இலங்கை தமிழ் அகதிகளுக்கு, இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது உட்பட, மத்திய அரசை வலியுறுத்தி, ஏராளமான கோரிக்கைகள், கவர்னர் உரையில் இடம் பெற்றிருந்தன.
தமிழக சட்டசபையில், நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவரது உரையில், மத்திய அரசை வலியுறுத்தி, ஏராளமான கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
- மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு, 563.50 கோடி ரூபாய் மதிப்பிற்கு, திட்டம் தீட்டப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை, மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும்
- மத்திய அரசிடமிருந்து, தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி குறைந்துள்ளது. மேலும், 14வது நிதிக்குழு பரிந்துரைத்த, மாநிலங்களுக்கு இடையிலான, மத்திய வரிகளின் பகிர்வு வழிமுறை, தமிழகத்திற்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திற்கு, 4,073 கோடி ரூபாய், நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை விரைவாக, மத்திய அரசு விடுவிக்க வேண்டும்
- கர்நாடக அரசு, மேகதாது அணை கட்ட தயாரித்துள்ள, விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து, உடனே திருப்பி அனுப்ப வேண்டும். தமிழக அரசின் அனுமதியின்றி, காவிரி வடிநிலப் பகுதியில், எந்த கட்டுமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல், தடுத்து நிறுத்துவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
- பெண்ணையாறு விவகாரத்திற்கு, விரைவில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். தமிழக அரசு ஒப்புதலின்றி, பெண்ணையாற்றின் வடிநிலப் பகுதிகளில், நீர்தேக்கப்பணிகள் அல்லது நீரோட்டப் பாதையை மாற்றி அமைக்கும், எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என, கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.
- முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்த, தேவையான அனுமதிகளை, கேரள அரசும், மத்திய அரசும்,விரைவாக வழங்க வேண்டும்.
- இலங்கை தமிழ் அகதி களுக்கு, இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். தமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்யும்.
- தமிழக மீனவர்களை, இலங்கை சிறைபிடிக்கும் பிரச்னையில், மத்திய அரசு தலையிட்டு, விரைவில் சுமூகத் தீர்வு காண வேண்டும்.
- மதுரை அருகில் உள்ள, காந்தி கிராம கிராமிய பல்கலையை மேம்படுத்தி, அதை ஊரக வளர்ச்சி மற்றும் காந்திய மெய்யியலுக்கான ஒப்புயர்வு கல்வி மையமாக, மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
- கோதாவரி ஆற்றிலிருந்து, குறைந்தபட்சம், 200 டி.எம்.சி., தண்ணீரையாவது, காவிரி வடிநிலத்திற்கு வழங்க வேண்டும்.
- தமிழகத்தின், சர்க்கரை தொழிற்சாலைகளின் மறுமலர்ச்சிக்கு உதவும் வகையில், மத்திய அரசு சிறப்பு நிதிச் சலுகைளை, அறிவிக்க வேண்டும்.
- பசுமை சூழல், நிதி மற்றும் தேசிய பருவநிலை மாற்றத் தழுவல் நிதியின் கீழ், 4,682 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டங்களுக்கான கருத்துருக்களை, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அனுப்பியுள்ளது. அவற்றுக்கு, மத்திய அரசு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.இவ்வாறு, கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.