தமிழகத்தில் காவிரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை கொண்டு செல்லும் வகையில் காவிரி, வெள்ளாறு, வைகை, குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மழைக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனுார் தடுப்பணையில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்ட பகுதி வழியே குண்டாற்றுடன் இணைப்பதன் மூலம் விவசாயம் செழிக்கும். இதற்காக காவிரியில் இருந்து தெற்குவெள்ளாறு, வைகை, குண்டாறுகளை இணைக்க ரூ.14,400 கோடியில் 262 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் இணைப்பு திட்டத்தை அறிவித்தனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முதற்கட்ட பணிக்கு ரூ.6941 கோடி ஒதுக்கி 2021 பிப்., 14ல் விராலிமலையில் பணியை துவக்கினர். இந்த பணி மூலம் முதற்கட்டமாக கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42,170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் கட்டளை கால்வாயில் இருந்து 118.45 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் வெட்டி புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்பட உள்ளது.
இரண்டாம் கட்டமாக புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 220 ஏரிகளும், 23,245 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றில் இருந்து 109 கி.மீ., நீளத்திற்கு கால்வாய் உருவாக்கி, வைகையுடன் இணைக்கப்படும். மூன்றாம் கட்டமாக விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள், 44,547 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 34 கி.மீ., நீளத்திற்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்பட உள்ளது.
ஆறுகளை இணைப்பதன் மூலம் மழை காலங்களில் காவிரியில் வீணாகும் 6300 கன அடி நீரை திருப்பி, தென் மாவட்டங்களில் நிலத்தடி நீரினை அதிகரிக்க செய்வதோடு, குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டம் அறிவிக்கப் பட்டது. அடுத்த கட்டமாக காவிரி உப வடிநிலத்தில் உள்ள உட்கட்டமைப்புகளில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனபடுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணி ரூ.3384 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 967 கி.மீ., நீளமுள்ள 21 ஆறுகளின் மொத்த பாசன பரப்பான 4 லட்சத்து 67 ஆயிரத்து 345 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்தனர். தொடர்ந்து இத்திட்டத்தை வேகத்துடன் செயல்படுத்த அக்கறை காட்ட வேண்டும் என விவசாயிகள் சார்பில் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இத்திட்டத்திற்காக அரசு 2021– 2022 பட்ஜெட்டில் ரூ.760 கோடியும், 2022-2023 பட்ஜெட்டில் ரூ.280 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது போன்று திட்டத்தை செயல்படுத்துவதில் ஆமை வேகம் காட்டினால், காவிரி, வெள்ளாறு, வைகை, குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டம் செயல்படுத்த காலதாமதம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். சிவகங்கை இயற்கை விவசாய சங்க தலைவர் எம்.ஆபிரகாம் கூறியதாவது, காவிரி – குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
முதற்கட்ட பணி நடக்கும் மாயனுார் கதவணையில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை 118 கி.மீ., துாரத்திற்கு நில எடுப்பு முடியும் தருவாயில் இருப்பதாகவும், தலை மற்றும் கடைமடை பகுதியில் கட்டுமான பணி நடப்பதாகவும், 2 ம் கட்ட பணி, 3ம் கட்ட பணிக்கான நில மதிப்பீடு விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக காரைக்குடி நீர் வளத்துறை செயற் பொறியாளர் ஆர்.ஜோயல் சதீஷ் பதில் அளித்துள்ளார்.
தமிழக அரசு இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, வறண்ட தென் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.