இந்தவாரம், வியாழன் (அக். 17), இந்து தமிழ் திசை பத்திரிகையில் முகமது ரியாஸ் (பொறியியல் கல்லூரி பேராசிரியர்) பொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்!(https://www.hindutamil.in/news/opinion/columns/520579-the-fall-of-engineering-students.html)
என்ற தலைப்பில் நடுப்பக்க சிறப்புக் கட்டுரை எழுதியிருந்தார்.
மறுநாள் (அக். 18), டைம்ஸ் ஆப் இந்திய, சென்னை வெளியீட்டில் முதல் பக்கம், தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒருங்கிணைப்புக்கு – மேற்பார்வைக்கு புதிதாக தொழில்முறை பல்கலைகழகம் அமைக்கப்படும் என்று ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது.
முதல் கட்டுரையில், பேராசிரியர் 2007-13 காலகட்டத்தில் எவ்வாறு புற்றீசல்போல் பொறியியல் கல்லூரிகள் முளைத்தன என்றும் அவற்றில் அடிப்படை வசதிகள் இன்மை, கேள்விக்குரிய திறனுடை- தரனுடை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் போன்றவற்றால் மாணவர்களுக்கும் எதிர்காலம் பாழ் என்று விளக்கியுள்ளார்.
இரண்டாவது செய்தி சொல்லும் சேதி என்னவென்றால், அகில இந்திய கவுன்சில் ஆய்வு நடத்தியதில் தரமற்றவை என்று 90 கல்லூரிகளை மூடிவிட அரசுக்கு பரிந்துரை செய்யப்படலாம்.
இங்குதான் நாம் ஒன்றைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். 2004ல் பதவி ஏற்ற யுபிஏ மன்மோகன் தலைமையிலான அரசு காலத்தில் குறிப்பாக ப சிதம்பரம் – கபில் சிபல் கோஷ்டியினர் சகட்டு மேனிக்கு நாடெங்கும் அரசியல்வாதிகள் – நிழல் வியாபாரிகள் கூட்டணி கல்லூரிகளைத் திறக்கவைத்து – காபிடேஷன்பீஸ் என்று கொள்ளை அடிக்கவைத்து- புதிது புதிதாக நிகர்நிலை பல்கலைக்கழகம் என்றெல்லாம் தகுதியற்றவற்றையெல்லாம் கோபுரத்தில் கொலுவேற்றி என்று எல்லாவழிகளிலும் கல்வித்துறையை குட்டிச்சுவராக்கியுள்ளனர்.
வேதனை தரும் விஷயம் என்ன ?அப்பாவி பெற்றோர்களை மாணவர்களை கல்விக் கடனாளியாக்கி , நான்கு வருட படிப்பு முடித்த பின் என்ன செய்வது என்று ஒன்றும் வழி தெரியாமல் விழிபிதுங்குவது என்று எல்லாவகையிலும் தவிக்கவிட்டுள்ளனர். பசி போன்றவர்கள் கல்வி கடன் தாராளமாக அளித்து கல்வி கண் திறந்து வைத்த அவதார புருஷர்கள் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் அளித்துக்கொள்ளுகிறார்கள்.
பெருநகரை ஒட்டி கிராமங்களின் விளைநிலங்களை வளைத்துப்போட்டு, ஏரிகளை- குளங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பினார்கள். எல்லாம் அவர்களின் சொந்தப்பணமா என்ன? அரசுத்துறை வங்கிகளின் பணம் தான். 10 வருடங்கள் சென்றபின் இன்று அவற்றில் பலவற்றில் 5 -10 மாணவர்கள் கூட சேரவில்லை. வங்கிகள் கொடுத்த கடன் தொகையும் காலி.
இதுதான் இவர்கள் கல்வித் தொண்டாற்றிய லட்சணம்.