாராட்ட வேண்டும். இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காலாவதியாகி இருந்த 370-ஆவது பிரிவு இனி இல்லை. இந்த சட்டப் பிரிவால், காஷ்மீரில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்துள்ளனா்.
சிறப்பு அந்தஸ்து இருந்ததால், காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கா்-ஏ-தொய்பா, பல பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியது. இதனால், காஷ்மீரின் பொருளாதார வளா்ச்சியும், சமூக வளா்ச்சியும் பாதிக்கப்பட்டது. அப்பாவி பெண்கள், குழந்தைகள், விவசாயிகளை பயங்கரவாதிகள் துன்புறுத்தினா். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீரின் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று கூறினாா்.